முதிய தம்பதியர் இணைந்து..... முதிய தம்பதியர் இணைந்து..... 

இமயமாகும் இளமை.. : அன்பில் நிலைத்திருக்க, பணம், புகழ் தேவையில்லை

தனக்காக சொத்து சுகத்தையெல்லாம் துறந்து வந்தவருக்காக, 28 ஆண்டுகள் கண்ணீருடன் காத்திருந்த மனைவி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இலங்கையில் கூத்துப் பட்டறை கலைஞராக வலம் வந்தவர், 27 வயது விஜயா.  இனக்கலவரம் காரணமாக, தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து, தனக்கு தெரிந்த நாட்டியத்தை தெருவில் ஆடி, அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்துவந்தார். அவர் திருப்பூர் நாச்சிபாளையத்தில் நடனமாடியபோது, 32 வயது சுப்பிரமணியத்திற்கும், விஜயாவிற்கும் பிடித்துப்போக, செல்வ வளமிக்க சுப்பிரமணியம் அவர்கள், வீட்டில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. சொத்தையெல்லாம் துறந்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி, விஜயாவை திருமணம் செய்து கொண்டார் சுப்பிரமணியம். தனக்கு தெரிந்த ஆடல் கலையை கணவருக்கு கற்றுக்கொடுத்தார் விஜயா. இருவரும் சேர்ந்து ஊர் ஊராக போய் நடனமாடி, அதில் வரும் வருமானத்தில், ஐந்து ஆண்டுகள், மகிழ்வாக, குடும்பம் நடத்தினர். குழந்தைகள் இல்லை. ஓர் ஊரில் ஆடிவிட்டு, அந்த களைப்போடு, இருவரும் தெருவில் படுத்திருக்க, அவ்வழியே, போதையில் வந்த ஒருவர், விஜயாவை அடையும் நோக்கத்தோடு அவரை நெருங்கினார். விஜயா கூச்சலிட, தன் மனைவியைக் காப்பாற்றும் நோக்கத்தில் சுப்பிரமணியம் அவர்கள், அருகில் இருந்து கல்லை எடுத்து, குடிகாரர் தலையில் தாக்க, அடுத்த சில நிமிடங்களில், அவர், சுருண்டு விழுந்து இறந்தார்.

நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டாலும், காவல்துறையோ, கணவனும் மனைவியும் சேர்ந்து, ஐநுாறு ரூபாய் வழிப்பறி செய்யும் நோக்கத்தோடு இளைஞர் ஒருவரை கொலை செய்ததாக இருவரையும் கைது செய்தது. வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. ஏன் கல்லைத்துாக்கி போட்டார்? என்று ஒரு கேள்வியே எழவில்லை. எங்கே கணவனை சட்டம் தனியாக பிரித்து சிறையில் போட்டுவிடுமோ, என நினைத்து, நானும் சேர்ந்துதான் கல்லைத் துாக்கி போட்டேன் எனறார் விஜயா. இதன் காரணமாக இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறைக்குள் போகும்போது சுப்பிரமணியத்திற்கு வயது 37 விஜயாவிற்கு வயது 32.

ஒரு நடைப்பிணமாகவே சிறையில் இருபத்து மூன்று வருடங்கள் இருந்த விஜயாவைப்பற்றி ஒரு வழக்கறிஞர் வெளி  உலகத்திற்கு விஷயத்தை கொண்டு வந்ததன் எதிரொலியாக, கடந்த 2013ம் ஆண்டில், விஜயா விடுதலை செய்யப்பட்டார். இளமை தொலைந்து, முதுமையும் நோயும் வாட்டிய சூழலில் வெளிவந்த விஜயாவை, வேலுார், தஞ்சம் முதியோர் இல்லம், தஞ்சம் கொடுத்து பார்த்துக் கொண்டது. ஐந்து ஆண்டுகள் கடந்து, இவ்வாண்டு, அக்டோபர் 6ம் தேதி விடுதலை செய்யப்பட்டார் சுப்பிரமணியம். இளைஞராக உள்ளே சென்ற சுப்பிரமணியம், 28 ஆண்டுகளுக்குப்பின்,  65 வயது முதியவராக வெளியே வந்தார். மனைவியை முதியோர் இல்லத்தில் சந்தித்தார். இருவரின் கண்களில் இருந்தும் தாரை தாரையாக கண்ணீர்.

முதியோர் இல்லத்திலிருந்த அனைவரிடமும், “எல்லோருக்கும் நன்றி என் சொந்த ஊருக்கு போறேன் அங்கே போய் எப்படியும் பிழைத்துக் கொள்வேன். இனி சாகிறவரை என் விஜயாவை நான் பார்த்துக்குவேன். அவளும் என்னைப் பார்த்துக்கொள்வாள்” என்று சுப்பிரமணியம் கூற, ஒருவர் கையை மற்றவர் பிடித்தபடி, மிடுக்குடன் கிளம்பிச் சென்றனர் இருவரும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2018, 14:32