தேடுதல்

இந்திய தேசிய கொடியுடன் இந்திய தேசிய கொடியுடன் 

இமயமாகும் இளமை : தனித் தமிழில் கட்டுரை எழுதுவோருக்கு பரிசு

‘சிவமும் பிள்ளையும், இல்லாவிட்டால் இந்தப் பாரதி வெறும் குருடன்’ என்று பாரதி புகழ்ந்த இருகண்கள், வ.உ.சி. என்ற கப்பலோட்டிய தமிழனும், சுப்பிரமணிய சிவாவும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

1884ம் ஆண்டு, அக்டோபர் 4ம் தேதி, வத்தலகுண்டு எனுமிடத்தில் பிறந்த சுப்பிரமணிய சிவா அவர்கள், 1908ம் ஆண்டு, வ.உ.சிதம்பரம் அவர்களுடன் இணைந்து, தேச விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்தார். வீர உரைகள் ஆற்றிய சிவா, வ.உ.சி. ஆகியோர், கைதாயினர். ‘தலைவர்களை விடுதலை செய்’ என்று மக்கள் முதன்முதலாக அரசியல் வேலைநிறுத்தம் செய்தனர். 1908ம் ஆண்டில் வ.உ.சி. அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சுப்பிரமணிய சிவா அவர்களுக்கு 10 வருடக் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டன. விடுதலையடைந்த பின், 1921ம் ஆண்டில் செட்டிநாட்டுக் காரைக்குடியில், பாரதமாதா ஆசிரமத்தை நிறுவினார், சுப்பிரமணிய சிவா. 1921ம் ஆண்டு, நவம்பர் 17ம் தேதி மீண்டும் கைதானார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் விடுதலை பெற்று, பாரதமாதா ஆசிரமத்தை உயிர்ப்பித்தார். தனித் தமிழில் கட்டுரை எழுதுவோருக்கு 5 ரூபாய் பரிசு என்று 1915லேயே அறிவித்த தனித் தமிழ்ப் பற்றாளர் இவர். ‘ஒன்று எங்கள் சாதியே’ என்று கூறிய திருமூலர் வழியில் நடந்தவர் இவர். எந்த நேரமும், பாரத விடுதலை, பாரத மாதா வழிபாடு என்று, வாழ்ந்த அப்பழுக்கற்ற துறவி, சுப்பிரமணிய சிவா. 1925ம் ஆண்டில், மதுரையிலிருந்து சுந்தரபாரதி என்ற சீடருடன் புறப்பட்டு, பாப்பாரப்பட்டி நண்பர்களைக் காணவந்து, அடுத்த நாளே, அதாவது, ஜூலை மாதம் 23ம் தேதி, அதிகாலை 5 மணிக்கு உயிரை நீத்தார், சுப்பிரமணிய சிவா. தருமபுரியை அடுத்த பாப்பாரப்பட்டியில் இந்தத் தூய, வீரத்துறவி சிவா அவர்களின் சமாதி உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2018, 15:27