சிறிய உணவு விடுதியில் உணவு தயாரிப்பு சிறிய உணவு விடுதியில் உணவு தயாரிப்பு 

இமயமாகும் இளமை : ஓர் உணவக முதலாளியின் கதை

தன்னைக் கைதூக்கி விட்டவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என விரும்புவோர், அவர்களின் நற்செயல் வழிவழியாய்த் தொடர உதவட்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

அவர் பெயர் முருகன். சிறு வயதில், உண்ண வழியின்றி, வேலை தேடி, நகருக்கு வந்தவர். ஓர் இடைத்தர உணவகத்தில் சின்ன வேலையும் கிடைத்தது. முதலாளியும், ஒரு நிபந்தனையுடன் சேர்த்துக்கொண்டார். அத்தியாவசியம் தவிர, வேறு எந்த செலவுக்கும், காசு கேட்கக்கூடாது என்பதே, அந்நிபந்தனை. பசியால் வாடி வதங்கியிருந்த முருகனுக்கு, அப்பொழுது, உணவு மட்டுமே தேவையாயிருந்தது. அதற்குப் பிறகு, அவர் தன்னை முழுமையாக வேலையில் ஈடுபடுத்திக்கொண்டார். இடையில், ஊருக்கு போகவேண்டும் என்று, அவர், எவ்வளவோ தடவைகள் கேட்டும், முதலாளி பணம் தரவில்லை. ஒருவேளை சோறு போடக் கூட வழியின்றி உன்னை விரட்டியடித்த ஊருக்கு நீ ஏன் செல்கிறாய் என்று, முருகனை அடக்கி, அமைதியாக இருக்க வைத்தார்.

வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் கடந்தபின், ஒரு நாள் முதலாளி முருகனை அழைத்தார். அதிக ஓட்டல் இல்லாத, ஆனால் பரபரப்பு நிறைந்த ஒரு இடத்திற்குக் கூட்டிச்சென்று, புதியக் கடையை பார்த்தார். கடைக்கு முன்பணம் கொடுத்தார். கடை ஆரம்பமாக நாள் குறிக்கப்பட்டது. ஐந்து நாள் முன் அவர் முருகனை அழைத்து, கடைச் சாவியை கொடுத்து, “நீதான் முருகா கடைக்குச் சொந்தக்காரன்” என்றார். “முதலாளி, என்ன இது? திடீரென்று இப்படி சொல்கிறீர்கள்?” என்று கேட்ட முருகனிடம், “உன்னுடைய பணம்தான் முருகா. அதில், எனது பங்கும் கொஞ்சம் இருக்கிறது. அது, உன்பால் நான் வைத்திருக்கும் அன்பின் சிறிது சன்மானம். அவ்வளவுதான். நீ உன்னுடைய உறவுக்காரர்களை கடை திறப்பு விழாவிற்கு தற்பொழுது அழைத்து உபசரி. பிறகு தானாக எல்லாம் நடக்கும்” என்றார். அப்படியே கடை திறப்பு விழாவும் தடபுடலாக இருந்தது. ஆனால், அவர் சொன்ன ஒரு தாரக மந்திரம் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

“உனக்காக மட்டும் வாழாதே, உன்னை நம்பியிருக்கும் அனைவரையும் வாழ வை” என்று தன் முதலாளி சொன்னதை, இன்றுவரை கடைபிடித்து வருகிறார், புது முதலாளி முருகன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2018, 14:25