தேடுதல்

Vatican News
காலநிலை மாற்றத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பேரணி காலநிலை மாற்றத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பேரணி 

வாரம் ஓர் அலசல் - என்னைக் காப்பாற்ற நீ என்ன செய்கிறாய்

உலகில் அதிக வெப்பநிலை நிலவிய இருபது ஆண்டுகள், கடந்த 22 ஆண்டுகளில்தான் - உலக வானிலை ஆய்வு மையம்

மேரி தெரேசா - வத்திக்கான்

ஹரியானாவைச் சேர்ந்த, 41 வயது நிரம்பிய பர்கத் சிங் என்பவர், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்துகொள்பவர்கள், எதிர்பாராத விதமாக விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் போன்றோரின் சடலங்களைத் தூக்கிவரும் உதவியை இலவசமாகச் செய்துவரும் தன்னார்வலர். இவ்விரண்டு மாநிலங்களில், எங்கு உயிரிழப்புச் சம்பவங்கள் நடந்தாலும், காவல்துறையினரும், உடனடியாக இவரைத்தான் அழைக்கிறார்கள். எங்கு உதவி என்று கூப்பிட்டாலும் உடனே இவர் சென்றுவிடுவார். கடந்த 13 வருடங்களாக, எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, ஒரு பைசாகூடப் பெறாமல், 11,802 சடலங்களை மீட்டுள்ளார். அதேவேளை, பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 1,650 பேரைக் காப்பாற்றி, அவர்கள் மறுவாழ்வு பெற காரணமாகவும் இவர் இருந்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன. தனது இச்சேவை பற்றி ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்ட பர்கத் சிங் அவர்கள்,  “கடந்த வருடம், பஞ்சாபில் மூன்று பேர் ஆழமான குளத்தில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். அவர்களை மீட்க, தனியார் நீர் மூழ்குபவர்கள் ஐந்து இலட்சம் ரூபாய் கேட்டனர். ஆனால் இலவசமாக அவர்களது உடல்களை நான் மீட்டுக்கொடுத்தேன். அன்புகூரப்பட்டவர்களின் பிரிவால் வாடும் மக்களிடம் காசு கேட்கக் கூடாது. அது எனக்குப் பிடிக்காது. அதனால், நான் செய்யும் உதவிகளுக்கு, யாரிடமும் பணம் பெறமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார். பர்கத் சிங் அவர்கள், பத்து மாடுகளை வைத்துக்கொண்டு, பால் விற்கும் தொழில் செய்து பிழைப்பு நடத்திவருகிறார். இதற்கிடையே, கடந்த அக்டோபர் 23-ம் தேதி, பர்கத் சிங் அவர்களும், அவரது துணைவியாரும், உறவினர்களின் வீட்டில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தால் கை, கால்களில் பலத்த காயமடைந்து, இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்கள், தற்போது அதிலிருந்து மீண்டுவந்துள்ளனர். இவ்விருவரின் இந்நிலை பற்றி ஊடகங்கள் (tamilhunt, விகடன்) செய்தி வெளியிட்டன.

பர்கத் சிங் அவர்களுக்கும் அவரது மனைவிக்கும், கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், இவ்விருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கவேண்டியுள்ளது. ஆனால், சிகிச்சைக்குப் போதுமான பணம் அவர்களிடம் இல்லை. பணத்துக்காகக் கஷ்டப்படும் அவர்களுக்கு உதவ யாருமே முன்வரவில்லை. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவாரங்கள் ஆகியும், அதுவரை யாருமே பார்க்கச் செல்லவில்லை என்று செய்திகள் வெளியானதற்குப் பின்னர், பொதுமக்கள் அவருக்கு உதவிகள் செய்துவருகின்றனர் என சொல்லப்படுகின்றது. (விகடன் 08/11/2018). பர்கத் சிங் அவர்கள், மனித உயிர்களை மட்டுமல்ல, ஆபத்தான விலங்குகளையும் பலமுறை காப்பாற்றியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இவர் செய்த உதவிக்கு, தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் என, 275 முறை இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார். ஆயினும், இந்தப் பாராட்டும் மரியாதையும், அவருக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் உதவவில்லையாம். இந்தச் செய்தியை வெளியிட்டிருந்த விகடன் இதழ், கடந்த 13 வருடங்களில், 11,802 சடலங்களை மீட்டுள்ளார். அத்துடன், பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 1,650 பேரைக் காப்பாற்றி, அவர்கள் மறுவாழ்வு பெறவும் காரணமாக இருந்துள்ள இவருக்கு உதவி தேவைபட்ட நேரத்தில் கிடைக்கவில்லையே என ஆதங்கப்பட்டிருந்தது.

‘என்னைக் காப்பாற்ற நீ ஏதாவது செய்வாயா?’ என்றதோர் ஏக்கம், இக்காலத்தில், பலதரப்பட்ட மக்களில் மட்டுமல்லாமல், ஐந்தறிவு உயிர்கள் மற்றும், இயற்கையிடமும் எழுகின்றன.

போலந்து நாட்டின் காட்டோவீத்ச நகரில், ஐக்கிய நாடுகள் நிறுவனம், காலநிலை மாற்றம் குறித்த உலக உச்சி மாநாட்டை நடத்தி வருகிறது. இம்மாதம் 2ம் தேதி தொடங்கிய இந்த மாநாடு, 14ம்தேதி, வருகிற வெள்ளிக்கிழமையன்று நிறைவடையும். 150க்கு மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் இம்மாநாட்டின் நிகழ்வுகள் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. இம்மாநாட்டில், இப்புவியின் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியசுக்கு, கூடுமானால் 1.5 டிகிரி செல்சியசுக்கு குறைப்பதற்கு ஆக்கப்பூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்படும் என நம்பப்படுகின்றது. காலநிலை மாற்றம் காரணமாக, சொந்த இடங்களைவிட்டு புலம்பெயர்வோர் மற்றும் குடிபெயர்வோரின் நலன் குறித்தும், காட்டோவிச்சே உலக உச்சி மாநாட்டில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. மேலும், குடிபெயர்வோரின் பாதுகாப்பு குறித்து, உலக ஒப்பந்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு, மொராக்கோ நாட்டில், ஐ.நா. ஆதரவுடன், இத்திங்களன்று, உலகளாவிய கூட்டம் ஒன்று தொடங்குகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை வெளியிடப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவு நாள், டிசம்பர் 10, இத்திங்களன்று சிறப்பிக்கப்படும்வேளை, உலகத் தலைவர்கள், அப்பாவி பொது மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மனதில் வைத்து, ஆக்கப்பூர்வமான தீர்மானங்களை எடுப்பார்கள் என நம்புவோம். டிசம்பர் 10, இத்திங்கள், உலக மனித உரிமைகள் நாளாகும்.

தற்போது புவியின் சராசரி வெப்பநிலை, தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு இருந்ததைவிட ஏறத்தாழ ஒரு டிகிரி கூடுதலாக இருக்கிறது. 2018ம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் உலகின் சராசரி வெப்பநிலை 0.98 டிகிரி செல்சியஸ் ஆகும். அதாவது இந்த சராசரி அளவு 1850, 1900மாம் ஆண்டுகளில் நிலவிய வெப்பநிலையைவிட அதிகம் என்று, பதிவுகள் தெரிவிக்கின்றன. உலகில் அதிக வெப்பநிலை நிலவிய இருபது ஆண்டுகள், கடந்த 22 ஆண்டுகளில்தான் எனவும், உலக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், 2100ம் ஆண்டுவாக்கில், உலகின் வெப்பநிலையில் ஏறக்குறைய மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். இந்நிலையில் புவி வெப்பமயமாதலை தவிர்ப்பதில், நம் ஒவ்வொருவருக்கும் பங்கிருக்கிறது என்று, சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வாய்ப்பிருந்தால் நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ செல்லலாம். இது உடல்நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நல்லது. கூடுமானவரை பொதுப்போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்தலாம். இயன்றவரை மின்சாரத்தைப் பயன்படுத்துவதைக் குறைக்கலாம். மின்விசிறியை பயன்படுத்துவது முதல், துவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவி வரை, மிக கவனமாகப் பயன்படுத்தலாம். புலால் உண்பதை குறைத்துக் கொள்ளலாம். கறிகோழிகள் வளர்ப்பது, தண்ணீர் அதிகம் உறிஞ்சும் பணப்பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்வது போன்றவை, பசுமை இல்ல வாயுவை வெளியேற்றும் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர் (பிபிசி). என்னைக் காப்பாற்ற, இவை போன்ற எளிய செயல்களைக் கடைப்பிடிப்பீர்களா? என, காலநிலை மாற்றம் நம்மிடம் கேட்கின்றது. ஏனெனில் இப்புவியின் எதிர்காலம், நம் ஒவ்வொருவரின் கையில்தான் உள்ளது. இப்புவியின் வெப்பநிலையைக் குறைப்பதற்கு, பல இடங்களில் தனிப்பட்ட மனிதர்களும் தங்களால் இயன்றதைச் செய்து வருவதை, நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த தனிப்பட்ட மனிதர்களில் ஒருவர், வயது முதிர்ந்த ஈஸ்வரியம்மாள். இவர், தனக்கும் தனது வீட்டிற்கும் ஏதாவது நேரிட்டாலும் பரவாயில்லை, சாய்ந்துவரும் மரத்தைப் பாதுகாக்க முடியுமா? என்ற கோரிக்கையை எல்லாரிடமும் விடுத்துள்ளார்.

நாகை மாவட்டம் வாய்மேடு பகுதியில் பெரிய புளியமரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தை அசைத்த கஜா புயல், அதனை கீழே தள்ளியது. ஈஸ்வரியம்மாள், அந்த மரத்தின் அடியில், ஒரு குடிசையில் தங்கியுள்ளார். அந்தக் குடிசையின் கூரையை பதம் பார்த்த மரம், கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து வருகிறதாம். ஈஸ்வரியம்மாள், தான் சிறுமியாக இருந்ததிலிருந்து, இந்த மரத்தின் வளர்ச்சியைப் படிப்படியாகப் பார்த்து இரசித்திருக்கிறார் தனக்கு மூத்த சகோதரர்போல, இந்த மரத்தைப் பாவித்திருக்கிறார். இப்போது இந்த மரம் சாய்ந்ததும், ஓடோடிப்போய் தன்னால் முடிந்தவரை சிறு மரங்களைச் சேகரித்து, மரம் மேற்கொண்டு சாயாமல் முட்டுக்கொடுத்து வைத்துள்ளார். மரத்தையும், அதன் பருமனையும், சாய்ந்துள்ள விதத்தையும், பார்ப்பவர்கள் யாரும் மரத்தின் பக்கத்தில் போகக்கூட அஞ்சுவார்கள். ஆனால் ஈஸ்வரியம்மாளே, மரத்தின் கீழேயே உட்கார்ந்து நாட்களைக் கடத்திவருகிறார். யாராவது பெரிய அதிகாரிகள் குழுவாக வந்து, இந்த மரத்தை பழையபடி நிமிர்த்தி வாழவைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார் ஈஸ்வரியம்மாள் .

மதுரை மாநகராட்சி பகுதியில், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கிற்கு டிசம்பர் 10, இத்திங்கள் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால், முதல் முறை 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், இரண்டாவது முறை செய்தால் பயன்படுத்திய நிர்வாகத்தின் உரிமம் இரத்து செய்யப்படும் என, மதுரை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது என செய்திகள் கூறுகின்றன. கானடா நாட்டு மார்கரெட் அட்வுட் (Margaret Atwood) என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், The Moment என்ற கவிதையில், 'மனிதன், எல்லாவற்றையும் வென்றுவிட்டதாகவும், எல்லாவற்றையும் சொந்தமாக்கி கொண்டதாகவும் கருதுகிறான். ஆனால், இயற்கைக்கு முன்னால் மனிதன் ஒன்றும் இல்லை என, மனித குலத்திற்கும், சூழலியலுக்கும் உள்ள தொடர்பை அழுத்தமாக விவரிக்கிறார். என்னைக் காப்பாற்ற நீ என்ன செய்கிறாய்?  எனக் கேட்கும் அபயக்குரல்களுக்கு மனிதர்களாகிய நாம் செவிமடுத்து, மனிதரையும், இயற்கையையும் பாதுகாக்க, நடவடிக்கையில் இறங்குவோம். "நடந்துகொண்டே இரு... பாதை தானாக உருவாகும்!” என்ற ஜென் தத்துவத்திற்கேற்ப, தொடர் முயற்சிகளில் ஈடுபடுவோம். வெற்றி நம் கையில்.

10 December 2018, 14:40