கைகளும், கால்களும் இன்றி பிறந்த நிக் உஜிசிக் கைகளும், கால்களும் இன்றி பிறந்த நிக் உஜிசிக்  

இமயமாகும் இளமை : பயனற்றவர்கள் என்று எவரும் இல்லை

உனது நன்மைக்காக அன்றி, வேறு எதையும் உனது வாழ்வில் நடப்பதற்கு கடவுள் அனுமதிப்பதில்லை - நிக்கொலாஸ் ஜேம்ஸ் உஜிசிக்

மேரி தெரேசா - வத்திக்கான்

“உன்னிடம் எது குறைபடுகின்றதோ, அதன்போக்கில் நீ ஒருபொழுதும் வாழக் கூடாது. கை, கால்கள் இல்லாத மனிதரை கடவுளால் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றால், இவ்வுலகின் எல்லா மனிதர்களின் இதயங்களையும், அவரால் ஏதோ ஒருவிதத்தில் பெரிதாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்....” இவ்வாறு அற்புதமான பல கூற்றுக்களைச் சொல்லி வருபவர், மாற்றுத்திறனாளர், நிக்கொலாஸ் ஜேம்ஸ் உஜிசிக் (Nicholas James Vujicic). நிக் உஜிசிக் என அழைக்கப்படும், 36 வயது (டிச.4,1982) நிரம்பிய இவர், இரண்டு கைகள், இரண்டு கால்கள் இன்றி பிறந்தவர். ஆஸ்திரேலிய கிறிஸ்தவப் போதகரான இவரின் வாழ்வுப் பாடத்தால், பலர் கடவுளை அறியவந்துள்ளனர் மற்றும், பலர், தங்கள் வாழ்வு பற்றி தெளிவடைந்து, இயேசுவின் வழியில் நடக்கத் தொடங்கியுள்ளனர். திருமணமாகி மகிழ்வாக குடும்பம் நடத்திவரும் இவருக்கு, நான்கு குழந்தைகளும் உள்ளனர். தான் அன்புகூரும் மனிதரை அணைக்கவோ, எந்தப் பொருளையும் தூக்கவோ, எதையும் தொட்டு அனுபவிக்கவோ கரங்கள் இல்லை. நடக்கவோ, ஓடவோ, ஆடவோ கால்கள் இல்லை. ஆயினும், இவர், Life without Limbs என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை 2005ம் ஆண்டில் ஆரம்பித்து, உலகெங்குமுள்ள இலட்சக்கணக்கான மாற்றுத்திறனாளர்களுக்கு வாழ்வளித்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரைச் சேர்ந்த இவர், ஒரு கட்டத்தில் தான் உயிர் வாழ வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்தார். ஆயினும், தன் பெற்றோரை நினைத்து தனது முடிவை மாற்றிக் கொண்டு, தன்னால் என்ன செய்ய முடியும் என சிந்தித்தார். முதலில் கால்களாலேயே எழுதத்தொடங்கிய இவர், இப்போது, பல அசாத்திய செயல்களால் உலகினரை வியக்க வைத்து வருகிறார். வணிகவியல் மற்றும், கணிதவியலில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர். தன்னுடைய தன்னம்பிக்கை உரைகளை ஒலி-ஒளி குறுந்தகடுகளாக வெளியிட்டுவரும் இவர், Life’s Greater Purpose என்ற குறும்படத்தையும், Life without Limits என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். பல குறும்படங்களிலும் நடித்துவரும் இவர், The Butterfly Circus என்ற படத்துக்காக மூன்று விருதுகளையும் பெற்றுள்ளார். எல்லா மனிதருமே ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களுக்கு பயனாக இருக்க முடியும். யாருமே பயனற்றவர்கள் இல்லை’என்பதையே, என் வாழ்க்கைச் செய்தியாக மற்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்!’ என்கிறார், நிக் உஜிசிக்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 December 2018, 14:01