சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர் வந்தனா சிவா சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர் வந்தனா சிவா 

பூமியில் புதுமை : சுற்றுச்சூழல் ‘Rock Star’ வந்தனா சிவா

வந்தனா சிவா அவர்கள், ஆப்ரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் மரபணு பொறியியலுக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் (2003) முக்கியமானவை

மேரி தெரேசா - வத்திக்கான்

வந்தனா சிவா அவர்கள், இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் 1952ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை, வனப் பாதுகாவலராக இருந்தவர். இவரது தாய், விவசாயி மற்றும் இயற்கையை இரசிப்பவர். வந்தனா சிவா அவர்கள், படித்தது அணு இயற்பியல் என்றாலும், இயற்கை மீது தீராத காதல்கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன், தண்ணீரை மாசுபடாமல் காத்தல் போன்றவற்றுக்காக, துணிச்சலுடன் போராடி வருபவர். இந்தியாவின் மூலிகைகள் காப்புரிமை பெறுவதற்கும், பறிபோன காப்புரிமையை மீட்பதற்கும் போராடி வரும் இவர், வேதியக் கலப்பில்லாமல் பயிர் வளர்ப்பு முறைக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகிறார். லடாக் பகுதியில், பனிச் சிகரங்கள் உருகிக் கரைவது குறித்தும், சில தாவரங்களும், உயிரினங்களும் அழிந்துபோவது குறித்தும், இவைகளைக் காப்பது குறித்தும் பன்னாட்டு அளவில் பிரசாரம் செய்து வருகிறார். இது குறித்து நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார் வந்தனா சிவா. 1982ம் ஆண்டு, டேராடூனில், அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு அமைப்பை இவர் ஆரம்பித்தார். இதன் பயனாக, நாட்டு விதைகள் பாதுகாப்பு, அவற்றைப் பரிமாறிக்கொள்வது மற்றும் நியாயமான வர்த்தகம் ஆகியவற்றுக்காக, 1991ம் ஆண்டில் "நவதான்யா' என்ற தேசிய இயக்கத்தை இவர் ஆரம்பித்தார். இதில் எழுபதாயிரத்திற்கு அதிகமான இந்திய விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். நதிகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர், பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதை எதிர்த்து இவர் எழுதிய, "வாட்டர் வார்' என்ற நூல் பிரபலமானது. டேராடூனில் சுரங்கங்கள் குறித்து அறிக்கை அளிக்கும்படி வந்தனா அவர்களை மத்திய அரசு, 1981ம் ஆண்டு கேட்டது. இவர் அளித்த அறிக்கையின் பேரில் டூன் பள்ளத்தாக்கில் 1983ம் ஆண்டு சுரங்கங்களுக்கு உயர்நீதி மன்றம் தடை விதித்தது. வந்தனா அவர்களின் சேவையைப் பாராட்டி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. நொபெல் பரிசுக்கு இணையான, Right Livelihood அறிவியலாளர் விருதையும் 1993ம் ஆண்டில் இவர் பெற்றுள்ளார். இந்தியாவில் 16 மாநிலங்களில் அறுபது விதைப்பண்ணைகளைத் தொடங்கி மூவாயிரம் அரிசி வகைகளை அழியாமல் பாதுகாத்தது வந்தனா சிவா அவர்களின் சாதனை. 2003ம் ஆண்டு சூழல் நாயகன் விருதை டைம் பத்திரிகையிடமிருந்தும், 2010ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ஆற்றல் வாய்ந்த பெண்கள் வரிசையிலும் இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உலகில் மிகவும் நல்தாக்கத்தை ஏற்படுத்தும் ஏழு முக்கிய பெண்ணியவாதிகளில் வந்தனா சிவா அவர்களும் ஒருவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 January 2019, 14:26