'இராஜா மாமா'வின் உதவியால் கல்வி கற்கும் குழந்தைகளும், குடும்பத்தினரும் 'இராஜா மாமா'வின் உதவியால் கல்வி கற்கும் குழந்தைகளும், குடும்பத்தினரும் 

இமயமாகும் இளமை - 'இராஜா மாமா'வின் பரிவினால் கல்வி

நவம்பர் 13ம் தேதி சிறப்பிக்கப்படும் 'உலகப் பரிவு நாளில்', இளையவர் இராஜா அவர்களின் பரிவு மிகுந்த கல்விப் பணியை, சிறப்பாக நினைவுகூர்கிறோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

இலட்சுமி எட்டுவயது சிறுமியாக இருந்தபோது, அவரது அப்பா, தன் மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக, பாளையங்கோட்டையில் உள்ள மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். தாயும், தந்தையும் இன்றி, தவித்த சிறுமி இலட்சுமியை, அவரது பாட்டி, மிகுந்த முயற்சி எடுத்து படிக்கவைத்தார். ஆனால், வீட்டில் நிலவிய வறுமை காரணமாக, இலட்சுமி, தன் 13வது வயதில் படிப்பை நிறுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவ்வேளையில், கே.ஆர்.இராஜா என்ற இளையவர், அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டினார். இன்று, 17 வயதான இளம்பெண் இலட்சுமி, பொறியியல் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார்.

தந்தையோ, தாயோ சிறையில் அடைக்கப்பட்டதால், துன்பங்களைச் சந்தித்துவரும் இலட்சுமி போன்ற பல நூறு சிறுவர், சிறுமியரை, இராஜா அவர்கள் படிக்கவைத்து வருகிறார். சிறைக்கைதிகளின் குழந்தைகள் கல்வி கற்பதற்கென்று, GNE என்றழைக்கப்படும் "சமத்துவத்திற்காக உலகளாவிய வலைப்பணி" (Global Network for Equality - GNE) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார், இராஜா.

சிறுவயதில், இராஜாவுக்கு கடுமையான காய்ச்சல் வந்தபோது, அவருக்குப் போடப்பட்ட ஒரு தவறான ஊசியால், இருகால்களிலும் உணர்வும், செயலும் இழந்த நிலையில் வாழ்பவர் இராஜா. அவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த வேளையில், பாளை மத்தியச் சிறைக்கு சமூகப்பணியாற்ற சென்றிருந்தார். அச்சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள், தங்கள் குழந்தைகள் படிக்க வசதியின்றி துன்புறுவதைப்பற்றி அவரிடம் கூறினர். அதைக் கேட்ட இராஜா அவர்கள், அக்குழந்தைகளின் கல்விக்காக, GNE என்ற சமுதாய அமைப்பை உருவாக்கினார். கைதிகளின் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதும், கைதிகளின் குழந்தைகள் என்று அக்குழந்தைகள் மீது குத்தப்படும் முத்திரைகளால் உருவாகும் அவமானங்களைத் துடைப்பதும், இவ்வமைப்பின் குறிக்கோள்.

பல கல்வி நிறுவனங்களின் துணையோடு, இராஜா அவர்கள், 400க்கும் மேற்பட்ட குழந்தைகளை இதுவரை படிக்கவைத்துள்ளார். தன் பணியை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்கும் தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், இராஜா.

ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 13ம் தேதி, 'உலகப் பரிவு நாள்' (World Kindness Day) சிறப்பிக்கப்படுகிறது. இந்த நல்ல நாளில், 'இராஜா மாமா' என்று அன்போடு அழைக்கப்படும் இளையவர் இராஜா அவர்களின் பரிவு மிகுந்த பணியை, சிறப்பாக நினைவுகூர்கிறோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2018, 14:23