தேடுதல்

Vatican News
மத்திய ஆப்ரிக்க குடியரசில், யுனிசெப் முகாமில் விளையாடும் குழந்தைகள் மத்திய ஆப்ரிக்க குடியரசில், யுனிசெப் முகாமில் விளையாடும் குழந்தைகள்  (© Notice: UNICEF photographs are copyrighted and may not be reproduced in any medium without written permission from authorized)

ஆயுதக் குழுக்களிடமிருந்து சிறார் காப்பாற்றப்பட வேண்டும்

மத்திய ஆப்ரிக்க குடியரசில், ஏறத்தாழ எல்லாச் சிறாரும் ஆயுதக் குழுக்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் - யுனிசெப்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சண்டை இடம்பெற்றுவரும் மத்திய ஆப்ரிக்க குடியரசில், அந்நாட்டின் சிறார், ஆயுதக் குழுக்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளவேளை, அச்சிறார் பாதுகாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்று, யுனிசெப் அமைப்பு கூறியுள்ளது.

ஆயுதக் குழுக்கள், மத்திய ஆப்ரிக்க குடியரசின் ஐந்தில் ஒரு பகுதியை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்வேளை, அந்நாட்டில் சிறாரின் வருங்காலம் கடினமானதாகவும், ஆபத்து நிறைந்ததாகவும் மாறியுள்ளது எனவும், யுனிசெப் அமைப்பு எச்சரித்துள்ளது.

“மத்திய ஆப்ரிக்க குடியரசில் நெருக்கடிநிலை : புறக்கணிக்கப்பட்ட அவசரகாலநிலையில் சிறாருக்கு உதவியும் பாதுகாப்பும்” என்ற தலைப்பில், புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, ஐ.நா.வின் யுனிசெப் குழந்தை நல அமைப்பு, ஆயிரக்கணக்கான சிறார், ஆயுதக் குழுக்களின் பாலியல் வன்முறையில் சிக்கியுள்ளனர், மேலும் ஆயிரக்கணக்கான சிறார், அந்நிலைக்கு உள்ளாகும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளது.

மத்திய ஆப்ரிக்க குடியரசில், ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் ஒருபுறமிருக்க, அந்நாட்டில் 15 இலட்சம் சிறார்க்கு, உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றும், நான்கு சிறார்க்கு ஒருவர், புலம்பெயர்ந்துள்ளனர் அல்லது குடிபெயர்ந்துள்ளனர் என்றும், யுனிசெப் கூறியுள்ளது. (UN)

01 December 2018, 14:55