தேடுதல்

சக்கர நாற்காலியில் சாதனையாளர் சக்கர நாற்காலியில் சாதனையாளர் 

இமயமாகும் இளமை..... : குறைகளுக்குள் நிறைகளைக் கண்ட தீபா மாலிக்

வாழ்வில் ஏற்படும் தடைகள் நிரந்தரமானதல்ல என்பதை வாழ்ந்து காட்டிய தீபா, தேசிய அளவில் 52 பதக்கங்களையும், உலக அளவில் 13 பதக்கங்களையும் குவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான தீபா மாலிக், இராணுவ அதிகாரியின் மனைவி. இவருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். தீபா மாலிக், தன் 28ம் வயதில் மூளை, முதுகுத் தண்டுவடம் தொடர்புடைய பேரப்லெஜிக்கா எனும் நோயால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, இடுப்புக்கு கீழே அனைத்து உறுப்புகளும் செயல் இழந்துவிட்டன. இதனால் 31வது வயதில் சக்கர நாற்காலியோடு அவரது வாழ்க்கை முடங்கிப்போனது. மனம் தளராத தீபா மாலிக், உணவு தயாரித்து விநியோகிக்கும் உணவகத்தை முதலில் தொடங்கி, பின்னர் பெரிய அளவில் உணவகமாக மாற்றியுள்ளார். தீபாவிற்கு இரு சக்கர வாகனம் ஓட்டுவதில் தீராத விருப்பம். அதை தன் கணவரிடம் தெரிவித்து, இருசக்கரம் மற்றும் கார் பந்தயப் பயிற்சியில் சேர்ந்தார். மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்க ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் பெண் மாற்றுத்திறனாளி இவர்தான். இவர் சிறந்த நீச்சல் வீராங்கனையும்கூட. குண்டு எறிதலிலும் மாவட்ட, மாநில அளவில் பதக்கம் வென்றார். வாழ்வில் ஏற்படும் தடைகள் நிரந்தரமானதல்ல என்பதை வாழ்ந்து காட்டிய தீபா, நியூசிலாந்தில் 2011ம் ஆண்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலக போட்டியில் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அந்த சாதனையைப் பாராட்டி 2012ம் ஆண்டு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. 2016ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்றார். பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப்பெண் என்ற வரலாற்றையும் படைத்தார். தேசிய அளவில் 45 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என 52 பதக்கங்களை வென்ற தீபா, உலக அளவில் 13 பதக்கங்களையும் குவித்துள்ளார். தீபா மாலிக் நம்பிக்கையின் நாயகி மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும்கூட. தான் சாதித்த விடயங்களை எடுத்துக்காட்டாக வைத்து இளம் சமுதாயத்தினருக்கு ஊக்கம் அளித்து வருகிறார் தீபா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2018, 15:45