திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற நெல் திருவிழாவில் உரையாற்றும் ‘நெல் ஜெயராமன்’ திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற நெல் திருவிழாவில் உரையாற்றும் ‘நெல் ஜெயராமன்’  

இமயமாகும் இளமை – நெஞ்சில் வாழும் ‘நெல் ஜெயராமன்’

‘நெல் ஜெயராமன்’ அவர்கள், தமிழகம் முழுவதும், நெல் திருவிழாக்களை நடத்தி, 41,000த்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு, 174 பாரம்பரிய நெல் ரகங்களை வழங்கியுள்ளார் என்பது மிகப்பெரும் சாதனை.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

டிசம்பர் 6, கடந்த வியாழனன்று, தமிழகம், ஒரு நல்ல மனிதரை இழந்தது. பொதுவாக, சமுதாயத்தில் புகழ்பெற்றவர் ஒருவர் மரணமடைந்தால், அதை, “ஈடு செய்ய இயலாத ஓர் இழப்பு” என்று சொல்வது, ஒரு பாரம்பரியக் கூற்று. பல நேரங்களில், அந்தக் கூற்று, பொருளற்றதாக, போலியாக ஒலிக்கும். ஆனால், கடந்த வியாழனன்று கே.ஆர்.ஜெயராமன் என்பவர், மரணமடைந்தது, உண்மையிலேயே ஈடு செய்ய இயலாத ஓர் இழப்பு.

இன்றைய தலைமுறை இழந்துகொண்டிருக்கும் விஷயங்களில் முக்கியமானது, மண் சார்ந்த பாரம்பரிய அறிவு. தமிழ்நாட்டு விவசாயிகளின் கவனத்தை இயற்கை வேளாண்மை நோக்கித் திருப்பிய “நம்மாழ்வார்” என்ற ஆலமரத்தின் விழுதுகளில், ஜெயராமன் அவர்களும் ஒருவர். 174 நெல் ரகங்களை மீட்டெடுக்க, இவர் அயராது உழைத்ததால், நம்மாழ்வார் அவர்கள், இவருக்கு, ‘நெல் ஜெயராமன்’ எனப் பெயர் சூட்டினார்.

திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் பிறந்த ஜெயராமன் அவர்கள், பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து, விவசாயத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். வேதியல் உரங்களைத் தவிர்த்து, இயற்கை வழி விவசாயத்தை வளர்க்கவேண்டும் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியிருந்த நம்மாழ்வார் அவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவருடன் இணைந்து, விவசாயிகள், மாணவர்கள், அனைவருக்கும், பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி, நேரம் காலம் பார்க்காமல் உழைத்து வந்தவர், நெல் ஜெயராமன். காவிரி உரிமை மீட்கும் போராட்டங்களிலும், விதைகளை மரபணு மாற்றம் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

தமிழகம் முழுவதும், நெல் திருவிழாக்களை நடத்தி, 41,000த்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு, 174 பாரம்பரிய நெல் ரகங்களை வழங்கியுள்ளார் என்பது மிகப்பெரும் சாதனை. இவர், வழங்கிய இறுதி நேர்காணலில் கூறியுள்ள நம்பிக்கை தரும் சிந்தனைகள் இதோ: “எனக்கு இளைய தலைமுறை மீது நம்பிக்கை இருக்கிறது. என்னுடைய நம்பிக்கை என்னவென்றால், கொஞ்சம் கொஞ்சமாக நாம் மரபில் இழந்த விஷயங்களையெல்லாம் மீட்டெடுத்தால், அடுத்த பத்து, இருபது வருடங்களுக்குள், காவிரி விவசாயிகள், மீண்டும் தலைநிமிர்ந்துவிடுவார்கள். அதோடு, நம் தமிழ் மக்களும் நஞ்சில்லா உணவைச் சாப்பிடுவார்கள். இயற்கை வேளாண்மை இதற்கு நிச்சயம் வழிகாட்டும்.”

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வேளாண் அறிவியலாளர் நெல் ஜெயராமன் அவர்கள், டிசம்பர் 6, கடந்த வியாழன் அதிகாலையில் மரணம் அடைந்தார். நம் நெஞ்சங்களில் தொடர்ந்து வாழும் நெல் ஜெயராமன் அவர்களுக்கு வத்திக்கான் வானொலி குடும்பத்தாரின் கண்ணீர் அஞ்சலி – (தி இந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2018, 15:00