தேடுதல்

ஒற்றைக் கால் கால்பந்து விளையாட்டு வீரர், ஹி யீயீ (He Yiyi) அவர்கள் ஒற்றைக் கால் கால்பந்து விளையாட்டு வீரர், ஹி யீயீ (He Yiyi) அவர்கள் 

இமயமாகும் இளமை : பெரிய கனவுகள், உயரிய இலட்சியங்கள்

ஒரு காலால் கால்பந்து விளையாட்டில் அசத்தும் இளம் வீரர் ஹூ யீயீ அவர்களுக்கு, இயலாதது என எதுவும் இல்லை - ஊடகங்கள்

மேரி தெரேசா - வத்திக்கான்

“கனவு காணுங்கள், ஆனால், கனவு என்பது நீங்கள் தூக்கத்தில் காணும் கனவு அல்ல, மாறாக, உங்களைத் தூங்கவிடாமல் செய்யும் கனவே, இலட்சிய கனவு” என்றார், கனவு நாயகனாகிய, இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர், ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள். இவ்வாறு, தனது சிறுவயது கனவை, இலட்சிய கனவாக்கி வாழ்ந்து வருபவர், ஒற்றைக் கால் கால்பந்து விளையாட்டு வீரர், ஹி யீயீ (He Yiyi) அவர்கள். சீனாவைச் சேர்ந்த, 21 வயது நிரம்பிய இவர், ஆஸ்டியோசார்கோமா (osteosarcoma - OS) எனப்படும், எலும்பு புற்றுநோயால் சிறுவயதில் தாக்கப்பட்டார். எனவே, இவருக்கு, 12வது வயதில் இடது கால் அகற்றப்பட்டது. பிரான்ஸ் சென்று, கால்பந்தாட்டத்தில் சிறப்புப் பயிற்சி பெற்று, தடம்பதிக்க வேண்டுமென்ற பெரிய கனவோடு வாழ்ந்துவந்த யீயீ அவர்கள், தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. ஒரு கால்தானே இல்லை, இன்னொரு கால் இருக்கின்றதே என்ற நேர்மறை எண்ணத்துடன், கைகள் இரண்டிலும் ஊன்றுகோல்களை வைத்துக்கொண்டு, மீண்டும் கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டார். மாற்றுத்திறனாளி என்பதால், போட்டிக்காக நடத்தப்படும் கால்பந்து விளையாட்டுகளில் பங்கெடுக்க இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆயினும் யீயீ அவர்கள் மனம் தளரவில்லை. அமெச்சூர் (Amateur) கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்றவேளைகளில், இவர் மட்டுமே மாற்றுத்திறனாளி. அச்சமயங்களில், பெற்ற வெற்றிகளைவிட சந்தித்த அவமானங்களே அதிகம். 2009ம் ஆண்டில், காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இடது காலை இழந்ததிலிருந்து, கடின பயிற்சியை மேற்கொண்ட இவர், 27 ஜோடி ஊன்றுகோல்களை இழந்திருக்கிறார். ஆயினும் சுயமாக இவர் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டார். இவர் விளையாடுவதை, காணொளியில் கண்டு, ‘விந்தை கால்பந்தாட்ட வீரர்’ என எண்ணற்ற இரசிகர்கள், இவரைப் பாராட்டி வருகின்றனர். யீயீ அவர்கள், தனது சொந்த நாடாகிய சீனாவிலும், ஐரோப்பாவிலும் நன்மதிப்பை பெற்றுள்ளார். சீன தேசிய கால்பந்தாட்ட பயிற்சியாளரான Marcello Lippi அவர்கள், யீயீ அவர்களை அழைத்திருக்கிறார். இலண்டன் English Premier League clubம் இவரை அழைத்திருக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2018, 14:36