தேடுதல்

மாணவர்களுடன் ஆசிரியர் மாணவர்களுடன் ஆசிரியர் 

இமயமாகும் இளமை......... : புரியும் வழிகளில் பாடங்கள்

தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, வழக்கமான பாணியில் அல்லாமல், மாணவர்கள், தங்களுக்குத் தெரிந்த விதத்தில், படைப்பாற்றலோடு பதில் எழுத உதவும் புதிய தொழில் நுட்பம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மாணவர்களுக்குப் புரியக்கூடிய மொழியிலேயே பாடங்கள் இருந்தால் எப்படி இருக்கும்? இந்தக் கேள்விக்கு உரிய பின்னூட்டத்தை அனுபவரீதியாக உணர வைத்திருக்கிறார் ஆசிரியர் ஞா. பெர்ஜின்.

12-ம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் உள்ள கேள்விகளையும், அதற்கான பதில்களையும், ஆடியோ பதிவாக வைத்திருக்கிறார், பெர்ஜின். பதில்கள் வழக்கமான கட்டமைப்புக்குள் இல்லாமல், மாணவர்களுக்குப் புரிந்த மொழியில் எளிதாக விளக்கப்பட்டிருப்பதுடன், அந்த விளக்கத்துக்கு ஏற்ற வகையில், அனிமேஷன் படங்களையும் காணொளி காட்சிகளாக இணைத்திருக்கிறார்.

ஆடியோவைக் கேட்டுக்கொண்டே வீடியோ காட்சிகளையும் பார்க்கும் மாணவர்கள், கேள்விக்கான விளக்கத்தை தங்களுக்குப் புரிந்த மொழியில் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். இதனால் தேர்வில் கேட்கும் கேள்விகளுக்கு வழக்கமான பாணியில் இல்லாமல், தங்களுக்குத் தெரிந்த விதத்தில் படைப்பாற்றலோடு பதில் எழுத முடிகிறது. இதுதான் பெர்ஜின் தனது சுயமுயற்சியில் செய்திருக்கும் சாதனை.

குமரி மாவட்டத்தில், பார்வைத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக ஒலி வடிவில் புத்தகங்களை முதலில் உருவாக்கிக் கொடுத்தார் இவர். அதன் அடுத்த கட்டமாக இப்போது வீடியோவையும் சேர்த்து வழங்குகிறார்.

கேள்வி, பதில்களை ஒலி வடிவில் தனியாகக் கேட்கமுடியும் என்பதால், அலைபேசியில் பாட்டுக் கேட்பதுபோல் பாடங்களைக் கேட்கலாம். வீட்டில் இருக்கும்போது மடிக்கணினி வழியாக செய்முறை புரிதலோடு பாடங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.

“முன்பெல்லாம் பாடப் புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே வரி விடாமல் எழுத மட்டுமே தெரிந்திருந்த எங்கள் மாணவர்கள், இந்த முறையில், பாடங்களைப் படிக்க ஆரம்பித்த பிறகு, சொந்த நடையில் எழுதும் அளவுக்கு தேர்ந்துவிட்டார்கள்” எனப் பெருமிதம் கொள்கிறார், ஆசிரியர் ஞா. பெர்ஜின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2018, 15:23