"நாம் ஒருங்கிணைந்து பேசுகிறோம்" என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற இளையோர் சந்திப்பில் உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் "நாம் ஒருங்கிணைந்து பேசுகிறோம்" என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற இளையோர் சந்திப்பில் உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

இமயமாகும் இளமை - வரலாற்றை முன்னோக்கி நடத்தும் இளையோர்

"சிறுவரும், இளையோரும் தயக்கமின்றி உண்மை பேசுவர் என்பதால், அவர்கள் வழியே, இறைவன், வரலாற்றை முன்னோக்கி நடத்திச் சென்றார்" - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

இவ்வாண்டு, மார்ச் 19ம் தேதி முதல், 24ம் தேதி முடிய, உரோம் நகரில் ஒரு முக்கிய சந்திப்பு நிகழ்ந்தது. உலகின் 5 கண்டங்களில் வாழும் இளையோரின் பிரதிநிதிகளாக, 300க்கும் அதிகமான இளையோர், இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவர், மற்றும், பிற மதங்களைச் சார்ந்த சில இளையோரும், இச்சந்திப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். இச்சந்திப்பில், மாற்றுத்திறன் கொண்ட இளையோரும் கலந்துகொண்டனர். அக்டோபர் 3, இப்புதனன்று, இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் துவங்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு ஒரு தயாரிப்பாக, இச்சந்திப்பு நடைபெற்றது. "நாம் ஒருங்கிணைந்து பேசுகிறோம்" (“We talk together”) என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற இச்சந்திப்பில் கலந்துகொண்டோரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 19ம் தேதி காலையில் சந்தித்து வாழ்த்தினார்.

"இங்கு கூடியிருக்கும் உங்களையும், இன்னும் உலகின் பல நாடுகளிலிருந்து கணணி வலைத்தொடர்புகள் வழியே இச்சந்திப்பில் பங்கேற்கும் 15,340 இளையோரையும் நான் வாழ்த்துகிறேன்" என்று திருத்தந்தை தன் உரையைத் துவக்கினார். இதைத் தொடர்ந்து, அவர் இளையோரிடம் ஒரு முக்கிய விண்ணப்பத்தை விடுத்தார்:

"அச்சமின்றி பேசுங்கள். நாம் துணிவுடன் பேசும்போது, ஒரு சிலர் பாதிக்கப்படலாம். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, உண்மையைத் தேடி, முன்னேறிச் செல்வோம். பிறர் கூறுவதை, பணிவுடன் கேட்போம். இங்குள்ள ஒவ்வொருவருக்கும், துணிவுடன் பேசும் உரிமை உள்ளது."

இந்த விண்ணப்பத்துடன் தன் உரையைத் துவக்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விவிலியத்திலும், திருஅவை வரலாற்றிலும், இளையோரின் வழியே, இறைவன் பேசினார் என்பதை, எடுத்துக்காட்டுகளுடன் குறிப்பிட்டார்:

"கடவுள், மிக இளையவர்கள் வழியே பேச விழைந்தார். எடுத்துக்காட்டாக, சாமுவேல், தாவீது, தானியேல். 'ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்த' (1 சாமு.3:1) காலத்தில், ஆண்டவர், சிறுவன் சாமுவேல் வழியே மக்களோடு பேசத் துவங்கினார். சிறுவரும், இளையோரும் தயக்கமின்றி உண்மை பேசுவர் என்பதால், அவர்கள் வழியே, இறைவன், வரலாற்றை முன்னோக்கி நடத்திச் சென்றார்" என்று திருத்தந்தை இளையோரிடம் கூறினார்.

இந்த தயாரிப்பு கூட்டத்தின் வழியே இளையோர் துணிவுடன் வெளியிட்ட உண்மைகள், உலக ஆயர்கள் மாமன்றத்தில் ஓங்கி ஒலிக்கவேண்டும், அவ்வுண்மைகளுக்கு திருஅவைத் தலைவர்கள் கவனமாகச் செவிமடுக்கவேண்டும் என்பவை, இம்மாமன்றத்தின் துவக்கத்தில் நாம் எழுப்பும் வேண்டுதல்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2018, 14:52