தேடுதல்

பெண் ஒருவர் இயந்திரமயமாக்கப்பட்ட ரிக்சா ஓட்டுதல் பெண் ஒருவர் இயந்திரமயமாக்கப்பட்ட ரிக்சா ஓட்டுதல் 

இமயமாகும் இளமை – மனதில் துணிவிருந்தால் மலையும் வழிவிடும்

அவர் சாலையில் அமர்ந்து தர்மம் கேட்டபோது, அவருக்கு தர்மம் கொடுத்தவர்கள், இப்போது அவரது ரிக்சாவில் ஏறி பயணம் செய்கின்றனர் என்று ரோஜினா அவர்கள் பெருமையோடு கூறுகிறார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

அக்டோபர் மாதத் துவக்கத்தில், பிபிசி தமிழ் வலைத்தளத்தில் ஒரு காணொளிச் செய்தி வெளியாகியிருந்தது. பங்களாதேஷ் நாட்டின் டாக்கா நகரில் ரிக்சா ஓட்டி வாழும் ரோஜினா பேகம் என்ற இளம் தாயைக் குறித்த காணொளிச் செய்தி அது. இக்காணொளியின் ஆரம்பத்தில், ஒரு சேரியின் குறுகலான வீதியிலிருந்து, சாலைக்கு வந்து சேரும் ரோஜினா அவர்களைக் காண்கிறோம். போலியோ நோயினால் இரு கால்களும் பாதிக்கப்பட்டதால், தரையில் அமர்ந்தபடியே நகர்ந்து வரும் இளம் தாய், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ரிக்சாவில் ஏறி, ஓட்டுநர் இருக்கையில் அமர்கிறார். அவருடன் 'காமிரா'வும் பயணிக்கிறது. ரோஜினா தன் கதையைக் கூறுகிறார்.

சிறு வயதில், ரோஜினா பேகம் அவர்களைத் தாக்கிய போலியோ நோயினால் இரு கால்களும் பாதிக்கப்பட்டு, எந்த வேலையும் செய்ய இயலாமல், சாலைகளில் அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்தார். பள்ளியில் சேர்க்கப்பட்ட இரு குழந்தைகளையும், மற்ற குழந்தைகள், 'பிச்சைக்காரியின் பிள்ளைகள்' என்று கேலி செய்ததால், அவர்கள் இருவரும் பள்ளிக்குச் செல்ல மறுத்தனர். இதை அறிந்த ரோஜினா அவர்கள், வேதனை அடைந்தார். ஏதாவது ஒரு வேலை செய்து பிழைக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.

அவ்வேளையில், டாக்கா நகரில், இயந்திரம் பொருத்தப்பட்ட ரிக்சா அறிமுகமானது. பெரும் முயற்சி எடுத்து, பணம் சேர்த்து, ரோஜினா அவர்கள் ஒரு ரிக்சாவை வாங்கி, அதை ஓட்டப் பழகினார். முதலில் அவரது ரிக்சாவில் ஏற தங்கியவர்கள், பின்னர், பயணம் செய்தனர். அவர் சாலையில் அமர்ந்து தர்மம் கேட்டபோது, அவருக்கு தர்மம் கொடுத்தவர்கள், இப்போது அவரது ரிக்சாவில் ஏறி பயணம் செய்கின்றனர் என்று ரோஜினா அவர்கள் பெருமையோடு கூறுகிறார்.

"இப்போது, ஒரு நாளில், 200 அல்லது, 250 ரூபாய் சம்பாதிக்கிறேன். நான், என் மகள், மகன் மூவருக்கும் இது போதும். அதைவிட முக்கியமாக, என் பிள்ளைகள் இருவரும் இப்போது, பள்ளியில் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்" என்று, இளம்தாய் ரோஜினா பேகம், இக்காணொளியின் இறுதியில் புன்சிரிப்புடன் கூறுகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக ரிக்சா ஒட்டி வாழ்ந்துவரும் இளம்தாய் ரோஜினா அவர்கள், மாலை வகுப்புக்களில் சேர்ந்து, எழுத, படிக்க கற்று வருகிறார்.

மனதில் துணிவிருந்தால், மலையும் வழிவிடும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2018, 15:13