தர்மம் கேட்கும் முதியவர் தர்மம் கேட்கும் முதியவர் 

இமயமாகும் இளமை : ஏற்பது இகழ்ச்சி

உடம்பு நன்றாக இருக்கும் நிலையில் பிச்சையெடுக்க வேண்டும் என்ற எண்ணமே இருக்கக் கூடாது

மேரி தெரேசா - வத்திக்கான்

ஒருநாள் நபிகள் நாயகம் அவர்களிடம், ஓர் இளைஞன் சென்று, தர்மம் கேட்டான். அவன் உடம்பு நல்ல நிலையில் இருந்ததைக் கண்டார் நபிகள். தம்பி, உனது வீட்டில் எதுவுமே இல்லையா எனக் கேட்டார். படுப்பதற்கு ஓர் ஒட்டகத் தோலும், தண்ணீர் குடிப்பதற்கு ஒரு பாத்திரமும் மட்டுமே உள்ளன, வேறு எதுவும் இல்லை என்றான் இளைஞன். சரிப்பா, நீ உடனே வீட்டுக்குப் போய், அந்த இரண்டையும் கொண்டு வா என்றார் நபிகள். அவனும் அவற்றை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தான். அப்போது நபிகள் நாயகம் அவர்கள், அங்கிருந்த அவரது நண்பர்களிடம், உங்களில் யாராவது இதை விலைகொடுத்து வாங்கிக்கொள்கிறீர்களா என்று கேட்டார். அவர்களில் ஒருவர், ஒரு திர்ஹம் கொடுத்து அதை வாங்கிக்கொள்கிறேன் என்றார். வேறு யாராவது இதைவிட அதிக விலை கொடுக்க முடியுமா எனக் கேட்டார் அவர். இன்னொருவர், நான் இரண்டு திர்ஹம் கொடுக்கிறேன் என்றார். அதை வாங்கிக்கொண்டு அந்தப் பொருள்களை அவரிடம் கொடுத்தார் நபிகள் நாயகம். பின்னர் அந்த இளைஞனிடம், தம்பி இதில் ஒரு திர்ஹத்தை எடுத்துக்கொண்டுபோய், ஏதாவது வாங்கி, சமைத்து, நீயும் உன் வீட்டில் உள்ளவர்களும் சாப்பிடுங்கள். இன்னொரு திர்ஹத்தைக் கொண்டுபோய் கடையில் கொடுத்து ஒரு கோடாரி வாங்கிக் கொண்டு என்னிடம் வா என்றார் அவர். இளைஞனும் அப்படியே செய்தான் அந்தக் கோடாரிக்கு ஒரு காம்பு செய்து அதை இளைஞனிடம் கொடுத்து, நீ காட்டுக்குச் சென்று, காய்ந்த மரக்கிளைகளை வெட்டி எடுத்துக்கொண்டு கடைத்தெருவுக்குப் போய் விற்பனை செய். பதினைந்து நாள் சென்று என்னிடம் வா என்றார் அவர். நபிகள் நாயகம் சொன்னபடி நடந்து 15 நாள்கள் சென்று அவரிடம் சென்றான் இளைஞன். ஆனால் இப்போது இளைஞனின் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது. ஐயா, இந்த பதினைந்து நாள்களில் பத்து திர்ஹம் சம்பாதித்தேன். இனிமேல் நான் யாரையும் நம்பிப் பிழைக்கவேண்டிய அவசியமே இல்லை என்றான் இளைஞன். அப்போது நபிகள் நாயகம் அவர்கள் மகிழ்ச்சியுடன், ஆண்டவர் முயற்சிக்குத் தகுந்த பலனை எப்போதும் கொடுக்கிறார் என்பதை மறந்துவிடாதே. பிச்சை கேட்பவர்களை ஆண்டவர் விரும்புவதில்லை என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2018, 11:00