தேடுதல்

Vatican News
காலநிலை மாற்றத்திற்கு எதிராக பிரசல்லஸில் பேரணி காலநிலை மாற்றத்திற்கு எதிராக பிரசல்லஸில் பேரணி 

இமயமாகும் இளமை : 11 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர்

நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சிறுமி Misimi அவர்கள், தனது நாட்டை சுற்றுச்சூழல் மாசுகேட்டினின்று பாதுகாக்கும் செயல்களை ஆற்றி வருகிறார்

மேரி தெரேசா - வத்திக்கான்

நைஜீரீயாவின் பெரிய நகரமான லாகோசில் (Lagos) "மிஸ் சுற்றுச்சூழல்" என தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொண்டு, தனது நாட்டை சுற்றுச்சூழல் மாசுகேட்டினின்று பாதுகாப்பதற்கு உறுதி எடுத்து செயலில் இறங்கியுள்ளார், அந்நாட்டு சிறுமி ஒருவர். 11 வயது நிரம்பிய Misimi Isimi என்ற சிறுமி, லாகோஸ் நகர் சாலைகளில் வீசப்படும் குப்பைகளை, ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்து வருகிறார். இவர், தனது ஒன்பதாவது வயதிலேயே, பள்ளிகளில், சிறார்க்கென பசுமை அமைப்பை உருவாக்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்த தனது ஆர்வம் பற்றி ஊடகங்களிடம் பேசியுள்ள Misimi அவர்கள், நான் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். லாகோஸ் நகரில் குப்பைகளை அகற்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணியில் இறங்கியுள்ளேன், சுற்றுச்சூழலையும், அதன் மாசுகேட்டினின்று மக்களையும், பாதுகாப்பது எனக்கு மிகவும் பிடித்த செயல், கழிவுப்பொருள்களை வைத்து, அழகான மலர்ச் சாடிகளைத் தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளார். வயதுவந்த சிலர், சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் பொறுப்பற்று நடந்து கொள்கின்றார்கள். இந்நகரில் சிலருக்கு, குப்பைகளைத் தரையில் வீசுவதென்றால் அவ்வளவு ஆசை. இவர்கள், நைலான், பிளாஸ்டிக் பொருள்கள், தகர டப்பாக்கள், மற்றும் பல கழிவுகளை, அவற்றுக்குரிய இடங்களில் போடுவதைவிட்டு, தரையில் வீசுகின்றனர். கழிவு என்று எதுவுமே இல்லை. எல்லாக் கழிவுகளையுமே குறைக்க முடியும், மறுமுறையும் பயன்படுத்த முடியும் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியும். சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றி, குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். அதனால் அவர்கள் வளர்ந்தபின்னர், சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்களாகச் செயல்படுவார்கள். கண்ட கண்ட இடங்களில் குப்பைகள் வீசப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு வீசப்படும்போது நோய்களும், கிருமிகளும் பரவி,  மக்களின் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்றும், இந்த 11 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் கூறியுள்ளார்.   

குழந்தை பருவத்திலேயே வலது கரத்தை இழந்துள்ள சிறுமி Misimi Isimi அவர்கள், ஒரு கரத்தால் ஆற்றிவரும் சேவை, காண்போர் அனைவருக்கும் தூண்டுதலாக அமைந்துள்ளது என செய்திகள் கூறுகின்றன.

போலந்து நாட்டின் Katowice  நகரில் தொடங்கியுள்ள, காலநிலை மாற்றம் குறித்த (COP24), உலக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்கள், தீர்க்கமான தீர்மானங்களை எடுப்பார்கள் என நம்புவோம்.

03 December 2018, 15:35