Cerca

Vatican News
செஸ் போட்டியில், 5வது முறையாக வெற்றி பெற்ற கே.ஜெனிதா ஆன்டோ  செஸ் போட்டியில், 5வது முறையாக வெற்றி பெற்ற கே.ஜெனிதா ஆன்டோ  

வாரம் ஓர் அலசல் – வானம் வசப்பட தேவை நம்பிக்கை

2017ம் ஆண்டில் உலக மாற்றுத்திறனாளர் செஸ் போட்டியில், வெற்றி பெற்ற, இளம்பெண் ஜெனிதா ஆன்டோ, போலியோ நோயால் தாக்கப்பட்டிருப்பவர்

மேரி தெரேசா - வத்திக்கான்

2018ம் ஆண்டின் இறுதி மாதம் தொடங்கிவிட்டது. நாள்கள் வேகமாகக் கடக்கின்றன என பலர் பேசிக்கொள்கின்றனர். வாழ்வில் நடப்பதெல்லாம் பலருக்குப் புதிராகவே இருக்கின்றது. நம் ஒவ்வொருவரது பிறப்பும் இறப்பும் அப்படியேதான். அவை யார் சொல்லியும் நிகழ்வதில்லை. நாம் பிறப்பதற்கு முன்னர், எந்த இடத்தில், எந்த வீட்டில், எந்த இனத்தில், எந்த மதத்தில், எந்நிலையில் பிறப்போம் என்பது, நம்மில் எவருக்குமே தெரியாது, நாமும் அவற்றை முன்னரே தீர்மானிப்பதுமில்லை. ஆண்டவரின் அற்புத படைப்பில் ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதத்தில் அழகாய் இருப்பதுபோல, அவரின் உன்னத படைப்பாகிய மனிதரும் அழகானவர்கள். ஆனால், மனிதர் ஒவ்வொருவரும், நிறத்தால், குணத்தால், திறமையால், உடல் அமைப்பால் மாறுபடுகின்றனர். நம்மில் யாருமே முற்றிலும் முழுமையானவர்கள் என்பதற்கில்லை. ஒவ்வொருவரிடத்திலும் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தக் குறைகள் உடல் அளவிலோ, மனத்தளவிலோ அல்லது வேறு வகையிலோ இருக்கலாம். உடலளவில் அல்லது மன வளர்ச்சியில் குறைகள் உள்ளவர்கள் எவரும், தாங்களாகவே விரும்பி அந்நிலையை அடைவதில்லை. இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் உடைத்து எழுச்சி காண்கின்றவர்கள், உலகையே திரும்பிப் பார்க்க வைக்கின்றனர்.

உலகின் தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் அவர்கள் பற்றி அறியாதவர் எவரும் இருக்கமாட்டார்கள். இவருக்கு வாயில் மேல் வரிசையில் பற்கள் இருக்காது. கீழிருக்கும் சில பற்கள் மேல்உதட்டை அழுத்தி வெளிவந்து நிற்கும். தலை, வலதுபக்கம் சாய்ந்திருக்கும். கேமராவும் சென்சாரும் பொருத்தப்பட்ட கண்ணாடி அணிந்திருப்பார். கணனி இணைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பார். கன்னத்தில் சில தசைகள் தவிர, உடலின் அத்தனை பாகங்களும் செயலிழந்தநிலை. இவ்வளவு வலிகளையும் கடந்து அவர் சிரிப்பார். எலும்போடு ஒட்டியிருக்கும் அவரின் கன்னத்தசைகள் சிறிய அசைவைக் கொடுக்கும். வலக்கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டி, பாடம் நடத்தி, நூல்கள் எழுதி புகழின் உச்சிக்கு உயர்ந்த, தன்னம்பிக்கை பயிற்சியாளர். இவர், 2005ம் ஆண்டில் ஒருநாள், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவருக்கு வயது 63. அன்று, தொலைக்காட்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு, ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள், கணினி மூலம் பதில்கள் சொன்னார். “வாழ்க்கை எப்படி இருக்கிறது?” என்று கேட்டபோது, அது முன்பைவிட மகிழ்வாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கிறது என்று, ஹாக்கிங் அவர்கள் சொன்னார். “இந்த உடல் நிலையில் உங்களால் மகிழ்வாக இருக்க முடிகிறதா?” என்று தயங்கித் தயங்கிக் தொகுப்பாளர் கேட்கையில், “எதை இழந்தீர்கள் என்பதல்ல, என்ன எஞ்சி இருக்கிறது என்பதுதான் முக்கியம்” என்றார், ஸ்டீபன் ஹாக்கிங். (நன்றி விகடன்)

மனிதருடைய பேராசையினாலும், அறிவற்றதனத்தாலும் இந்த பூமியைப் பெருமளவு சேதப்படுத்தி வருகிறோம். மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் விரட்டிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் இரசித்து, பெரும் ஈடுபாட்டோடு மனித இன தொடர்ச்சிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது... நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்" என உறுதிபடக் கூறியவர், ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியல் உலகம் போற்றும் இந்த மேதை போன்று, மாற்றுத்திறன் ஒரு குறையே இல்லை என்று உணர்ந்து சாதனைகள் படைத்தவர்கள், சாதனைகள் படைத்துக் கொண்டிருப்பவர்களின் பட்டியல் நீளமானது. பிறந்து ஒரு வருடம், ஏழு மாதங்களேயான நிலையில், ஒருவித மர்மக் காய்ச்சலால், பார்வை, பேச்சு, கேட்கும் திறன் அனைத்தையும் இழந்தவர் ஹெலென் கெல்லர். பேச்சு மற்றும் கேட்கும் திறனை இழந்தவர்களில் முதன்முதல் இளங்கலை பட்டம் பெற்றவர் இவர்தான். ஏறத்தாழ நாற்பது நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, மாற்றுத்திறன் கொண்டவர்கள், தங்கள் நம்பிக்கையை இழக்காமல் இருக்க பல சொற்பொழிவுகள் ஆற்றியவர். பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ள இவர், பல இடங்களில் தொழிலாளர் நலனுக்காகவும், பெண்கள் உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர். ஹெலென் கெல்லர் அவர்கள், உலகிலுள்ள மாற்றுத்திறன்கொண்ட மக்களுக்கான போராளியாகக் கருதப்பட்டார்.

அருநிமா சின்ஹா (Arunima Sinha) என்பவர், 2013ம் ஆண்டு, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய, முதல் இந்திய மாற்றுத்திறனாளியாவார். அச்சிகரத்தில் இந்திய மூவர்ணக் கொடியை பறக்கவிட்டவர். 2011ம் ஆண்டில் தொடர்வண்டியிலிருந்து சில திருடர்களால் வெளியே தூக்கி வீசப்பட்ட இவர், மற்றொரு தண்டவாளத்தில் வந்த இன்னொரு இரயில் இவரது காலை நசுக்கியதில், காலை இழந்தார். அருநிமா சின்ஹா அவர்கள், இந்த தனது குறையையே தனது பலமாகக் கருதியவர்.  இதேபோல், இளம்பெண் கே.ஜெனிதா ஆன்டோ (Jennitha Anto) அவர்கள், கடந்த ஆண்டில் சுலோவாக்கியா நாட்டில் நடைபெற்ற, 17வது உலக மாற்றுத்திறனாளிகள் செஸ் போட்டியில் தங்கம் வென்றவர். திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த இவர், செஸ் போட்டியில், ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றார். சிறுவயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியிலே இருக்கும் ஜெனிட்டா அவர்கள், பி.காம் பட்டதாரி. இவர், ஒன்பது வயதிலிருந்து செஸ் விளையாட கற்று வருகிறார். இவர்கள் எல்லாரும், தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும், எந்த மாற்றுத்திறன்களையும், அசாத்தியத் திறன்களாக மாற்ற முடியும் என நிரூபித்தவர்கள். டிசம்பர் 03, இத்திங்கள், மாற்றுத்திறனாளர்கள் உலக நாள். சமுதாயத்தின் எல்லாத் துறைகளிலும், வளர்ச்சியிலும், மாற்றுத்திறன் கொண்டவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, 1992ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் நிறுவனம், உலக மாற்றுத்திறனாளர் நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என, உலகினரைக் கேட்டுக்கொண்டது. மாற்றுத்திறனாளர்களை மேம்படுத்தி, அவர்கள் ஒதுக்கப்படாமல், சமமாக நடத்தப்படுவது உறுதியளிக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில், இத்திங்களன்று இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இந்த உலக நாளை மையப்படுத்தி, இத்திங்களன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மாற்றுத்திறனாளர்கள் அன்புகூரப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். எனவே மாற்றுத்திறனாளர் எவரையும் புறக்கணிக்காமல், அவர்களுக்கு நம் அன்பையும், ஆதரவையும், ஊக்கத்தையும் அளிப்போம். உலகிலுள்ள ஏறத்தாழ 105 கோடி மாற்றுத்திறனாளர்களில், பத்து கோடிப் பேர் சிறார் எனவும், இச்சிறார், பிறப்பால் மாற்றுத்திறனாளர்களாக இருப்பதைவிட, நான்கு மடங்கு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் ஐ.நா. தெரிவிக்கிறது. 2011ம் ஆண்டின் புள்ளவிபரங்களின்படி, இந்தியாவில், இவர்கள், 2.6 கோடியாகும்.

“வளைந்தும், நெளிந்தும் உள்ளதென்று, விலகிப் போகின்றார்கள். அந்த நாள் குயவன் செய்த பிழைக்கு நான் என்ன செய்வேன்? ....” எத்தனையோ பானைகளைக் குயவர் செய்கின்றனர். அவற்றுள் மக்கள் நல்லவற்றைத் தேடி வாங்கிச் செல்கின்றனர். வளைந்திருக்கிறது, நெளிந்திருக்கிறது, ஓட்டையாக இருக்கின்றது என்றெல்லாம் சொல்லி, சில பானைகளை ஒதுக்கி வைத்துவிடுகின்றனர். அப்படி ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பானை பேசுகிறது என்று, பாரசீகக் கவிஞர் உமர் கயாம் அவர்கள், மாற்றுத்திறனாளர் பற்றி இவ்வாறு சிறிய கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

அன்பு மாற்றுத்திறனாளர்களே, நீங்கள் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் உடலால் பலவீனமாக இருந்தாலும், உள்ளத்தில் துணிச்சலாக இருப்பவர்கள். உங்களது இந்நிலைக்கு நீங்கள் காரணமல்ல. உங்களைப் படைத்த கடவுள், உங்களைக் கைவிடுவதில்லை, ஒதுக்குவதுமில்லை. உங்களுக்கென்று அசாத்திய திறமைகளை அவர் கொடுத்திருக்கிறார். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. உங்களுக்குத் தேவை தன்னம்பிக்கை. உங்களுக்குள் இருக்கும் மாற்றுத்திறனைக் கண்டுபிடித்து, அதை வளர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் சொன்னது போன்று, "வாழ்க்கை கடினமானதுதான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!", “எதை இழந்தீர்கள் என்பதல்ல, என்ன எஞ்சி இருக்கிறது என்பதுதான் முக்கியம்”.  ஆதலால், இல்லாததை நினைத்து ஏங்காமல், நம்பிக்கையை மூலதனமாக்கி வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துங்கள். பா.விஜய் அவர்கள் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற திரைப்பட பாடல் வரிகள் ஊக்கத்தை தரட்டும். உளி தாங்கும் கற்கள்தானே, மண்மீது சிலையாகின்றன. வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காண்கின்றன. எனவே போராடும் போர்க்களமாகிய வாழ்வில், நம்பிக்கை என்பது வேண்டும். உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது. நெஞ்சில் காயமில்லாத மனிதர்கள் இல்லை. அவை காலப்போக்கில் மாயமாக மாறிப்போகும். உங்களது மாற்றுத்திறனை மலைபோன்ற மனஉறுதியால் வெற்றி காண எம் வாழ்த்துக்கள்.

03 December 2018, 15:42