குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் 

இமயமாகும் இளமை : சாதனை நாயகி மேரி கோம்

தங்கத்தை விலை கொடுத்து வாங்காதீர்கள், அதை உங்கள் உழைப்பின் ஊதியமாக வென்றிடுங்கள் - பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் போன்ற விருதுகளைப் பெற்ற மேரி கோமின் தாரக மந்திரம்

மேரி தெரேசா - வத்திக்கான்

“பெண்ணாக இருப்பதால் நீ பலவீனமானவள் என்பது சரியல்ல. வாழ்க்கை எப்போதும் அழுத்தம் நிறைந்தது. அதை எப்படிக் கையாள்வது என்பதை அவரவர்தான் கற்றுக்கொள்ள வேண்டும்” - இந்த பொன்னான வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர், குத்துச்சண்டை விளையாட்டின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்திருக்கும் இந்திய வீராங்கனை மேரி கோம். மணிப்பூர் மண்ணிலிருந்து வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டங்களைச் சந்தித்து, இன்று உலக அளவில் சுடர்விடும் வீராங்கனை மேரி கோம், மற்றுமொரு இந்திய வீராங்கனை மணீஷா ஆகிய இருவரும், டெல்லியில் நடைபெற்றுவரும் உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியின் கால் இறுதியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். மேரி கோம் அவர்களின் விளையாட்டுக்குத் துணைநிற்கும் அளவுக்கு, அவர் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஏழ்மையான விவசாயக்கூலி குடும்பம்தான் அவருடையது. எனவே வாழ்க்கையில் துன்பம், துயரம், வறுமை போன்ற பல்வேறு போராட்டக்களங்களிலிருந்து மேரி கோம் அவர்கள் மீண்டுள்ளதால், அவையே அவருக்கு குத்துச்சண்டைக்களத்தை எளிதாக்கியது. பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் சுதந்திரம் மட்டும் அவருக்குக் கிடைத்திருந்தது. அதே பள்ளிதான் அவருக்கு விளையாட்டின் மீதான ஆர்வத்தையும், குறிப்பாக குத்துச்சண்டையின் மீதான நேசத்தையும் வளர்த்த பெருமைக்குரியது. அந்த ஆர்வம்தான், அந்த இரும்புப் பெண்ணை 2001ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக வெற்றிகளையும், பதக்கங்களையும் குவிக்க வைத்தது. 1998 ஏசியன் விளையாட்டில் மணிப்பூரைச் சேர்ந்த டிங்கோ சிங் அவர்கள், தங்கம் வென்று திரும்ப, ‛நானும் ஒருநாள் குத்துச்சண்டையில் தங்கம் வெல்வேன்’என சபதம் எடுத்தார் மேரி கோம். அதன்பின், தன் கவனத்தை வேறு எதிலும் சிதறவிடாமல் குத்துச்சண்டை பக்கம் திருப்பினார். விளையாட்டு உலகில் உலக அளவில் இந்தியாவிலிருந்து வீராங்கனைகள் உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டிய தங்கமங்கைகளில் ஒருவர் மேரி கோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2018, 14:30