தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கிய நா.வல்லுண்டாம்பட்டு இளைஞர்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கிய நா.வல்லுண்டாம்பட்டு இளைஞர்கள் 

இமயமாகும் இளமை : தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கிய இளைஞர்கள்

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் மக்கள் தண்ணீருக்கு தவித்துவரும் நிலையில், நா.வல்லுண்டாம்பட்டு கிராமத்து இளைஞர்கள் பேணி காத்த கிணற்றால், தண்ணீர் பிரச்சனையிலிருந்து அந்தக் கிராமம் தப்பித்துள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான்

தஞ்சாவூர் அருகே, நா.வல்லுண்டாம்பட்டு கிராமத்தில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட ஒரு கிணறு உள்ளது. இந்தக் கிணற்றை துார்வார வலியுறுத்தி, அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும், எந்தப் பலனும் இல்லை. இதையடுத்து, அப்பகுதி இளைஞர்களே, சில மாதங்களுக்கு முன், கிணற்றில் இறங்கி துார்வாரி சுத்தம் செய்தனர். இதனால், அப்பகுதியினர் கிணற்றில் தட்டுப்பாடின்றி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரத்தில் தமிழகத்தைப் புரட்டிப்போட்ட கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்றால் பெருமளவிலான மின் கம்பங்கள் சாய்ந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் குடிநீருக்கே தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையிலிருந்து, நா.வல்லுண்டாம்பட்டு கிராம மக்கள் தப்பியுள்ளனர். இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். பெரும்பாலான மக்கள் தண்ணீருக்காகப் போர்வெல் பயன்படுத்தி வருகின்றனர். அடித்தட்டு மக்கள், பொது குடிநீர் குழாயைப் பயன்படுத்துகின்றனர். மின்சாரம் இல்லாமல் போனதால், தண்ணீர் கிடைக்காமல் போய்விட்டது. நாங்கள், எங்கள் கிராமத்து கிணற்றை அழியவிடாமல், துார்வாரி பராமரித்து வந்தோம். அதன் பலனை, இந்தச் சிக்கலான சமயத்தில் அனுபவிக்கிறோம். இந்தக் கிணறு இல்லாவிட்டால், எங்களுக்கு சொட்டு தண்ணீர்கூட கிடைத்திருக்காது. வெளியில் இருந்தும் நிறைய பேர் வந்து தண்ணீர் எடுத்துச் செல்வதோடு, எங்களைப் பாராட்டிச் செல்கின்றனர். (தினமலர்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2018, 14:25