தேடுதல்

Vatican News
தாயும் மகனும் தாயும் மகனும்  (2018 Getty Images)

இமயமாகும் இளமை : உண்மையான மகிழ்வு எதில்?

கடவுளுடன் இணைந்து நாளைத் தொடங்கி, அவருடன் இணைந்து நாளை முடிப்பதில் கிடைக்கும் உண்மையான மகிழ்வைக் கற்றுத்தந்தவர் என்னைப் பெற்ற அன்னை.

மேரி தெரேசா - வத்திக்கான்

அந்தப் பக்தர் பல மனிதர்களின் வாழ்வுக்கு மகிழ்வையும், நம்பிக்கையையும் எடுத்துரைத்துக்கொண்டிருந்தார். அவர் யாரைச் சந்தித்தாலும், அவர்களுடைய வாழ்வு நிலையை மேம்படுத்தி விடுவார். அப்படி பலன்பெற்றவர்கள் அவரிடம், இதையெல்லாம் செய்வதற்கு தங்களால் எப்படி முடிகிறது? தங்களுடைய இந்த உயர்நிலையை உருவாக்கும் புனிதத்தின் இரகசியம் என்ன? என்று கேட்டனர். அதற்கு அவர் தனது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை விவரித்தார். நான் இளைஞனாக இருந்தபோது, ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்டேன். எனது வயது முதிர்ந்த தாயும் என்னுடன் நடக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில், அவரால் நடக்க இயலாமல் கால்கள் சோர்ந்துபோயின. என்னைவிட்டுப் பிரிவதற்கான நேரம் வந்தததை உணர்ந்த என் தாய், மகனே, நீ என்னைவிட்டுப் பிரிவதற்குமுன் என்னிடம் ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அது என்ன அம்மா என நான் கேட்டேன். முதலில் சத்தியம் செய்து கொடு என்றார் என் தாய் பிடிவாதமாக. அதற்கு நான், அம்மா நான் உங்களிடம் சத்தியம் செய்து கொடுக்குமுன், உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று கேட்டேன். அது ஒன்றும் கடினமானது அல்ல மகனே, நீ முதலில் எனக்கு சத்தியம் செய்து கொடு என்றார் என் தாய். உடனே நான் அம்மா உங்கள் விருப்பப்படியே சத்தியம் செய்து கொடுக்கிறேன் என்றேன். என் அன்னை என்னைக் கட்டித்தழுவி முத்தமிட்டார். பின்னர் சொன்னார், மகனே, தந்திரமும் சதியும் நிறைந்த இந்த உலகில், நீ விடியலைத் தேடிச் செல்கிறாய். ஒவ்வொரு நாள் பொழுதையும் நீ கடவுளுடன்தான் துவங்க வேண்டும். அதைமட்டும் சத்தியம் செய்து கொடு. நான் உன்னிடம் எதிர்பார்ப்பது அதுதான் என்று சொல்லி, மீண்டும் ஒருமுறை என்னைக் கட்டித்தழுவி முத்தமிட்டார். என் அம்மாவின் அந்த முத்தம்தான் என் வாழ்வை மாற்றியது. உண்மையான மகிழ்வின் இரகசியத்தை, அதாவது கடவுளுடன் இணைந்து நாளைத் தொடங்கி, அவருடன் இணைந்து நாளை முடிக்கும் இரகசியத்தை எனக்கு அறிவுறுத்தினார் என் தாய் என்றார், அந்த மாமனிதர். (J.P.வாஸ்வானி)

12 November 2018, 14:42