புயலில் அழிவுற்ற தென்னை மரங்கள் புயலில் அழிவுற்ற தென்னை மரங்கள் 

இமயமாகும் இளமை - அழிவில் நம்பிக்கை தந்த வசந்தகுமார்

வேதாரண்யத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் வாழும் 440 குடும்பங்களுக்கு, வசந்தகுமார் வழியே உதவிகள் சென்று சேர்ந்தன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை, ‘கஜா’ புயல் புரட்டிப்போட்டு, ஏறத்தாழ 20 நாள்களாகிவிட்டன. இந்தத் துயரில் இருந்து மக்கள் மீண்டெழ, பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிய தன்னார்வலர்கள், போற்றுதலுக்கு உரியவர்கள். அரசு செய்யவேண்டிய உதவிகளை, தன்னார்வலர்கள், தனித்தனியாகவோ, குழுக்களாகவோ செய்து, மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர். எதிர்காலமே கேள்விக்குறியாகி நின்றவர்களுக்கு, துயரில் இருந்து மீளமுடியும் என்ற நம்பிக்கை அளித்தவர்கள், இந்தத் தன்னார்வலர்கள் தான். அந்த நம்பிக்கை முகங்களில் முக்கியமான ஒருவர், ந.வசந்தகுமார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர், ந.வசந்தகுமார். முழுநேர புகைப்படக் கலைஞரான இவர், முதலில், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று, கள நிலவரத்தை அறிந்துகொண்டார். அந்நிலவரங்களை தன் கேமராவில் பதிவு செய்துகொண்டே சென்றவருக்கு, ஒரு கட்டத்துக்கு மேல், புகைப்படம் எடுக்க மனம் வரவில்லை. அந்த அளவுக்கு, புயலின் பாதிப்பு அவர் மனதைப் பாதித்திருக்கிறது.

கேமராவைத் தூரமாக வைத்துவிட்டு உடனடியாகக் களத்தில் இறங்கினார், வசந்தகுமார். ஃபேஸ்புக், தெரிந்த நண்பர்கள் வழியே, நிவாரணப் பொருட்களைத் திரட்ட ஆரம்பித்தார். அவ்வேளையில், நிறைய பேர் நிவாரணப் பொருட்கள் திரட்டியதால், அவர் எதிர்பார்த்த அளவுக்குப் பொருட்கள் சேரவில்லை. இருந்தாலும் அவர் மனம் தளர்ந்துவிடவில்லை.

அட்டைப் பெட்டியை உண்டியலாக்கி, சிறுவர்களுடன் வீடு வீடாக ஏறி, இறங்கினார்,  வசந்தகுமார். அவருக்கு உதவும் நோக்கத்துடன், கும்பகோணம் மாரத்தான் குழுவினர், 12 மணி நேரம் தொடர் ஓட்டம் ஓடி, நிதி, மற்றும், பொருட்களைச் சேகரித்துத் தந்தனர். ட்யூஷன் படிக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து, 500 ரூபாய் அனுப்பி வைத்தது கண்டு, மனம் நெகிழ்ந்திருக்கிறார், வசந்தகுமார்.

வேதாரண்யத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் வாழும் 440 குடும்பங்களுக்கு, வசந்தகுமார் வழியே உதவிகள் சென்று சேர்ந்தன. “அரசு எந்த உதவியுமே செய்யாத நிலையில், எங்களுக்காக, எங்கிருந்தோ பொருட்களை சேகரித்துக் கொண்டு வந்த உங்களை, உயிருள்ளவரை மறக்கமாட்டோம்” என, அம்மக்கள், கண்ணீருடன், வசந்தகுமார் அவர்களை, கையெடுத்துக் கும்பிட்டுள்ளனர். (தி இந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2018, 14:37