இளையோர் உலக நாள் நிகழ்வை உருவாக்கிய புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் இளையோர் உலக நாள் நிகழ்வை உருவாக்கிய புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் 

இமயமாகும் இளமை – இளையோரைக் கவர்ந்த புனித 2ம் ஜான்பால்

இவ்வுலகிற்கு மகிழ்வையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் பணியை, திருஅவை இளையோரிடம் ஒப்படைக்கிறது. மீட்பு தரும் நற்செய்தியை, உலகெங்கும் பறைசாற்றச் செல்லுங்கள். அதை மகிழ்வுடன் செய்யுங்கள். - புனித திருத்தந்தை 2ம் ஜான்பால்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

1978ம் ஆண்டு, அக்டோபர் 16ம் தேதி, போலந்து நாட்டைச் சேர்ந்த கர்தினால் கரோல் வொய்டீவா (Karol Józef Wojtyła) அவர்கள் திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டார். இவர், 1978ம் ஆண்டு, அக்டோபர் 22ம் தேதி, 2ம் ஜான்பால் என்ற பெயருடன், கத்தோலிக்கத் திருஅவையின் 264வது திருத்தந்தையாக பொறுப்பேற்றார். 2ம் உலகப்போரால் அதிக அளவு சிதைந்திருந்த போலந்து நாட்டில் இளையோருடன் இணைந்து, இளம் அருள்பணியாளர் கரோல் அவர்கள், பல முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டிருந்தார்.

இளையோருடன் தான் கொண்டிருந்த ஈடுபாட்டைப் புதுப்பிக்க எண்ணிய திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், தன் தலைமைப்பணியின் 7வது ஆண்டில், 1985ம் ஆண்டு, உலக இளையோர் நாள் என்ற புதிய முயற்சியை உரோம் நகரில் துவக்கினார். 1987ம் ஆண்டு, ஆர்ஜென்டீனா நாட்டின் தலை நகர் புவனஸ் அயிரஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலக இளையோர் நாள் நிகழ்வை, அவர் தலைமையேற்று நடத்திய வேளையில், 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

1995ம் ஆண்டு, பிலிப்பீன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடிவந்தனர். அன்றைய நிலையில், அந்த எண்ணிக்கை, ஓர் உலகச் சாதனையாகப் பதிவானது. அந்நிகழ்வில் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் இளையோரிடம் வழங்கிய அறிவுரையின் ஒரு சில வரிகள் இதோ:

"இன்றைய உலகின் கவலைகள் இளையோரை அதிகம் பாதிக்கின்றன. எனவே, உங்களைப்போன்ற இளையோர், நம்பிக்கையிழந்து, விரக்தியடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இத்தகையைச் சூழலில், இவ்வுலகிற்கு மகிழ்வையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் பணியை, திருஅவை உங்களிடம் ஒப்படைக்கிறது. மீட்பு தரும் நற்செய்தியை, உலகெங்கும் பறைசாற்றச் செல்லுங்கள். அதை மகிழ்வுடன் செய்யுங்கள். விரக்தியில் விழுவதற்கு அடிக்கடி சோதிக்கப்படும் உலகிற்கு நம்பிக்கை ஊட்டுங்கள். விசுவாசத்தை இழப்பது ஒன்றே விதி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சமுதாயத்திற்கு, விசுவாசம் ஊட்டுங்கள். கட்டுக்கடங்காத சுயநலத்தைச் சொல்லித்தரும் இவ்வுலகிற்கு அன்பைச் சொல்லித்தாருங்கள்."

திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்த வேளையில், 9 நாடுகளில், இளையோர் நாள் நிகழ்வுகளை முன்னின்று நடத்தியுள்ளார். அவர், திருஅவையின் தலைமைப் பொறுப்பை, 1978ம் ஆண்டு, அக்டோபர் 22ம் தேதி, ஏற்றதால், அந்நாளை, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 October 2018, 16:08