தேடுதல்

தொமினிக்கன் குடியரசு நாட்டில், சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடியதால் கொலை செய்யப்பட்ட ‘மிரபால்’ (Mirabal) சகோதரிகள் தொமினிக்கன் குடியரசு நாட்டில், சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடியதால் கொலை செய்யப்பட்ட ‘மிரபால்’ (Mirabal) சகோதரிகள்  

இமயமாகும் இளமை - சர்வாதிகாரியை எதிர்த்த சகோதரிகள்

தொமினிக்கன் குடியரசு நாட்டின் சர்வாதிகாரியாக ஆட்சி செய்த இரஃபயேல் துருஹீயோவுக்கு எதிராகப் போராடிய பலரில், பாத்ரியா, மினர்வா, தெரேசா என்ற மூன்று சகோதரிகள் முக்கியமானவர்கள்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

1960ம் ஆண்டு, நவம்பர் 25ம் தேதி, தொமினிக்கன் குடியரசு நாட்டில் மூன்று இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டனர். அந்நாட்டின் சர்வாதிகாரியாக ஆட்சி செய்த இரஃபயேல் துருஹீயோவின் (Rafael Trujillo) கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய பலரில், பாத்ரியா (36 வயது), மினர்வா (34 வயது), தெரேசா (25 வயது) என்ற மூன்று சகோதரிகள் முக்கியமானவர்கள். ‘மிரபால்’ (Mirabal) என்றழைக்கப்பட்ட இச்சகோதரிகளில் மூத்தவரான பாத்ரியா அவர்கள், "ஊழலும், அடக்குமுறையும் நிறைந்த இந்த கொடுங்கோலனிடம் நம் குழந்தைகள் வளர்வதை நாம் அனுமதிக்க முடியாது. என் உயிரே போனாலும் பரவாயில்லை. இதை நான் அனுமதிக்கமாட்டேன்" என்று கூறியிருந்தார். அந்தச் சூளுரைக்கு ஏற்ப, சகோதரிகள் மூவரும், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் போராடி வந்தனர்.

1960ம் ஆண்டு, நவம்பர் 25ம் தேதி, இம்மூன்று சகோதரிகளும், சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்கள் கணவர்களைச் சந்தித்துவிட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். துருஹீயோவின் கூலிப்படையினர் காரை வழிமறித்து, அம்மூவரையும், கழுத்தை நெரித்து கொன்றபின், காரில் அவர்களை அமரவைத்து, அந்தக் காரை, மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டனர். அம்மூன்று சகோதரிகளும் விபத்தில் இறந்தனர் என்ற செய்தியை கூலிப்படையினர் பரப்பினர். இம்மூன்று சகோதரிகளைப்போல், 30,000த்திற்கும் அதிகமானோர், துருஹீயோவின் சர்வாதிகார ஆட்சியில் கொல்லப்பட்டனர். துருஹீயோவின் மரணத்திற்குப் பின், இந்தக் கொலைகளைப்பற்றிய உண்மைகள் வெளிவந்தன.

இம்மூன்று இளம்பெண்களின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 25ம் தேதி, பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 November 2018, 14:10