மகளிர் குத்துச்சண்டை போட்டியில், ஆறாவது முறையாக தங்கம் வென்று, உலக சாதனை படைத்துள்ள மேரி கோம் மகளிர் குத்துச்சண்டை போட்டியில், ஆறாவது முறையாக தங்கம் வென்று, உலக சாதனை படைத்துள்ள மேரி கோம் 

இமயமாகும் இளமை - உலக சாதனை படைத்த இந்திய இளம் தாய்

மகளிர் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் அவர்கள், ஆறாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றதன் வழியே, உலக அளவில், ஆறு முறை தங்கப் பதக்கத்தை வென்றுள்ள முதல் பெண் என்ற உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் மேரி கோம் (Mary Kom Hmangte) அவர்கள், அனைத்துலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில், ஆறாவது முறையாக தங்கம் வென்று, உலக சாதனை படைத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற அனைத்துலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் அவர்கள், ஆறாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றதன் வழியே, உலக அளவில், ஆறு முறை தங்கப் பதக்கத்தை வென்றுள்ள முதல் பெண் என்ற உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.

இதற்கு முன்னதாக, மேரி கோம், மற்றும், அயர்லாந்து நாட்டைச் செர்ந்த, கேட்டி டெய்லர் (Katie Taylor) ஆகிய இரு பெண்களும், ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றதே, உலக சாதனையாக இருந்தது.

அனைத்துலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில், 2002ம் ஆண்டு, தன் 19வது வயதில், முதல்முறையாக தங்கம் வென்ற கோம் அவர்கள், அதற்குப் பின்னர், 2005, 2006, 2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் தங்கம் வென்றுள்ளார்.

நவம்பர் 24ம் தேதி, சனிக்கிழமை நடந்த போட்டியில், மேரி கோம் அவர்கள், உக்ரைன் வீராங்கனை ஹன்னா ஒகோடா (Hanna Okhota) அவர்களை, வென்று ஆறாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றார். 35 வயதாகும் மேரி கோம் அவர்கள், 22 வயதாகும் ஹன்னா அவர்களைவிட 13 வயது மூத்தவர் என்பதும், அவர், மூன்று குழந்தைகளின் தாய் என்பதும், குறிப்பிடத்தக்கன.

மணிப்பூரைச் சேர்ந்த, டிங்கோ சிங் (Dingko Singh) என்ற இளையவர், 1998ம் ஆண்டு, பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், குத்துச் சண்டையில் தங்கம் வென்றது, குத்துச் சண்டை பயிலவேண்டும் என்ற ஆர்வத்தை, தனக்குள் உருவாக்கியது என்பதை, மேரி கோம் அவர்கள், பலமுறை, வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இலண்டனில், 2012ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோம் அவர்கள், 2014ம் ஆண்டு, தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தங்கம் வென்றார்.

இந்தியாவில் விளையாட்டுத்துறைக்காக வழங்கப்படும் உயரிய வருதான ராஜிவ் காந்தி கேல் இரத்னா விருதையும், பத்மபூஷன் விருதையும், மேரி கோம் அவர்கள் பெற்றுள்ளார். (பி.பி.சி. தமிழ்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2018, 14:29