தேடுதல்

காஷ்மீர் குளிரில் வயதானவர் காஷ்மீர் குளிரில் வயதானவர் 

வாரம் ஓர் அலசல் – செய்யும் நன்மை திரும்பி வரும்

பாராட்டுகள் கிடைக்காவிடினும், மனந்தளராமல், தொடர்ந்து நன்மை செய்துகொண்டே இருப்போம்

மேரி தெரேசா - வத்திக்கான்

ஒரு தாய், ஒவ்வொரு நாள் காலையிலும், தனது அன்றைய நாளின் உணவுக்குத் தேவையான சப்பாத்திகளைச் செய்வதோடு, கூடுதலாக ஒரு சப்பாத்தி செய்து, அதை தனது வீட்டு சன்னலில் வைத்து வந்தார். நல்லதொரு வேலை தேடி வேறொரு நகருக்குச் சென்ற தன் மகனுக்காகச் செபித்துக்கொண்டே அதை வைத்தார். நீண்ட நாள்களாகியும் தன் மகன் வரவில்லையே எனவும் கவலைப்பட்டார், அந்த தாய். அந்த வீட்டுப் பக்கமாகச் செல்லும், கூன்விழுந்த வயதான, கைவிடப்பட்ட ஏழை முதியவர் ஒருவர், அந்தச் சப்பாத்தியை தினமும் எடுத்துச் சென்று சாப்பிட்டார். அப்படி எடுத்துச் செல்கையில் ஒவ்வொரு நாளும், நீ செய்யும் தீமை உன்னிடமே தங்கியிருக்கும். ஆனால் நீ செய்யும் நன்மை உன்னிடமே திரும்பி வரும் என்ற சொற்களை, முணுமுணுத்துக்கொண்டே சென்றார். இதை கவனித்து வந்த அந்த தாய், என்னது, இந்தக் கிழவன் நன்றி என ஒருநாள்கூட சொல்ல மாட்டேங்கிறார், நீ செய்யும் தீமை உன்னிடமே தங்கியிருக்கும். ஆனால் நீ செய்யும் நன்மை உன்னிடமே திரும்பி வரும் என, போகிற போக்கில் சொல்லிச் செல்கிறாரே என எரிச்சல்பட்டார். இதற்கு அர்த்தம் புரியவில்லையே எனவும், அந்த தாய் கவலைப்பட்டார். அதனால், அந்த முதியவரை எப்படியாவது வீட்டுப் பக்கம் வரவிடாமல் செய்ய வேண்டும் என விரும்பினார். ஒருநாள் அவருக்கு வைக்கும் சப்பாத்தியில் நஞ்சைக் கலக்கத் திட்டமிட்டார். ஆனால் அன்று அவர், நஞ்சை ஊற்றிக்கொண்டிருக்கும்போதே, அந்த முதியவர் சொன்ன சொற்கள் எதிரொலித்தன. அந்த தாய்க்கும் மனது சரியில்லை. ஆதலால் அந்த சப்பாத்தியைத் தூக்கி எறிந்துவிட்டு, வேறு ஒரு சப்பாத்தி செய்து, வழக்கம்போல் தன் மகனுக்காகச் செபித்துக்கொண்டே சன்னலில் வைத்தார். அன்று மாலை யாரோ வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. திறந்து பார்த்தபோது அவரது மகனைக் கண்டு வியப்படைந்தார். மகன் எலும்பும் தோலுமாய், கிழிந்த ஆடைகளுடன், பசி தாங்க முடியாமல் நின்றுகொண்டிருந்தார். மகன் சொன்னார்,

அம்மா, நான் இங்கு நிற்பது ஒரு புதுமைதான். நம் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தவேளை, ஒரு மைல் தூரத்திற்கு அப்பால், நான் பசியால் நிலைகுலைந்து இறக்கும் நிலையில் இருந்தேன். அப்போது அவ்வழியாய் வந்த கூன்விழுந்த முதியவர் ஒருவரிடம், ஒரு சிறிய ரொட்டித்துண்டுதான் கேட்டேன். ஆனால் அவரோ தன்னிடமிருந்த ஒரு சப்பாத்தியைக் கொடுத்தார். என்னிடம் அதைக் கொடுக்கும்போது அந்த முதியவர், இந்தச் சப்பாத்தியைச் சாப்பிட்டுத்தான் நான் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ்கிறேன், ஆனால் இன்று என்னைவிட உனக்குத்தான் இது அதிகம் தேவைப்படுகின்றது, இந்தா எனச் சொல்லிக் கொடுத்தார். இதைக் கேட்டவுடன் அந்த தாய், மனப்பாரம் தாங்க இயலாமல், சுவரில் தலையைச் சாய்த்துக்கொண்டார். அன்று காலை நஞ்சைக் கலந்து தயாரித்த அந்த சப்பாத்தியை நினைத்துப் பார்த்தார். அதை எனது மகன் சாப்பிட்டிருந்தால் இந்நேரம் அவன் இறந்திருப்பான் என்று நினைத்து மனம் பதைத்தார். அதேநேரம்,  நீ செய்யும் தீமை உன்னிடமே தங்கியிருக்கும். ஆனால் நீ செய்யும் நன்மை உன்னிடமே திரும்பி வரும் என்ற அந்த முதியவரின் கூற்றின் பொருளைப் புரிந்துகொண்டார் அந்த தாய்.  எனவே நன்மை செய்ய வேண்டும், நன்மை செய்வதை ஒருபோதும் நிறுத்தக் கூடாது. நன்மை செய்யும்வேளையில் அது பாராட்டப்படாமல் இருந்தாலும்கூட, நன்மை செய்வதை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது.  கிறிஸ்மஸ் பண்டிகை கால தயாரிப்பிலும், 2018ம் ஆண்டின் இறுதி நாள்களிலும் இருக்கின்றோம். இவ்வேளையில் கூன்விழுந்த அந்த வயதான ஏழை முதியவரின் அருள்வாக்கு நம் சிந்தனைக்கு அருமருந்தாக உள்ளது.

ஒரு அபூர்வ தம்பதியினர் - இதுவும் கொடுப்பர், இன்னமும் கொடுப்பர் என்ற ஒரு செய்தி, டிசம்பர் 15, இச்சனிக்கிழமையன்று, தினமலர் தினத்தாளில் வெளியாகி இருந்தது. மத்திய அரசு ஊழியர்களாக இருந்த மதுரை திருநகரைச் சேர்ந்த ஜனார்த்தனன்-ஜலஜா தம்பதியர், தொண்டு செய்வதற்காகவே விருப்ப ஒய்வு பெற்றனர். ஒய்வு பெற்றபோது கிடைத்த பணத்தைக் கொண்டு திருநகரில் ஐந்து கிரவுண்டு இடத்தை வாங்கிப்போட்டனர். அதன் இன்றைய மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேலாகும். அதில் முதியோர் இல்லம் நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தனர். ஆனால், ஜனார்த்தனன் அவர்களுக்கு, திடீரென பார்வைக் கோளாறு ஏற்படவே, முதியோர் இல்லம் நடத்துபவர்கள் யாருக்காவது இடத்தைக் கொடுத்துவிடலாம் என முடிவு செய்தனர்.

அந்த நேரத்தில் டாக்டர் பாலகுருசாமி உள்ளிட்ட சில இளம் டாக்டர்கள் ஒன்று சேர்ந்து, ‛ஐஸ்வர்யம் அறக்கட்டளை' என்ற அமைப்பினைத் துவங்கி, ஆதரவில்லாமல் தெருவில் வீசப்பட்ட வயதானவர்களுக்கு, தகுந்த மருத்துவமும் உணவும் கொடுத்து காப்பாற்றி வந்தனர். ஆனால் அந்த மருத்துவர்கள், போதுமான இடவசதி இல்லாமல் சிரமப்பட்டதைக் கேள்விப்பட்ட ஜனார்த்தனன்-ஜலஜா தம்பதியர், தங்களது இடத்தைத் தானமாகக் கொடுத்தனர். அந்த இடத்தைப் பதிவு செய்ய இரண்டரை இலட்சம் ரூபாய் தேவைப்பட்டதால், அந்த மருத்துவர்கள், தானமாக இடத்தைப் பெற சிறு தயக்கம் காட்டினர். இதைக் கேள்விப்பட்ட அந்த தம்பதியர், தாங்களே செலவு செய்து இடத்தை பதிவும் செய்து கொடுத்துள்ளனர். அத்துடன் ஒதுங்கிவிடாமல், அவ்விடத்தில் கட்டடம் கட்டுவதற்கு, தங்களது வெளிநாட்டு, உள்நாட்டு உறவுகள் மற்றும் நண்பர்களிடம், விடயத்தைச் சொல்லி, நிதி சேர்த்து, இரண்டு மாடி கட்டடமும் கட்ட உதவி செய்துள்ளனர். மேலும், நோயாளர்கள் படுக்க, படுக்கைகள் வேண்டுமே என்ற சூழ்நிலையில் கொஞ்சமும் தயங்காமல், ஐம்பது கட்டில்கள் வாங்கிக் கொடுத்துள்ளனர். இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, இரண்டு கணனிகள் வாங்குவதற்கு, பணமும் கொடுத்துள்ளனர்.

இவ்வளவுக்கும், ஜனார்த்தனன்-ஜலஜா தம்பதியினர், பெரிய பணக்காரர்கள் அல்ல. மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியத்தில் வாழ்க்கையை நடத்துபவர்கள். எங்காவது செல்ல வேண்டும் என்றால், கால் டாக்சியில் போனால்கூட காசு செலவாகும் என்று நினைத்து, நகரப் பேருந்தில்தான் இப்போதும் போய்வந்து கொண்டு இருக்கின்றனர். இவர்களின் வீட்டுவேலைக்கு ஆள் கிடையாது. தங்களது வேலைகளைத் தாங்களே செய்து கொள்கின்றனர். அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில், இலவசமாகப் பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர். நேரம் கிடைக்கும்போது, ஐஸ்வர்யம் அறக்கட்டளைக்குச் சென்று, அங்குள்ளவர்களிடம் அன்பாகப் பேசி ஆறுதலளித்துவிட்டு வருகின்றனர். தங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரிடம் பேசினாலும் தர்மம் செய்யச் சொல்லி வலியுறுத்தி, அந்த தர்மத்தை ஐஸ்வர்யம் அறக்கட்டளை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் பெறச் செய்கின்றனர். இவர்களின் தயவால், யாருமே கவனிக்காமல் குப்பையாக வீசியெறியப்பட்ட ஆண், பெண் முதியவர்கள் 39 பேர், ஐஸ்வர்யம் அறக்கட்டளையில் தங்கி கடைசி காலத்தை நிம்மதியாக கழித்து வருகின்றனர். (நன்றி தினமலர்)

கடந்த வாரத்தில் இந்தியாவில் ஒரு கோடீஸ்வரர் வீட்டுத் திருமணம், 110 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டுள்ளது. அதில் பிரதமர் உட்பட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளார்கள். இந்தச் செய்தியை வாசித்தபோது, கஜா புயல் போன்ற இயற்கைப் பேரிடர்கள், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மழையில்லாமல் கஷ்டப்படும் சிவகங்கை பகுதி விவசாய குடும்பங்கள், வீடுகளின்றி தெருக்களில் வாழ்வோர், ஒவ்வொரு நாளும் பசிக்கொடுமையை அனுபவிக்கும் எண்ணற்ற மக்கள்... இவ்வாறு உதவி தேவைப்படும் கோடிக்கணக்கான மக்களே நினைவுக்கு வந்தார்கள். ஆயினும், உலக கோடீஸ்வரர்களுக்கு மத்தியில், உள்ளத்தில் கோடீஸ்வரர்களாய் உயர்ந்து நிற்கும், ஜனார்த்தனன்-ஜலஜா தம்பதியருக்கு, நாம் ஒரு சல்யூட் அடிக்க வேண்டும். தேவைக்குமேல் இருப்பதை கொடுப்பது தர்மம் அல்ல, தேவைகளைக் குறைத்துக்கொண்டு கொடுப்பதே தர்மம் என்ற பாடத்தை, இத்தம்பதியர் நமக்குச் சொல்லித் தருகின்றனர்.

இக்காலத்தில், பாரபட்சமின்றி, உலக மக்கள் எல்லாரும் அனுபவிக்கும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு, எதையும் அளவுக்கு மீறி பயன்படுத்துவதும் ஒரு காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மனிதரின் பேராசையும், தன்னலமுமே, போர்களுக்குக் காரணம். அந்தப் போர்களால், கோடிக்கணக்கான மக்கள் சொந்த நாடுகளைவிட்டு புலம்பெயர்ந்துள்ளனர். தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவில் வறுமையின் கெடுபிடிக்குத் தாக்குப் பிடிக்க இயலாமல், அந்நாட்டு மக்கள் பலர், இந்நாள்களில் கண்ணீரோடு சொந்த வீடுகளைவிட்டு சென்றுகொண்டிருக்கின்றனர். நம் மத்தியிலும், பொருளின்மையாலும், மன மகிழ்ச்சியின்மையாலும், துன்புறும் மக்கள், வாழ்ந்து வருகின்றனர். இவர்களைப் போன்றோரை, இந்தப் பண்டிகை காலத்தில் நினைத்துப் பார்ப்போம். வீண் ஆடம்பரங்களைக் குறைத்து, இல்லாதவரோடு இருப்பதைப் பகிர்ந்து வாழ்வோம். உறவுகளில் பல ஆண்டுகள் ஒருவருக்கொருவர் பேசாமல், மனகசப்புடன் வாழ்வோர் ஒப்புரவடைந்து, மனதில் நிம்மதியை அனுபவித்து வாழ்வதற்கு உதவுவோம். நீ செய்யும் தீமை உன்னிடமே தங்கியிருக்கும். ஆனால் நீ செய்யும் நன்மை உன்னிடமே திரும்பி வரும் என்ற, அந்த ஏழை முதியவரின் பொன்வாக்கை இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் சிந்தித்துப் பார்ப்போம். 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2018, 14:37