தேடுதல்

விலையுயர்ந்த மாணிக்க கற்களைத் தேடி.... விலையுயர்ந்த மாணிக்க கற்களைத் தேடி.... 

இமயமாகும் இளமை - வாழ்வில் வெற்றியைத் தருவது..

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு வைரம் இருக்கின்றது. அதைத் தேடிக் கண்டுபிடித்து அதைச் சரியான வழியில் செலுத்தினால் நம்முடைய மதிப்பு கூடிக்கொண்டே இருக்கும்

மேரி தெரேசா - வத்திக்கான்

சிறுவன் ஒருவன் அன்று பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.  வழியில் ஒருவர் வாழ்வின் மதிப்பு, வாழ்வின் மதிப்பு என்று சொல்லிக்கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது. வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக, அப்பாவிடம், வாழ்வின் மதிப்பு, அப்டின்னா என்னாப்பான்னு கேட்டான். அதற்கு அப்பா மகனிடம், ஒரு கல்லைக் கொடுத்து, இதை சந்தையில் கொண்டுபோய் விற்கப் போகிறாய். ஆனால் யார் விலை கேட்டாலும் பதில் சொல்லாமல், இரண்டு என்று மட்டும் கைவிரலைத் தூக்கிக் காண்பி என்றார். மகனும் ஆசையோடு சந்தைக்குப் போனான். அங்கு ஒரு பாட்டி அவனிடம், அழகான கல்லாக இருக்கிறதே, என் தோட்டத்தில் இதனை வைக்கிறேன், இதன் விலையென்னப்பா என்று கேட்டார். அதற்குச் சிறுவன் பதில் ஒன்றும் சொல்லாமல் இரண்டு விரல்களைத் தூக்கிக் காண்பித்தான். ஓ, இரண்டு ரூபாயா என்றார் பாட்டி. சிறுவன் பதில் ஏதும் சொல்லாமல், வீட்டிற்குச் சென்று அப்பாவிடம் நடந்ததைச் சொன்னான். பின் அப்பா, அவனிடம், இப்போது இந்தக் கல்லை எடுத்துக்கொண்டு ஓர் அருங்காட்சியகத்துக்குப் போ என்று அனுப்பி வைத்தார். அங்கே அவனிடம் உள்ள கல்லைப் பார்த்து, அழகான கல்லாக இருக்கிறதே, நாங்களே வாங்கிக் கொள்கின்றோம், இதன் விலையென்ன என்று கேட்டனர். அவன் பதில் எதுவும் சொல்லாமல் முன்பு போலவே இரு விரல்களை உயர்த்திக் காட்டினான். உடனே அவர்கள், ஓ, இரண்டாயிரம் ரூபாயா என்றனர். சிறுவன் பதிலேதும் சொல்லாமல் மீண்டும் அப்பாவிடம் ஓடிவந்து நடந்ததைச் சொன்னான். மீண்டும் அப்பா அவனை, வீட்டிற்கு அருகிலிருந்த அரிதான கற்கள் விற்கும் இடத்திற்கு, அதே நிபந்தனையோடு அனுப்பி வைத்தார். அக்கடையில் அக்கல்லைப் பார்த்தவர்கள் வியந்து, யாருக்குமே கிடைக்காத இந்தக் கல் உனக்கு எப்படி கிடைத்தது, இதை நாங்களே வாங்கிக் கொள்கிறோம், விலை எவ்வளவு எனக் கேட்டனர். அதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல் இரண்டு விரல்களைத் தூக்கிக் காண்பித்தான் சிறுவன். ஓ, இரண்டு கோடியா என்றார்கள். வீட்டிற்கு வியப்புடன் ஓடிவந்தான் சிறுவன். ஒரே கல்லுக்கு இவ்வளவு விலை வேறுபாடுகளா என அப்பாவிடம் கேட்டான். அப்போது அப்பா, மகனே, இதுதான் வாழ்வின் மதிப்பு என்பது. நாம் எங்கே பிறக்கிறோம், எங்கிருந்து வருகிறோம், நம் நிறம் என்ன, நமது பின்புலம் என்ன என்பதெல்லாம் முக்கியமல்ல. நம்மை எப்படி நிலைநாட்டிக் கொள்கிறோம் என்பதே முக்கியம். நம் கையில் எவ்வளவு பணம் இருக்கின்றது என்பது முக்கியமல்ல, நாம் இருக்குமிடத்தில் எவ்வாறு நம்மை வெளிப்படுத்துகிறோம் என்பதே முக்கியம். இதுவே வாழ்வில் வெற்றியைத் தரும் என்ற சிறந்த பாடத்தைக் கற்றுக்கொடுத்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2018, 15:41