கொடுத்தலின் வழியாக மனிதம் வளர்கிறது கொடுத்தலின் வழியாக மனிதம் வளர்கிறது 

இமயமாகும் இளமை – இருப்பதில் நிறைவுகண்டு வாழ்தல்

வந்தவர்கள் அனைவரும், தாங்கள் விரும்பிய பொருள்களை எடுத்துக்கொண்டு மனநிறைவோடு சென்றனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

அந்த அரசர் மிகவும் தர்ம சிந்தனையுள்ளவர். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களிடம் இல்லை என்று சொல்லாதவர். ஒருசமயம் அவர், ஒரு பெரிய அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார். அதில் பலவகையான ஏராளமான பொருள்களை வைத்தார். யாரும்,  எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லலாம். எல்லாம் இலவசம் என்று அறிவித்தார் அரசர். நாட்டு மக்கள் வந்து, அவரவர் விரும்பிய பொருள்களை எடுத்துக்கொண்டு மனநிறைவோடு சென்றனர். சிலர் அங்கிருந்த ஆடைகளை எடுத்துச் சென்றனர். சிலர் விலையுயர்ந்த நகைகளை எடுத்துச் சென்றனர். ஆனால் ஒரேயொரு வயதான பாட்டி மட்டும் எந்தப் பொருளையும் தொடாமல் மனநிறைவின்றி காணப்பட்டார். அங்கிருந்தவர்கள் வியப்புடன் அந்தப் பாட்டியைப் பார்க்கவும், அவர் சொன்னார், நான் அரசரைப் பார்க்க வேண்டும் என்று. உடனே அங்கே இருந்த பணியாள் ஒருவர் ஓடிப்போய் அரசரிடம் நடந்ததைச் சொன்னார். அரசரும் உடனே யானை மீது ஏறி அந்த இடத்திற்கு வந்தார். அந்த அம்மா ஓடிப்போய் அரசரின் வலது கையைப் பிடித்துக்கொண்டு, பிரபுவே, இப்போது நீங்கள் எனக்குச் சொந்தமாகி விட்டீர்கள். இந்த அருங்காட்சியகத்திலுள்ள எந்தப் பொருளையும் நான் விரும்பவில்லை, உங்களை அடையவே விரும்புகிறேன், நீங்கள் எனக்குச் சொந்தமாகிவிட்டதால், இந்த அரசிலுள்ள செல்வம் அனைத்தும் இப்போது எனக்குச் சொந்தமாகிவிட்டது என்று சொன்னார்கள். அரசர் திகைத்துப் போனார். எனவே அந்தப் பாட்டியை கடைசிவரை தனது அரண்மனையிலே தங்கவைத்து தாய்போல் பராமரித்து வந்தார் அரசர்.

இளையோரே, இருப்பதில் நிறைவுகண்டு வாழ்ந்தால் வாழ்வில் சுமைகள் குறையும்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2018, 12:56