அனைத்து புனிதர்கள் விழா - 011118 அனைத்து புனிதர்கள் விழா - 011118 

இமயமாகும் இளமை : புனிதர் அனைவர் பெருவிழா

9ம் நூற்றாண்டில், ஞானமுள்ளவர் என அழைக்கப்பட்ட, பைசான்டைன் பேரரசர் 6ம் லியோ அவர்கள் காலத்தில், அனைத்துப் புனிதர்கள் விழா மிகவும் பிரபலமடைந்தது.

மேரி தெரேசா – வத்திக்கான்

புனிதர் என்பவர், வாழ்வை முழுமையாக வாழ்ந்தவர், தூய வாழ்வில் உயர்நிலையை எட்டியவர் அல்லது கடவுளுக்கு நெருக்கமாக இருப்பவர் என்று சொல்லலாம். சிறந்த எடுத்துக்காட்டுகளாய், சிறந்த போதகர்களாய், புதுமைகள் அல்லது வியப்புக்குரிய செயல்கள் ஆற்றுபவராய், இறைவனிடம் பரிந்துபேசி வரங்கள் பெற்றுத்தருபவராய், பொருள்கள் மற்றும் வசதி வாழ்வில் பற்றற்றவராய் வாழ்ந்தவர்கள், புனிதர்கள் என்று, ஏறக்குறைய எல்லா மதங்களிலும், எல்லா கலாச்சாரங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். உரோமைப் பேரரசில், நான்காம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற சித்ரவதைகளில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள் அனைவரும், புனிதர்கள் என அழைக்கப்பட்டனர். கிறிஸ்தவர்கள், இவர்களின் மறைசாட்சிய நாளில், கல்லறைகளுக்குச் சென்று செபித்து, அஞ்சலி செலுத்தி வந்தார்கள். ஆரம்பத்தில், அந்த அந்தப் பகுதிகளில் மட்டுமே மறைசாட்சிகளுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த மறைசாட்சிகள் பக்தியை, நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித பெரிய பேசில் அவர்கள், மற்ற இடங்களுக்கும் பரப்பினார். பின்னர், காலப்போக்கில், கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தாவிடினும், எடுத்துக்காட்டான தூய வாழ்வு வாழ்ந்து இறந்தவர்களை, பொதுநிலை கிறிஸ்தவர்களே புனிதர்களாகப் போற்றி, அவர்களின் கல்லறைகளுக்குச் சென்று செபித்து வந்தனர். காலம் செல்லச் செல்ல, இறந்த ஒரு கத்தோலிக்கர், முத்திப்பேறு பெற்றவர் என அறிவிக்கப்படுவதற்கு ஒரு புதுமையும், புனிதர் என அறிவிக்கப்படுவதற்கு ஒரு புதுமையும் நிகழ்ந்திருக்க வேண்டும் என திருஅவை கூறியது. கி.பி.609ம் ஆண்டு மே 13ம் தேதி, திருத்தந்தை 4ம் போனிபாஸ் அவர்கள், உரோம் பான்தியோனை, புனித கன்னி மரிக்கும் அனைத்து மறைசாட்சிகளுக்கும் அர்ப்பணித்ததிலிருந்து, திருஅவையில் அனைத்துப் புனிதர்கள் நாள் ஆரம்பிக்கப்பட்டது. இந்நாளை, நவம்பர் முதல் நாளன்று, புனிதர்கள் விழா நாளாக, திருத்தந்தை 3ம் கிரகரி அவர்கள், 8ம் நூற்றாண்டின் மத்தியில் உருவாக்கினார். இறைவனை வழிபடுகிற நாம் அனைவரும், அவரோடு நெருங்கிய உறவு கொண்டு நமக்காக பரிந்து பேசுகிற புனிதர்களுக்கு வணக்கம் செலுத்துவது நமது கடமை என இவ்விழா நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த விழாவுக்கு அடுத்த நாள், நவம்பர் 2ம் தேதி, இறந்த அனைவரின் நினைவு நாளாக திருஅவை சிறப்பிக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2018, 08:48