தேடுதல்

Vatican News
2018ம் ஆண்டுக்கான ஜனாதிபதியின் 'நேஷனல் ரோல் மாடல்' விருதைப் பெறுகிறார், சீனிவாஸ் 2018ம் ஆண்டுக்கான ஜனாதிபதியின் 'நேஷனல் ரோல் மாடல்' விருதைப் பெறுகிறார், சீனிவாஸ் 

இமயமாகும் இளமை : இயலாமையில் சாதனை படைத்தவர்

பல்வேறு குறைபாடுகள் இருந்தும், நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்ததற்காக 2018ம் ஆண்டுக்கான ஜனாதிபதியின் 'நேஷனல் ரோல் மாடல்' விருது, சீனிவாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது

மேரி தெரேசா - வத்திக்கான்

நடக்க முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட, 26 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி ஸ்ரீராம் சீனிவாஸ் அவர்கள், நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்து, ஜனாதிபதியின் 'ரோல் மாடல்' விருது பெற்றுள்ளார். சென்னை, வடபழநியைச் சேர்ந்த ஸ்ரீராம் சீனிவாஸ் அவர்கள், பிறவியிலேயே, 90 விழுக்காடு நடக்க முடியாத, 83 விழுக்காடு மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. இவர் பத்து வயது வரை படுக்கையிலேயே இருந்தார். மற்றவர்கள் துணையின்றி எதுவும் இவரால் செய்ய முடியாது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி, இவரது பெற்றோர், தண்ணீரில் நடக்கும் பயிற்சியை அளித்தனர். அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை என்றாலும், கைகளால் நீந்த கற்றுக்கொண்டார். இதையடுத்து, சீனிவாஸ் அவர்கள், வாழ்க்கையில் புதிய விடியல் பிறந்தது. அவரை, பெற்றோர் ஊக்கப்படுத்தி, தொடர்ந்து நீச்சல் பயிற்சி அளித்தனர். இதன் பலனாக, நான்கு ஆண்டுகளுக்குமுன், கர்நாடகாவின், மாண்டியாவில் நடைபெற்ற, 25 மீட்டர் நீச்சல் போட்டியில், நான்காவது இடம் பெற்றார். இதனைத் தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கான தடகள போட்டிகளில் பங்கேற்று 11 விருதுகள், நீச்சல் போட்டியில் 12 விருதுகள் மற்றும், கடல் நீச்சல் போட்டிகளில் நான்கு விருதுகள் பெற்றுள்ளார், ஸ்ரீராம் சீனிவாஸ். 2019ம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி சுற்றுத்தேர்வு, கோவாவில் சில மாதங்களுக்குமுன் நடைபெற்றது. முதல் சுற்றில் 36 பேரில் ஒருவராக தேர்ச்சி பெற்ற சீனிவாஸ், இரண்டாவது சுற்றில் தேர்ச்சி பெறவில்லை. தேர்வு கமிட்டியினர், 'அவரால் சுயமாகச் செயல்பட முடியாது' என காரணம் கூறினர். இது குறித்து கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவர்களிடம் தெரிவித்தபோது, கடல் நீச்சல் போட்டியில், சீனிவாசஸை பங்கேற்க வைத்தார். கடந்த ஜூலையில், கடலுார் - புதுச்சேரி இடையே, கடலில் 5 கி.மீ.,யை, மூன்று மணி நேரம் 18 நிமிடங்களில் நீந்தி சீனிவாஸ் சாதனை படைத்தார். அண்மையில் டில்லியில் நடந்த விழாவில், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு அவர்கள், ஸ்ரீராம் சீனிவாஸ் அவர்களுக்கு இந்த விருதை வழங்கினார். (kalvikural.com)

13 December 2018, 14:33