தேடுதல்

திருப்பூர் தாயம்மாள்(77) நட்டு வளர்த்துள்ள 500 மரங்கள் திருப்பூர் தாயம்மாள்(77) நட்டு வளர்த்துள்ள 500 மரங்கள்  

வாரம் ஓர் அலசல் – மரங்களின் மகத்துவம் உணர்வோம்

2017ம் ஆண்டு வறட்சி ஏற்பட்ட போது, 1.50 இலட்சம் ரூபாய்க்கு தண்ணீர் வாங்கி ஊற்றி, மரங்களையும், தென்னை மரத்தையும் காப்பாற்றினேன் - 77 வயது திருப்பூர் தாயம்மாள்

மேரி தெரேசா - வத்திக்கான்

அண்மையில் வங்கக்கடலில் உருவாகிய கஜா புயல், தமிழகத்தை, குறிப்பாக, தஞ்சை, நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களை மிகவும் மூர்க்கமாகவே தாக்கியுள்ளது. இப்புயல், நான்கு தலைமுறையாகச் சேர்த்த சொத்துகளை அழித்துவிட்டது மற்றும் அம்மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட, டெல்டா மாவட்டங்களில், மூன்றாவது நாளாக, நவம்பர் 26, இத்திங்களன்று ஆய்வு செய்து வரும் மத்திய அரசு குழுவினர், சேதங்களைப் பார்த்து மலைத்து போய், தாங்கள் கற்பனை செய்ததைவிடவும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். அதேநேரம், கஜா புயலால் மரங்களைத்தான் வீழ்த்த முடிந்தது. மனிதத்தை அல்ல என்ற வகையில், அடையாளமற்ற ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள், முன்பின் அறிமுகமில்லாத மனிதர்களின் துயர்துடைக்க இரவு பகல் பாராமல், உணவு உறக்கம் மறந்து களத்தில் நிற்கிறார்கள். ஒரு விளக்கைக் கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்றி, ஒளி பரவச் செய்ய முடியும் என்பதை இயற்கைப் பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்கள் உறுதி செய்கின்றனர். ‘இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை’ என்று தவித்து நிற்கும் டெல்டா மாவட்ட மக்களிடம், ‘மீண்டு வருவோம்’ என்ற நம்பிக்கையை, இவர்கள் விதைத்து வருகின்றனர் என்று, தி இந்து நாளிதழ் கூறியுள்ளது.   

தமிழ்நாடு, இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, சுனாமி, வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ. இது இந்தியாவில் உள்ள கடற்கரைகளில் பதினைந்து விழுக்காடு. 2004ம் ஆண்டில் தமிழக கடலோரப் பகுதிகளைத் தாக்கிய சுனாமி, பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு, பெரும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது. இரண்டாயிரமாம் ஆண்டு புயல், 2005ல் ஃபானூஸ், 2008ல் நிஷா, 2010ல் ஜல், 2011ல் தானே, 2012ல் நிலம், 2016ல் வர்தா, 2017ல் ஒக்கி, 2018ல் கஜா என, இந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து இப்போதுவரை, ஒன்பது புயல்கள் தமிழகத்தைத் தாக்கியிருக்கின்றன. இவை தவிர, 2015ம் ஆண்டில் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஏறத்தாழ 650 உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள் இழப்பையும் ஏற்படுத்தியது. ஒவ்வொரு புயலின்போதும் மாநிலத்தின் எட்டு விழுக்காடு மக்கள், கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இவற்றைத் தவிர, தமிழகத்தில், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்பட்டுவரும் வறட்சி, விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கிறது என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் பெரும்பாலானவை, கடலரிப்பால் பாதிப்பிற்குள்ளான நிலையிலேயே இருக்கின்றன. இவை தவிர, கடல்நீர் உட்புகுவது, வெப்ப அலை, காட்டுத் தீ, நிலச்சரிவு, நிலநடுக்கம் ஆகியவையும் தமிழகம் எதிர்கொள்ளும் பேரிடர்களாக இருக்கின்றன. கடந்த நூற்றாண்டிலிருந்து இப்போதுவரை புயல்களைச் சந்தித்த ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு, அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு என்று, ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில், பேரிடர்களுக்கென மாநில அரசு ஒரு முழுமையான கொள்கைத் திட்டத்தை வடிவமைத்து, செயல்பட வேண்டும் என்கிறார், பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பை சேர்ந்த, சுந்தர்ராஜன் அவர்கள். மேலும், உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல அமேசான் மழைக் காடுகளில் 7,900 சதுர கிலோ மீட்டர் அளவு, 2017ம் ஆண்டு ஆகஸ்ட் முதல், 2018ம் ஆண்டு ஜூலை வரையிலான ஓராண்டு காலக்கட்டத்தில் மட்டும் அழிக்கப்பட்டுவிட்டனவாம். இந்த அழிவு, இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலக்கட்டத்தைவிட 13.7 விழுக்காடு அதிகம் என, பிரேசில் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த வெள்ளியன்று வெளியிட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், தென் அமெரிக்காவிலுள்ள அமேசான் பருவமழை காடுகளில் பெரும்பகுதி பிரேசில் எல்லைக்குள்தான் உள்ளன.

காலநிலை மாற்றம் குறித்து அறிவியலாளர்கள் தொடர்ந்து எச்சரித்துவரும்வேளை, ஐக்கிய நாடுகள் நிறுவனமும், இம்மாற்றத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடுகளை வலியுறுத்தி வருகின்றது. டிசம்பர் 2, வருகிற ஞாயிறன்று போலந்து நாட்டின் Katowice நகரில், சுற்றுச்சூழல் உலக உச்சி மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது ஐ.நா. நிறுவனம்.  இவ்விவகாரம் குறித்து 24வது முறையாக இடம்பெறவுள்ள இந்த உலக மாநாட்டில், உலகளாவிய வெப்பநிலையை, 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக, முடிந்தால் 1.5 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக மாற்றும் வழிமுறைகள் பற்றி, நாடுகள் கலந்துரையாடவிருக்கின்றன. காலநிலை மாற்றம் குறித்து, 2015ம் ஆண்டில் பாரீஸ் மாநாட்டில் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தில், புவியின் வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்சமயம் அதற்கு எதிராக, புவியின் வெப்ப அதிகரிப்பு, 3 டிகிரி செல்சியஸ் அளவை நோக்கிச் செல்வதாக, ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால், காலநிலை மேலும் பாதிப்படையாமல் இருக்க வேண்டுமென்றால், புவியின் வெப்ப அதிகரிப்பு 1.5 செல்சியசுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.  இந்நிலையை எட்டுவதற்கு, நிலத்தை நிர்வகிப்பதில், எரிசக்தி பயன்பாட்டில் மற்றும் போக்குவரத்தில் நாம் பல மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறார், காலநிலை மாற்றம் குறித்த, அரசுகளுக்கிடையேயான ஐ.நா. குழுவின் (UN Intergovernmental Panel on Climate Change (IPCC) இணைத் தலைவர், பேராசிரியர் Jim Skea. இந்நிலையை அடைவதற்கு, 2030ம் ஆண்டுக்குள் புவியில் வெளியேற்றப்படும் வெப்பம், 45 விழுக்காடு குறைய வேண்டும். சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் மின்சாரம், காற்றாலை மின் உற்பத்தி போன்ற புதுப்பிக்கத்தக்க வளங்கள் வழியாகப் பெறப்படும் மின்சாரம், 2050ம் ஆண்டுக்குள் 85 விழுக்காடாக இருக்க வேண்டும். நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் குறைக்க வேண்டும். எரிசக்தி உற்பத்திக்கு உதவும் பயிர் வகைகளுக்காக எழுபது இலட்சம் சதுர கிலோ மீட்டர் நிலம் இருக்க வேண்டும். இந்நடவடிக்கைகள் இடம்பெறவில்லையெனில், உலகம் ஆபத்தான சூழலை எதிர்நோக்கும். இரண்டு டிகிரி செல்சியசுக்குமேல் வெப்பம் உயர்ந்தால், கடல் நீரின் வெப்பம் அதிகரித்து பவளப் பாறைகள் காணாமல் போய்விடும். அதேபோல, கடலின் நீர்மட்டம் 10 சென்டிமீட்டர் அளவிற்கு உயரும். இதனால் உலகின் பல இடங்களில் ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் வாழுமிடத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும். கடலின் வெப்பநிலை மற்றும் அமிலத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு, நெல், சோளம் மற்றும் கோதுமைப் பயிர்கள் வளர்வதில் தாக்கம் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பருவநிலை மாற்றம் குறித்த அச்சம் நிலவும்வேளை, மரங்களையும், வனப்பகுதிகளையும் பாதுகாப்பதற்கு, தனிமனிதர்களாக, சிலர் முயற்சித்து வருகின்றனர். சுற்றுச்சூழல் ஆர்வலரான, Farwiza Farhan அவர்கள், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள Leuser வனப்பகுதியை பாதுகாப்பதற்காகப் போராடி வருகிறார். இவர் ஆரம்பித்த, யாயசான் ஹக்கா (Yayasan HAkA) எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம், 2012ம் ஆண்டில் Leuser வனப்பகுதியில், பனை எண்ணெய்யை எடுப்பதற்கு சட்டவிரோதமாக அனுமதி வாங்கிய நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து அதற்கெதிராகப் போராடியது. சுரண்டலும், நிலையற்ற வளர்ச்சித் திட்டங்களும் லுசர் வனப்பகுதி சூழியல் அமைப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. உலகின் மிகவும் இலாபகரமான பயிர்களில் ஒன்றான, பனை எண்ணெயை இங்கு உற்பத்தி செய்வதற்கு மிகப் பெரிய நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அப்படி நடக்குமானால் மிகவும் மோசமான நிலையிலுள்ள வனப்பகுதிகள் முழுமையாக அழிவுறும் என்று, பார்விசா ஃபர்ஹான் அவர்கள், பிபிசி ஊடகத்திடம் கூறியுள்ளார். ஒராங்குட்டான்கள், காண்டா மிருகங்கள், யானைகள், புலிகள் ஆகிய இவையனைத்தும் இணைந்து வாழும் காடு, உலகில் இந்த வனப்பகுதியில் மட்டுமே உள்ளது.

மேலும், 77 வயது நிரம்பிய தாயம்மாள் என்பவர், 'வனத்துக்குள் திருப்பூர்' எனப்படும் திட்டத்தில் இணைந்து, 500 மரக்கன்றுகளை, பெற்ற குழந்தைகளைப்போல் வளர்த்து வருகிறார். தமிழகத்தின் பொங்கலுார் அருகே நாராயணநாயக்கன்புதுாரைப் பூர்வீகமாகக் கொண்டவர் தாயம்மாள். அரசு பள்ளி ஆசிரியராக, 37 ஆண்டுகள் பணிபுரிந்து, சொந்த ஊரில், 1989ம் ஆண்டில், பத்து ஏக்கர் நிலம் வாங்கி, சீர்திருத்தி, அதைத் தென்னந்தோப்பாக இவர் மாற்றியுள்ளார். சொட்டுநீர் கட்டமைப்பை ஏற்படுத்தி, 500 மரக்கன்றுகளை நட்டுள்ள இவர், மகன், மகளுக்குப்பின், இம்மரங்கள் எனக்கு மூன்றாவது குழந்தைகள் என்று நெகிழ்ச்சியுடன் தினமலர் இதழிடம் கூறியுள்ளார். கடந்த ஆண்டு வறட்சி ஏற்பட்ட போது, 1.50 இலட்சம் ரூபாய்க்கு தண்ணீர் வாங்கி ஊற்றி, மரங்களையும், தென்னை மரத்தையும் காப்பாற்றினேன் எனவும் தாயம்மாள் அவர்கள் கூறியுள்ளார்.

இவ்வாறு, தொண்டு நிறுவனங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். எனவே நாமும், மண்ணின் மகத்துவத்தையும், வளி மண்டலத்தையும் துாய்மையாகக் காப்பாற்றி, வருங்கால தலைமுறையினருக்குக் கொடுப்பதே, நம் ஒவ்வொருவரின் கடமை என்பதையும், மரங்கள் வளர்ப்பதன் மகத்துவத்தையும் உணர்வோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2018, 14:38