நலமின்றி வாடும் பிரேசில் குழந்தை நலமின்றி வாடும் பிரேசில் குழந்தை 

சாவின் பிடியிலுள்ள 3 கோடிக் குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டும்

புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் நலவாழ்வில் கவனம் செலுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியம். இதனால் வருங்காலத் தலைமுறைகள் பாதுகாக்கப்படும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வோர் ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில், நான்கில் ஒரு பகுதியினர், அதாவது ஏறத்தாழ மூன்று கோடி குழந்தைகள், குறைமாதத்தில், அல்லது எடை குறைவாகப் பிறக்கின்றனர் மற்றும் பிறந்தவுடனேயே நோயால் தாக்கப்படுகின்றனர் என்று, ஐ.நா. நிறுவனங்கள் கூறியுள்ளன.

இந்தக் குழந்தைகள், பிறந்த ஒரு மாதத்திற்குமேல் உயிர்வாழ்வதற்கு, சிறப்பு கவனம்   அளிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நா.வின் யுனிசெப் மற்றும் உலக நலவாழ்வு நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகின்றது.

தாய்-சேய் நலம் என்று வரும்போது, சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான கவனிப்பு தேவைப்படுகின்றது என்றும், சரியான நேரத்தில் உதவிகள் வழங்கப்படாததால், ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான குழந்தைகளும், அன்னையரும் இறக்கின்றனர் என்றும், யுனிசெப் உதவி இயக்குனர், Omar Abdi அவர்கள் கூறினார்.

புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களின் அன்னையர் நலவாழ்வில் கவனம் செலுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியம் எனவும், இதனால் வருங்காலத் தலைமுறைகள் பாதுகாக்கப்படும் எனவும், உலக நலவாழ்வு நிறுவனத்தின் உயர் அதிகாரி Soumya Swaminathan அவர்கள் கூறினார்.

2017ம் ஆண்டில் ஏறத்தாழ 25 இலட்சம் குழந்தைகள், பெரும்பாலும் தடுத்து நிறுத்தக்கூடிய நோய்களால் இறந்துள்ளனர். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2018, 14:16