தேடுதல்

Vatican News
காந்திஜியை போற்றும் இந்திய சிறார் காந்திஜியை போற்றும் இந்திய சிறார்  (ANSA)

வாரம் ஓர் அலசல் – உலக சிறார் நாள் நவம்பர் 20

சிறாரின் நல்வாழ்வை மேம்படுத்தவும், உலக அளவில் சிறார் மத்தியில் ஒன்றித்த வாழ்வை ஊக்குவிக்கவுமென, 1954ம் ஆண்டில் உலகளாவிய சிறார் நாளை ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கியது

மேரி தெரேசா& அருள்பணி ஜோஸ் – வத்திக்கான்

நம் குழந்தைகள் சிறந்ததொரு வருங்காலத்தைக் கொண்டிருக்கும்பொருட்டு இன்றைய நம் காலத்தைத் தியாகம் செய்வோம் என்று சொன்னார், இந்திய முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள். சிதைந்த மனிதர்களைச் சீர்படுத்துவதைவிட, உறுதியான குழந்தைகளை உருவாக்குவது எளிது என்றார், Frederick Douglass. ஆனால், ஒரு நாட்டின் செல்வங்களாகிய இவர்கள், சில நேரங்களில் உறவினர்கள், நண்பர்கள், வீடு, பள்ளி என பல இடங்களில் அச்சுறுத்தல்களை சந்திக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20ம் தேதி உலக சிறார் நாள் சிறப்பிக்கப்பட வேண்டுமென ஐ.நா. நிறுவனம் உலகினரைக் கேட்டுக்கொண்டது. 1959ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி, சிறாரின் உரிமைகள் குறித்த அறிக்கையை ஐ.நா. பொது அவை ஏற்றுக்கொண்டது. மேலும், 1989ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதிதான், ஐ.நா. பொது அவை, சிறாரின் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தையும் ஏற்றது. 1990ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் இவ்விரு நிகழ்வுகளும் நவம்பர் 20ம் தேதி நினைவுகூரப்படுகின்றன. ஆதலால் நவம்பர் 20, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்படும் இந்த உலகளாவிய சிறார் நாளை, உலகில் எல்லா அன்னையர், தந்தையர், ஆசிரியர்கள், மருத்துவர்கள், அரசுத் தலைவர்கள், சமயத் தலைவர்கள், சமூகத்தில் மூத்தவர்கள், இளையோர் ஆகிய அனைவருமே சிறப்பித்து, சமூகங்களிலும் நாடுகளிலும் சிறாரின் முக்கியத்துவத்தை உணருமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றனர். மேலும், நவம்பர் 19, இத்திங்களன்று, உலக சிறார் மீதான வன்கொடுமை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. குழந்தைகளை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல், வார்த்கைளாலோ அல்லது உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலோ அவர்களிடம் நடந்துகொள்வது ஆகியவை அவர்கள் மீதான வன்கொடுமையாக பார்க்கப்படுகிறது. தவிர பாலர் திருமணம், பாலர் தொழிலாளர் முறை, சிசுக்கொலை ஆகியவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் கடந்த ஆண்டு, 2 முதல் 17 வயதுக்குட்பட்ட ஏறத்தாழ நூறு கோடி குழந்தைகள், பாலியல் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உலக நாள்களையொட்டி தன் எண்ணங்களை இன்றைய வத்திக்கான் வானொலி நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்கிறார், அருள்பணி ஜோஸ் அவர்கள். குளித்துறை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி ஜோஸ் அவர்கள், நமது குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது நம் எல்லாரின் கடமை எனச் சொல்கிறார்

வாரம் ஓர் அலசல் – உலக சிறார் நாள் நவம்பர் 20
19 November 2018, 14:32