தேடுதல்

மாடுகளுடன் ஆப்ரிக்க மனிதர் ஒருவர் மாடுகளுடன் ஆப்ரிக்க மனிதர் ஒருவர் 

இமயமாகும் இளமை : கற்றால் மட்டும் போதுமா?

ஒரு சாப்பாட்டுத் தட்டில் புல்லும், அடுத்த சாப்பாட்டுத் தட்டில் தவிடும் பரிமாறப்பட்டிருந்ததைப் பார்த்த பண்டிதர்கள், எங்களை மிருகம் என நினைத்தீர்களா என்றனர். அதற்கு பெரியவர், இல்லை.. பண்டிதர்களாகிய உங்கள் வார்த்தைக்கு மரியாதை கொடுத்தேன் என்றார்.

மேரி தெரேசா – வத்திக்கான்

ஓர் ஊரில் சோமநாதர் என்ற ஒரு பெரியவர் இருந்தார். அவர் மிகவும் நல்ல மனிதர். எல்லாருக்கும் நல்லது செய்ய நினைப்பவர். ஞான பண்டிதர், இராம பண்டிதர் ஆகிய இரு பண்டிதர்களையும் தன் வீட்டுக்கு அழைத்து கவுரவிக்க விரும்பினார் அவர். ஒரு நாள், அவ்விருவரையும் தனது வீட்டுக்கு அழைத்திருந்த சோமநாதர் அவர்கள், அவர்களை அன்போடு வரவேற்று விருந்துக்கு ஏற்பாடு பண்ணிக்கொண்டிருந்தார். அதற்குள் ஞான பண்டிதர், நான் முதலில் போய் குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி, குளிக்கச் சென்றார். அவர் போனபின், இராம பண்டிதரிடம் பேச்சுக்கொடுத்தார்  சோமநாதர். இப்போது குளிக்கச் சென்றிருக்கும் உங்கள் நண்பர் ஞான பண்டிதர், பெரிய தத்துவமேதை, பெரிய அறிவாளி என ஊரெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் என்று சொன்னார். அதற்கு, இராம பண்டிதர், அவரைப் பற்றி ஊர் உலகத்திற்கு என்ன தெரியும், பெரிய மேதை என்று சொல்கிற அளவுக்கு அவரிடம் ஒன்றுமே இல்லை, உண்மையைச் சொல்லப் போனால், அது ஒரு மாடு என்றார். அந்தப் பெரியவர், இந்தப் பதிலை சிறிதுகூட எதிர்பார்க்கவில்லை. மனம் நொந்து பேசாமல் உட்கார்ந்திருந்தார். சிறிது நேரத்தில், குளிக்கப் போயிருந்த ஞான பண்டிதர் வந்துவிட, இராம பண்டிதர் குளிக்கப் போனார். அந்தப் பெரியவர், ஞான பண்டிதரிடம், ஏங்க, உங்கள் நண்பர் பெரிய ஞானி போன்று இருக்கிறார் என்றார். இதைக் கேட்டதும், ஞான பண்டிதருக்கு முகம் வாடியது. பின் பெரியவரிடம், யாருங்க ஞானி, அவரைப் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியவில்லை. அது ஒரு மோசமான கழுதை என்றார். இந்தப் பதிலைக் கேட்டதும், அந்தப் பெரியவர் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியானார். குளிக்கப்போயிருந்தவர் வந்தவுடன் இருவருக்கும் விருந்து பரிமாறினார் சோமநாதர். அவர்களுக்கு முன்னால் இரு தட்டுகளை வைத்தார். ஒன்றில் புல்லையும், இன்னொன்றில் தவிடையும் வைத்தார். இதைப் பார்த்த பண்டிதர்களுக்கு கோபம். அப்போது சோமநாதர் அவர்கள், அய்யய்யோ அப்படியெல்லாம் நினைக்காதீர்கள், நீங்கள் இருவரும் பண்டிதர்கள். உங்கள் வார்த்தைக்கு மரியாதை கொடுத்தேன். நீங்கள் இங்கு வந்தபிறகுதான் நீங்கள் யார் எனப் புரிந்துகொண்டேன். அதற்குத் தகுந்த மாதிரி விருந்தை ஏற்பாடு பண்ணினேன் அவ்வளவுதான் என்றார்.

படித்துவிட்டால் மட்டும் போதாது. பண்பாடும் வேண்டும்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2018, 09:49