இளையோர் இளையோர் 

வாரம் ஓர் அலசல் - இளையோரும் குடும்பமும்

சலேசிய சபை அருள்பணியாளர்கள் எம்மானுவேல் அவர்களும், கிறிஸ்டி அவர்களும், குடும்ப உறவுகளில் கவனம் செலுத்த இளையதலைமுறைக்கு அழைப்பு விடுக்கின்றார்கள்

மேரி தெரேசா & சலேசிய அருள்பணியாளர்கள் எம்மானுவேல், கிறிஸ்டி – வத்திக்கான்

அக்டோபர் 3, வருகிற புதன்கிழமையன்று, வத்திக்கானில் இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம் ஆரம்பிக்கின்றது. இதை மனதில் வைத்து, சலேசிய சபை அருள்பணியாளர்கள் எம்மானுவேல் அவர்களும், கிறிஸ்டி அவர்களும், இன்றைய இளையோரும் குடும்பமும் என்ற தலைப்பில் அலசுகிறார்கள்.

வாரம் ஓர் அலசல் - இளையோரும் குடும்பமும் - சலேசிய அருள்பணியாளர்கள் எம்மானுவேல், கிறிஸ்டி

மனிதரை உருவாக்கிய இறைவன் அவருடைய உருவிலும் சாயலிலும் உருவாக்கினார். தந்தை, மகன், தூய ஆவி என்னும் உறவில் ஒன்றுபட்டிருக்கும் மூன்று நபர்களாய் நமக்கு தன்னையே வெளிப்படுத்திய இறைவன் தமது சாயலாக, உறவுகளையும், குடும்பத்தையுமே முன்னிறுத்துகிறார்.

அனுபவம்...

ஒரு சமயம் ஒரு இளைஞன் என்னை சந்திக்கணும்னு கேட்டாரு. ரொம்பவும் சோகமா இருந்த அந்த தம்பி கிட்ட கேட்டேன் - என்னப்பா இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு சோகம் தரக்கூடியது அப்படி என்ன உன் வாழ்க்கையில நடந்ததுன்னு கேட்டது தான் மிச்சம்… அந்த இளைஞன் தன் மனசுல இருந்தது எல்லாத்தையும் கொட்ட ஆரம்பிச்சாரு.

நான் இப்போ தான் எஞ்சினியரிங்க முடிச்சேன். கஷ்டப்பட்டு ஒரு வேலை தேடினேன். மாசத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்துல இப்போதான் நாலு மாசம் முன்னாடி ஒரு வேலை கிடைச்சது…”

ஓ பரவாயில்லையே ஒரு வேலையும் கிடைச்சுடுச்சான்னு நான் கேக்க அவரு இன்னும் புலம்ப ஆரம்பிச்சிட்டாரு.

“என்ன கிடைச்சி என்ன பரியோசனம்… நான் சம்பாதிக்கிறது எல்லாத்தையும் அப்பா கிட்ட கொடுக்குறேன், அவரு மொத்தத்தையும் கடன அடைக்கணும்னு சொல்லி செலவு செஞ்சிடுறாரு… எனக்கு மாசத்துக்கு 5 ஆயிரமோ 10 ஆயிரமோகூட தர்றது இல்ல… நான் இவ்ளோ கஷ்டப்பட்டு வேலை செஞ்சி என்ன பயன்… அதான்…”

அவரு அப்படி இழுக்கும் போதே ஏதோ வில்லங்கம் இருக்குன்னு எனக்கு புரிஞ்சிடிச்சி…

“அதான், நான் தனியா போயி ஒரு ஹாஸ்டல்ல தங்கி வேலை செய்யலாம்னு இருக்கேன்… அப்போதான் எனக்குன்னு கொஞ்சம் காசாச்சும் சேத்து வெக்க முடியும். உண்மை தானே, நீங்க என்ன சொல்றீங்க” என்றார்.

எனக்கு அதிகமான கோபம் வந்தாலும் அதை நான் வெளிக்காட்டாமல்… சரிப்பா… நீ சொல்றது சரி தான். நீ சம்பாரிக்கிற காசு எல்லாம் கடனுக்கே போயிடுது… ஆனா அந்த கடனை எதுக்கு வாங்கினாங்க? என்றேன்…

“நான் படிக்கதான்… ஒத்துக்குறேன்… ஆனா என்னோட ரெண்டு தம்பிங்க, தங்கச்சி அவங்களுக்கும் தானே செலவு பண்ணாங்க… அதை நான் மட்டும் தாங்கணுமா?” என்றார்… எனக்கு வியப்பாயும், வருத்தமாயும் இருந்தது.

சிந்தனைக்கு...

இன்றைய சமுதாயம் தனியுரிமைக்கோட்பாட்டை வலியுறுத்துகின்றது. தனிமனிதரின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டியவையே. ஒரு சிலரின் நலனுக்காக ஒருவருடைய வாழ்வாதாரமும், வாழ்க்கையும் விலை பேசப்படும்போது, அழிக்கப்படும்போது அவற்றிற்காக போராடுவதும் இன்றியமையாததாகிறது. ஆனால், கூடிவாழும் சமுதாயத்தில், குடும்பத்தில், தனி மனித உரிமை மட்டுமே அவசியம் என குழும விழுமியங்களையும், மதிப்பீடுகளையும் விட்டுக்கொடுப்பதும், தள்ளி வைப்பதும், தனிமனிதனின் சுகங்களுக்காக குழும விழுமியங்களைச் சூறையாடும் தன்னலமும், இன்று மனிதத்தையே அழித்து வருகிறது. இன்றைய சமுதாயத்தை உற்று நோக்கினால் அளவுக்கதிகமாகவே இன்று தனியுரிமைக்கோட்பாடு சமுதாயத்திலும், குடும்பத்திலும், தனிமனிதனின் உள்ளத்திலும், எண்ணத்திலும் வேறூன்றி, மனிதர்களை மிருகங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது. தான் மட்டுமே வாழவேண்டும், வளரவேண்டும் என்பதற்காக, எதையும், யாரையும், எச்சூழலிலும் எதிர்க்கவும் அழிக்கவும் துணியும் ஒருவரை மிருகம் என்றல்லாமல், வேறென்ன சொல்வது.

எதார்த்தம்...

கொஞ்சம் சிந்திச்சி பாருங்க… அப்பாவும் அம்மாவுமா சேர்ந்து உருவாக்குற குடும்பம் ஒண்ணுக்கு ரெண்டா பெருசாகியுருக்கும்போது எப்படி முதியோர் இல்லங்கள் அதிகமாகிட்டே போகுது?

ஒரு காலத்துல இந்த உலகத்துல யாருமே இல்லாதவங்களுக்கு சில இல்லங்கள் தொடங்குனாங்க – முதியோர் இல்லங்கள், அநாதையர் இல்லங்கள் அப்படின்னெல்லாம்… ஆனா இன்னைக்கு ஹை க்ளாஸ் முதியோர் இல்லங்கள் உருவாகிடுச்சி… அதாவது அங்க இருக்குற முதியோருக்காக பல ஆயிரம் கணக்குல செலவு செய்ய ஆளு இருக்காங்க… ஆனா அவங்கள பாத்துக்கவோ, அன்பு செய்யவோ, நேசிக்கவோ கூடவெச்சு கவனிச்சுக்கவோதான் ஆளு இல்ல… ஏன் அப்படி?

நான் பெரிய ஆளாகணும், எனக்கு நிறைய சொத்து வேணும், நான் சந்தோஷமா இருக்கணும், இதெல்லாம் சரியான ஆசைகள் தான் ஆனா வேற யாரப்பத்தியும் எனக்கு கவல இல்ல… அது அப்பாவோ, அம்மாவோ, சகோதரனோ, சகோதரியோ, கூடப் பிறந்தவர்களோ, சொந்தங்களோ எனக்கு யாரும் முக்கியம் இல்லன்னு நினைக்கும்போதுதான் பிரச்சனைகள் உருவாகுது.

என் ஆசைகள், என் கனவுகள், என் வளர்ச்சி, என் திட்டங்கள், என் சந்தோஷம், என் உரிமை அப்படின்னு எல்லாத்தையுமே நான், என்னுடையதுங்குற நோக்கத்திலேயே பார்த்தா… அங்க குடும்பம் சமுதாயம் இதெல்லாம் வாழ முடியுமா…?

சிந்தனைக்கு...

இன்றைய காலக்கட்டத்தில் குடும்பங்கள் நம்முடைய பாரம்பரியத்தை நினைவூட்டுகின்றன. ஒருவர் அனைவருக்காக, அனைவரும் ஒருவருக்காக என பிறர் நலன் கருதி கூடிவாழ்ந்த காலம் போய், தனித்தியங்கும் இயந்திரங்களாக மாறிக்கொண்டிருக்கிறோம். குடும்பக் கலாச்சாரத்தில் தழைத்தோங்கிய தியாகம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, அன்பால் அனைவரையும் பிணைத்து ஒற்றுமையாய் வாழ்தல், மன்னித்தல், ஒருவரையொருவர் தாங்கி வாழ்வில் முன்னேறுதல், பிறருக்கு உதவி செய்தல் எனக் குழும உணர்வை மேம்படுத்தும் மனித விழுமியங்களும், உணர்வுகளும் மங்கிக்கொண்டிருக்கின்றன. தனி மனிதன் ஒட்டுமொத்த குடும்பத்தின் கனவு, உழைப்பு, அன்பு, மகிழ்ச்சி மற்றும் எதிர்காலம் என்பதை மறுத்தலாகாது, மறக்கலாகாது. ஆனால், இத்தனிமனிதர், குடும்பத்தையே தன்னுடைய தேவைகளுக்காக, தற்புகழ்ச்சிக்காக, எதிர்காலத்திற்காக, இன்ப நாட்டங்களுக்காக, சிற்றின்பங்களுக்காக, தனது கனவு உலகிற்காகப் பயன்படுத்தி, உச்சநிலை அடைந்தபின் பெற்றவர்களை, உடன் பிறப்புகளை, குடும்பத்தை, உற்றார் உறவினரை காலில் படிந்த தூசிபோல் உதறிச் செல்லும் கலாச்சாரம் அனைவரையுமே அழித்துவிடுகின்றது. நம்முடைய வேர்களை நாம் இழந்து விடாமல் இருந்தால்தான் நாம் தழைத்து வாழ முடியும். இல்லையெனில், வேரற்ற மரமாக, அடித்தளமில்லா கட்டிடமாக, அச்சாணியில்லா சக்கரமாக, நீரற்ற தடாகங்களாக, மணமில்லா மலராக, உப்பில்லாப் பண்டங்களாக மாறி வளர்ச்சியற்றவர்களாய், சமுதாயத்திலே மிதிபடுவோம். குடும்பத்தை அன்னியமாக்கிப் பார்த்தல். குடும்ப அங்கத்தினரை அன்னியராக, எதிரியாக, போட்டியாகப் பார்த்தல் ஆகியவை மறையவேண்டும். நாம் குடும்பத்தில் பிறந்தோம், குடும்பத்திலிருந்து வளர்ந்தோம், அந்தக் குடும்பத்தைத் தாங்கி வளர்த்தெடுக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை பசுமரத்தாணிபோல் நம் மனதில் பதியவைத்தால் நமக்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும், இவ்வுலகிற்கும் வாழ்வு உண்டு.

முடிவாக...

அன்பிற்கினிய இளைய சமுதாயமே! படைப்பில் மற்ற உயிரினங்களிலிருந்து மனிதரை உயர்த்திக் காட்டுவதே உறவுகள்தான். இந்த உறவுகள் பிறக்குமிடம் நம் குடும்பம். படைப்பின் முதற்கணம் முதல் நமது சாயலாய், அடையாளமாய் இருக்கின்ற நம் குடும்ப உறவுகளை வளர்த்தெடுப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2018, 16:01