Cerca

Vatican News
ஊடகங்கள் வழி இளையோரின் பங்களிப்பு ஊடகங்கள் வழி இளையோரின் பங்களிப்பு  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் - இளையோரும் ஊடகங்களும்

வத்திக்கானில் இளையோரை மையப்படுத்தி உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெற்று வருகின்றது. இளையோர் ஊடகங்களுக்கு அடிமைகளாகும்போது உண்மை உறவுகளை இழக்க நேரிடும்

மேரி தெரேசா & அ.பணியாளர்கள் எம்மானுவேல், கிறிஸ்டி, ச.ச. - வத்திக்கான்

இன்றைய நம் நிகழ்ச்சியில் இளையோரும் ஊடகங்களும் என்ற தலைப்பில், சலேசிய சபை அருள்பணியாளர்கள் எம்மானுவேல் அவர்களும், கிறிஸ்டி அவர்களும், தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

இளையோரும் ஊடகமும்

முன்னுரை..

ஊடகம் இன்றைய உலகின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஓர் அடையாளமாய் உருவெடுத்திருக்கிறது. உறவுகளுக்காக, ஊடாடவேண்டிய ஊடகம் இன்று இளைஞர்களின் வாழ்வில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால் அது எப்படி பயன்படுகிறது என்பது நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

அனுபவம்...

ஒரு குடும்பம்… ஒரே மகன்… அப்பா அம்மாவுக்கு காலந்தாழ்ந்து பிறந்த மகனாயிருந்ததால அவனுக்குன்னு தனி ரூம் தந்தாங்க… போன் கேட்டான் வாங்கி கொடுத்தாங்க, கம்ப்யூட்டர் கேட்டான் வாங்கி கொடுத்தாங்க, TAB, இன்டர்நெட், I phoneனு அவன் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தாங்க… அவன் வளர்ந்து காலேஜ் படிக்கும் போது நண்பர்கள் முக்கியமா தெரிஞ்சாங்க… போன் பெருசா தெரிஞ்சது… வீட்ல நேரம் செலவழிப்பது ரொம்ப குறைஞ்சி போச்சு… அவனுக்கு பிடிக்காதுன்னு அதை சுட்டிகாட்ரதையும் நிறுத்திட்டாங்க… சாப்பாடு நேரத்துக்கு வருவான் ஏதோ இருக்கிறதை வேண்டா வெறுப்பா சாப்பிடுவான்… ஏதாவது குறை சொல்லிட்டு ரூமுக்கு போயிடுவான்… போன், முகநூல் பக்கம், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கேமிங், இதுதான் அவனோட உலகமா இருந்தது… இப்படியே போக… ஒரு நாள் சாப்பிட வந்தான் சாப்பாடு டேபிள் மேல இருந்தது… ஆனா யாரும் பக்கத்துல இல்ல… அவனுக்கு பெருசா எதுவும் தோணல… எப்பவும் போல சாப்பிட்டு போயிட்டான்… இரவு சாப்பாட்டுக்கு வந்தான் அதேபோல… யாரும் இல்ல சாப்பிட்டு போயிட்டான்… இப்படியே மூணு நாள் ஆச்சி… திடீர்னு அவன் முகநூல் பக்கத்துல ஒரு மெசஜ் வந்தது… அம்மா மூணு நாளா மருத்துவமனையில இருக்காங்க கொஞ்சம் வந்து பாத்துட்டு போறியான்னு… அனுப்பினது அவங்க அப்பா… மருத்துவமனைக்கு போனான்… அம்ம ICUல இருந்தாங்க… ஏன்பா முகநூல்ல மெசேஜ் அனுப்புனீங்கன்னு கோபமா கேட்டான்… நீ என் முகத்த பாத்து பேசியே பல மாசமாகுது பா … முகநூல்ல மட்டுந்தான் நீ அதிகம் பேசுறத நான் பாத்தேன் அதான் மெசேஜ் அனுப்பினேன் னு சொன்னாரு.

சிந்தனைக்கு...

ஊடகம் வழியாக உறவுகள் சாத்தியமே. தொலைபேசி, கைப்பேசி, அலைபேசி, மின்னஞ்சல், முகநூல், வாட்ஸ்அப், ஸ்கைப், இவை நம்முடைய தொடர்புகளை அதிகரித்திருக்கின்றன. புது முகங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. புதிய உறவுகளுக்கு வித்திட்டிருக்கின்றன. உறவு என்றால் உடலும், உள்ளமும் என முழு மனிதனையே அன்போடும், பாசத்தோடும், மற்றவரின் எண்ணத்திலும், உணர்ச்சியிலும், தேவையிலும் ஒன்றிக்கச் செய்யும், ஓர் உந்துணர்வு, இவ்வுணர்வு சிறுகச் சிறுகப் பெருகிப் பெருகி, ஒரு நபராகவே மாறிவிடுகிறது. உறவு என்றால் அது இரு நபர்களுக்கிடையே உருவெடுக்கின்றது. அவர்களுடைய எண்ணம், உணர்வு, தேவை என எதையும் நாம் பிரித்துப் பார்த்தலாகாது. ஒருவர் இன்னொருவரோடு நேரத்தைச் செலவிட ஆசிப்பார். மற்றவரின் பிரசன்னம் ஒருபோதும் வெறுப்புணர்வுக்கு இடம் கொடாது. உறையாடும், உறவாடும் நேரத்தையும், பாசத்தையும், அன்பையும் கணக்கிடமாட்டார்கள். ஆனால், அநேக ஊடக உறவுகளிலே இரு நபர்கள் உடலளவிலும், உள்ளத்தளவிலும் உண்மையாகவே உரையாடுகிறார்களா? உறவாடுகிறார்களா? என்பது ஐயத்திற்குரியது. ஒரு சில வேளைகளிலே வாய்மை எளிதாய் அழிக்கப்பட்டு பொய்மை நாடகமாடுகிறது. செய்திகள் திரிக்கப்படுகின்றன, உண்மையற்ற நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகின்றன, அனுபவங்கள் கட்டமைக்கப்படுகின்றன. முகத்திறைகள் வலுவற்ற உறவின் வேர்களாய் உருமாற்றப்படுகின்றன. இப்பொய்முகத் திறைகள் மற்றவரின் வாழ்வில் வேர்களாய் ஊன்றி அவருடைய நட்பையும், உறவையும், நம்பிக்கையையும் கொச்சைப்படுத்துகின்றன. யார் ஊடகத்தை திறமையாகக் கையாளுகிறார்களோ அவர்கள் சமூக வலைதளங்களில் உறவின் உச்சத்திலிருந்தாலும், அவர்களின் அநேக உறவுகள் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கும். அதேநேரத்தில் ஒரு சில உண்மையான உறவுகளையும் கட்டியெழுப்பியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், எதார்த்த வாழ்வில் உண்மையான உறவின்றி மனக்குறையோடு கூனிக் குறுகிப்போயிருப்பார்கள். தங்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை, ஊனத்தை மறைக்கவே அநேகர் சமூகவலைத்தளங்களிலே நிரந்தரமற்ற உறவுகளிலே, காலையில் மலர்ந்து மாலையில் வாடிப்போகும் மலரைப்போன்ற மகிழ்ச்சியைத் தேடி நேரத்தைச் செலவிடுகின்றார்கள். எனவேதான் வெறும் ஊடக உறவுகள் உண்மையான உறவுகளாக மாறிவிடாது, நாம் தேடும் மகிழ்ச்சியைத் தந்துவிடாது. சமூக வலைத்தொடர்பு ஊடகங்கள் உறவுகளுக்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்திருந்தாலும் உண்மையான உறவுகளுக்கான வாய்ப்பை குறைத்திருக்கின்றன…

எதார்த்தம்...

ஒருவர் இறந்தால் RIP. ஒருவர் வருத்தப்பட்டால் கண்ணீர்விடும் பொம்மை, ஒருவர் மகிழ்ச்சியாய் இருந்தால் ஒரு லைக் அல்லது ஒரு தம்ஸ்அப் என்று போட்டுவிட்டு அதை கடந்து செல்லும் உலகமாக இனறைய உலகம் வளர்ந்துகொண்டிருக்கிறது…

அதிவேக வாழ்க்கை, வெறும் வலைத்தளங்களில் வாழப்படுகின்ற வாழ்க்கை, வலை உரையாடல்களில் மலர்ந்து அங்கேயே பரிணமிக்கும் உறவுகள்னு, உண்மையன உணர்வுகளுக்கும் ஆழமான உறவுகளுக்கு இடமே இல்லாம போச்சு இன்னைக்கு.

நாலு பேரு நண்பர்கள் ஒண்ணா ரயில்ல போனா நாலு நிமிஷம் சேந்தாப்ல பேசிட்டா போதும்… ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க போன்ல பிசியாகிறத இன்னைக்கு ரொம்ப சகஜமா பார்க்க முடியுது.

ஊயிர்கொடுப்பான் தோழன் அப்படின்னு ஒரு பழமொழியுண்டு… ஆனா இன்னைக்கு மிஞ்சி போனா ஒரு லைக் தான் குடுப்பான் நம்ம முகநூல் நண்பன்…

சமூக தொடர்பு சாதனமா உருவான ஊடகங்கள் இன்னைக்கு சமுதாயத்தோடு உண்மையான உணர்வுப்பூர்வமான தொடர்பே இல்லாம மெய்நிகர் தொடர்பாகவே அதாவது Virtual relationship ஆகவே எல்லாத்தையும் மாத்திட்டு இருக்கு. யோசிச்சு பாருங்க இது உங்க வாழ்க்கையில எவ்வளவு தூரம் உண்மையா இருக்கு?

சிந்தனைக்கு...

தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையை பல வகைகளில் மேம்படுத்தியுள்ளது. அதே தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் கலாச்சாரத்தையும் வளர்த்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை மேம்படுத்த வேண்டும், நாமே அதற்கு இரையாகிவிடக் கூடாது, மற்றவரையும் இரையாக்கிவிடக் கூடாது. இன்றைய காலக்கட்டத்திலே தொழில்நுட்பம் உறவுகளை வளர்க்க, உண்மையை நிலைநாட்ட, நீதியை நிலைநிறுத்த, மனிதம் வளர்க்க, ஒற்றுமையை மேம்படுத்த, உரையாடலை அதிகரிக்க, அடுத்திருப்பவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள பயன்படுத்தப்படவேண்டும். ஆனால், இன்றைய அவல நிலையிலோ, மனிதரைக் கட்டுப்படுத்தி வாழ, அவர்களுடைய சுதந்திர உணர்வை முறியடிக்க, மற்றவரைக் கைப்பாவைகளாய் செயல்படச்செய்ய, மற்றவரின் தனிப்பட்ட வாழ்வில் ஊடுருவிப் பாய்ந்து அவர்களைப் பற்றிய செய்திகளை விளம்பரப்படுத்த, ஒருவர் மற்றவரை வேவுபார்க்க, ஒற்றுமையைச் சிதைக்க, மற்றவரின் உறவுகளை, அறிவை, திறமைகளை, பணத்தை, புகழை எளிதாய்த் திருடி அவர்களின் வாழ்வையே சின்னாபின்னமாக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தின் வெளிப்பாடான ஊடகங்கள், ஊடகக்கருவிகள், இளைஞர்களின் வாழ்வையும், அடையாளத்தையும் வளரச் செய்யாமல், மழுங்கடித்து, மங்கிப்போய் மாளச் செய்கிறது.

முடிவு..

அன்பிற்கினிய இளைய சமுதாயமே! சமூகவலைத்தொடர்பு ஊடகங்கள் உறவுகளை வளர்க்கும் கருவிகளாகப் பயன்படும்வரை அது நன்மையே. ஆனால், வளர்ந்துவரும் இளைய சமுதாயமே, நீங்கள் இவ்வூடகங்களுக்கு அடிமைகளாகும்போது அவற்றிற்காக உண்மை உறவுகளைப் பணயம் வைக்கும்போது, உங்கள் அடையாளத்தை இழந்து விடுகிறீர்கள். இதை நீங்கள் உணர்கிறீர்களா?

08 October 2018, 15:48