Earl Patrick Forlalesம், அவர் குறைந்த செலவில் கட்டிய மூங்கில் வீடும் Earl Patrick Forlalesம், அவர் குறைந்த செலவில் கட்டிய மூங்கில் வீடும் 

இமயமாகும் இளமை : சேரிகள் நெருக்கடியை தீர்க்க உதவியவர்

மூங்கில், ஏனைய மரங்களைவிட 35 விழுக்காட்டுக்கு அதிகமாக ஆக்சிஜனை வெளியிடுகின்றது, இதனை, மண்வளத்தைப் பாதிக்காமல் ஆண்டுதோறும் அறுவடை செய்ய முடியும்

மேரி தெரேசா - வத்திக்கான்

பிலிப்பைன்ஸ் நாட்டில், சேரிகள் பெருகுவதை சமாளிக்கும் வகையில், குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியில் வெற்றி பெற்று, ஏறத்தாழ 46 இலட்சம் ரூபாய் (64,385 டாலர்) மதிப்புள்ள பரிசைப் பெற்றுள்ளார், இளைஞர் ஒருவர். மனிலாவைச் சேர்ந்த 23 வயது நிரம்பிய Earl Patrick Forlales என்ற இளைஞர், நான்கு மணி நேரத்தில், குறைந்த செலவில் கட்டிய மூங்கில் வீட்டுக்கு Royal Institute of Chartered Surveyors (RICS) என்ற அமைப்பு, இந்த பரிசுத் தொகையை வழங்கியுள்ளது. பேட்ரிக் அவர்கள் உருவாக்கியுள்ள இந்த மூங்கில் வீட்டை கட்டுவதற்கு, ஒரு சதுர மீட்டருக்கு, ஏறக்குறைய 3,500 ரூபாய்தான் செலவாகிறதாம். பிபிசி ஊடகத்திடம் பேசிய பேட்ரிக் அவர்கள், வழக்கமான வீட்டை விடவும் இதில் கூடுதலாக ஒரு வசதி உள்ளது என்றும், சமூகத்தில் உருவாகும் குப்பையை, பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளும் வகையில் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த பரிசுத் தொகையைக் கொண்டு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள "கூபோ (CUBO)" சமுதாய வீடு கட்டும் திட்டத்துக்கான மாதிரியை உருவாக்கப் பாடுபடுவேன் என்றும் கூறியுள்ளார். இந்த  வீடுகளை ஒரு வாரத்தில் உருவாக்கி, நான்கு மணி நேரத்தில் கட்டி முடிக்கலாம் எனவும், கிராமத்தில் மூங்கிலில் கட்டப்பட்ட தனது பாட்டி வீடே, இந்த மூங்கில் வீடு கட்டுவதற்குத் தூண்டுதலாக இருந்தது எனவும் பேட்ரிக் கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவின் மக்கள் தொகை ஏறத்தாழ ஒரு கோடியே இருபது இலட்சமாகும்.. இவர்களில் நாற்பது இலட்சம் பேர் நலிவடைந்த குடிசைகளில் வாழ்கின்றனர். வேகமாக வளர்ந்துவரும் மனிலா மாநகருக்கு, அடுத்த மூன்றாண்டுகளில் ஏறத்தாழ 25 இலட்சம் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வருகின்ற தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் வழங்குவது, இந்த நகருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. (பிபிசி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2018, 14:33