நேபாளத்தில் அனாதைக் குழந்தைகளுக்கு கல்வி வழங்கிவரும் மேகி டோய்ன் நேபாளத்தில் அனாதைக் குழந்தைகளுக்கு கல்வி வழங்கிவரும் மேகி டோய்ன் 

இமயமாகும் இளமை – இருநூறு குழந்தைகளின் தாயான இளம்பெண்

32 வயதான இளம்பெண் மேகி டோய்ன் (Maggie Doyne) அவர்கள், தற்போது, நேபாளத்தில், 200க்கும் அதிகமான அனாதைக் குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகிறார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ ஜெர்சி மாநிலத்தில், 1986ம் ஆண்டு பிறந்த மேகி டோய்ன் (Maggie Doyne) அவர்கள், தன் 18வது வயதில், பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, கல்லூரி படிப்பைத் தொடர்வதற்குமுன், ஓராண்டு விடுமுறை எடுத்து, உலகைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினார். இந்தியாவுக்கு வந்து சேர்ந்த இளம்பெண் மேகி அவர்கள், இமயமலை அடிவாரத்தில் தனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்துள்ளார்:

"நான் ஒரு நாள், சாலையில் நடந்து சென்ற வேளையில், ஒரு சிறுமி, அவளது வயதுக்கு மீறிய சுமையை, முதுகில் சுமந்தவண்ணம் எனக்கெதிரே வந்தாள். என்னைக் கண்டு மிக அழகாகப் புன்னகை செய்தாள். அவளது பெயர் இலக்கோரா (Lacora) என்பதையும், அவள் ஓர் அனாதை என்பதையும் அறிந்தேன். அச்சிறுமி, ஒவ்வொரு நாளும் ஊருக்குள் சென்று, பேருந்தில் வந்திறங்கும் பொருள்களை, மலையுச்சியில் இருக்கும் தன் கிராமத்திற்கு எடுத்துச் சென்றாள். ஒருநாளில், இரண்டு, அல்லது, மூன்று முறை அவ்வாறு சுமைகளை எடுத்துச்செல்லும் அச்சிறுமி, தனக்குக் கிடைக்கும் 1 அல்லது 2 டாலர் ஊதியத்தைக் கொண்டு, தன் தம்பி, தங்கைக்கு உணவளித்து வந்தாள். அவளது நிலையைக் கண்டு என் மனம் சுக்கு நூறானது. நேபாளத்தில் நிகழ்ந்துவந்த உள்நாட்டு போரினால், இலக்கோரா போன்ற பல்லாயிரம் குழந்தைகள், அனாதைகளாக வாழ்கின்றனர் என்பதை அறிந்தேன். அதேபோல் உலகெங்கிலும், 8 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் அனாதைகளாக வாழ்கின்றனர் என்பதையும் அறிந்துகொண்டேன். இவ்வளவு பெரிய கொடுமையை என்னால் எப்படி தீர்க்கமுடியும் என்று மலைத்து நின்றேன்.

மற்றொரு நாள், ஹீமா (Hima) என்ற 7 வயது சிறுமியைச் சந்தித்தேன். அச்சிறுமி, சாலையின் ஓரத்தில் கல்லுடைத்துக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் அழகியப் புன்சிரிப்புடன் என்னை வாழ்த்தினாள். அவளும் அனாதை என்பதை அறிந்தேன். அத்தருணத்தில், எனக்குள் ஒரு தீர்மானம் உருவானது. உலகில் வாழும் 8 கோடி அனாதைக் குழந்தைகளுக்கு என்னால் எதுவும் செய்ய இயலாமல் போகலாம். ஆனால், இந்த ஒரு குழந்தையின் வாழ்வில் என்னால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று முடிவெடுத்தேன்." இத்தீர்மானத்துடன், இளம்பெண் மேகி அவர்கள் தன் பணிகளைத் துவக்கினார்.

தான் வங்கியில் சேமித்து வைத்திருந்த 5000 டாலர்களைக் கொண்டு, நேபாளத்தின் கோப்பிலா (Kopila) பள்ளத்தாக்கில் ஓர் இடத்தை வாங்கினார். 5 ஆண்டுகளில், அவ்விடத்தில் ஒரு குழந்தைகள் காப்பகத்தையும், பள்ளியையும் உருவாக்கினார்.

அவரது பணியைப் பாராட்டி, CNN செய்தி நிறுவனம், 2015ம் ஆண்டு, அவருக்கு CNN Hero அதாவது, CNN நாயகர் என்ற விருதை வழங்கியது. 32 வயதான இளம்பெண் மேகி அவர்கள் தற்போது, 200க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2018, 14:37