தேடுதல்

இந்தியாவில் டெடி பியர் பொம்மைகள் கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் அலங்காரம் இந்தியாவில் டெடி பியர் பொம்மைகள் கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் அலங்காரம் 

இமயமாகும் இளமை... : ஒரு மாற்றுத்திறனாளிப் பெண்ணின் சாதனை!

என்னையொத்தவர்கள் யாரும் தொடாத உயரத்தை நான் அடைவேன் என்கிற, இலட்சிய வெறியில் ஊறிப்போய், அதை உண்மையாக்கிய மாற்றுத்திறனாளி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஜெர்மனியின், ஜியென்ஜென் நகரத்தில், 1847ம் ஆண்டு பிறந்தவர் மார்கரெட் ஸ்டீஃப். ஒன்றரை வயதில், போலியோ நோயினால் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டன. வலது கையை ஓரளவுக்கு மேல் தூக்கவே முடியவில்லை. இருப்பினும், ஐந்து வயதில் பெற்றோரிடம் அடம்பிடித்துப் பள்ளியில் சேர்ந்த மார்கரெட்டுக்கு, தன்மேல் நம்பிக்கையிருந்தது. `என் வயதில், என் ஊரில், என் நண்பர்களில் யாரும் தொடாத உயரத்தை நான் அடைவேன்’ என்கிற இலட்சிய வெறி அவருக்குள் ஊறிப்போயிருந்தது. பள்ளிப் படிப்பை முடித்த மார்கரெட்டுக்கு, தையல்கலையில் அதீத ஆர்வம் இருந்ததால், ஒரு தையல் பள்ளியில் சேர்ந்தார். மார்கரெட்டும் அவருடைய சகோதரியும் இணைந்து ஜியென்ஜென் நகரில் ஒரு தையற்கடையை ஆரம்பித்தார்கள். மார்கரெட்டின் திறமையால் அது ஒரு ரெடிமேட் துணிகளை விற்கும் கடையாக உயர்ந்தது.

1880ம் ஆண்டு மார்கரெட்டுக்கு ஒரு யோசனை வந்தது. `இப்படி வெறுமனே காலம் முழுக்க உடைகளைத் தைத்து, தயாரித்துக்கொடுக்க வேண்டுமா என்ன? புதிதாக எதையாவது முயற்சி செய்து பார்க்கலாமே!’ என்று. அந்தக் காலத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு மரங்களால் அல்லது பீங்கானால் செய்த பொம்மைகள்தான் அதிகமிருந்தன. ஒரு குழந்தை நெஞ்சோடு வைத்து தாலாட்டி விளையாட, எளிதாகக் கையாள ஒரு பொம்மைகூட இல்லை.

அப்படி ஒரு மென்மையான பொம்மையைத் தயாரித்தால் என்ன என்று நினைத்தார் மார்கரெட். உடனே துணியால், உள்ளே பஞ்சு அடைத்த ஒரு யானை பொம்மையைச் செய்ய ஆரம்பித்தார். துணியும் பஞ்சும் சேர்ந்த விதவிதமான சிங்கம், எலி, புலி... உள்ளிட்ட பொம்மைகளைச் செய்ய ஆரம்பித்தார் மார்கரெட். படிப்படியாக பொம்மைத் தயாரிப்புத் தொழில் வளர்ந்தது. மார்கரெட்டின் மகன் ரிச்சர்டு ஒரு பொம்மையை வடிவமைத்தார். அதுதான் இன்றைக்கு உலகம் முழுவதும் இருக்கும் குழந்தைகள் விரும்பும் டெடி பியர் (Teddy bear). அப்போது அமெரிக்க அதிபராக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட்டின் நினைவாக, அந்த பொம்மைக்கு `டெடி பியர்’ எனப் பெயர் அமைந்தது.

மிக உயர்ந்த தரத்திலான பொருள்களைக் கொண்டுதான் அவர் பொம்மைகளைத் தயாரித்தார். பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக அதை ஓர் இலட்சியமாகவே வைத்திருந்தார் மார்கரெட். இவர் தனது 62-ம் வயதில் காலமானார். ஆனால், அவர் தொடங்கிய `ஸ்டீஃப் டெடி பியர்ஸ்’ (Steiff teddy bears) நிறுவனம், இன்றைக்கும் இலண்டனில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2018, 15:12