தேடுதல்

பங்களாதேஷ் ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலை பங்களாதேஷ் ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலை 

இமயமாகும் இளமை : தடைகளை மீறி கலைஞரானவர்

கைகள் இன்றி பிறந்த பானு அக்தர் அவர்கள், கால்களால் பாசிகளைக் கோர்த்து அழகழான அணிகலன்கள் செய்கிறார்

மேரி தெரேசா - வத்திக்கான்

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த பானு அக்தர் என்ற பெண், இரு கைகளின்றி பிறந்தவர். தற்போது கால்களால் கலைப்பொருள்கள் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். பானு அவர்கள் தனது வாழ்க்கைப் பயணம் பற்றி பிபிசி ஊடகத்திடம் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார்.

என் அம்மா என்னை முதல்முறை பார்த்தபோது பயந்துவிட்டார். உடனே எனக்குப் பாலூட்டவும் இல்லை. இரு கைகளும் இல்லாத பெண் குழந்தையாகிய என்னை வளர்த்து ஆளாக்குவது மிகவும் கடினம் என்பதால், அண்டை வீட்டார் என்னைக் கொலை செய்துவிடுமாறு கூறியுள்ளனர். ஆனால் என் அம்மா என்னைக் கொல்லவில்லை. எனது பெற்றோர் நான் நடப்பதற்கு கற்றுக்கொடுக்கவில்லை. பள்ளிக்கும் அனுப்பவில்லை. நானாகவே நடக்கக் கற்றுக்கொண்டேன். எனது கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவரின் உதவியுடன் பள்ளிக்குச் சென்றேன். பெற்றோரின் ஆதரவும் இல்லை. எனது கிராமத்தில் நான் எதிர்கொண்ட புறக்கணிப்புக்களிலிருந்து மீள்வதற்கு, தலைநகர் டாக்கா சென்றேன். அங்கு வீடு வீடாகச் சென்று வேலை கேட்டேன். யாருமே எனக்கு வேலை தரவில்லை. அதேநேரம் பிச்சை எடுக்கவும் மனமில்லை. சிந்தித்தேன். எல்லாரும் எப்படியாவது வாழும்போது, என்னால் ஏன் வாழ முடியாது என்று எண்ணினேன். முதலில் கால்களால் துணி தைக்கக் கற்றுக்கொண்டேன். பின்னர், கைவினைக் கலைகளைக் கால்களால் செய்யப் பழகினேன்.

இவ்வாறு சொல்லும் பானு அக்தர் அவர்கள், தற்போது தனது சொந்த உழைப்பில் வாழ்ந்து வருகிறார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2018, 14:03