தேடுதல்

Vatican News
கால் பந்தாட்டம் கால் பந்தாட்டம்  (ANSA)

இமயமாகும் இளமை : தன்னையே அழிக்கும் பொறாமை

பொறாமை உடை‌யவரைத் துன்புறுத்த அவரிடம் உள்ள பொறாமைக் குணம் ஒன்றே போதும். பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும், அப்பொறாமை அவர்க்குத் தவறாது தீமை செய்துவிடும் (குறள் 165)

மேரி தெரேசா – வத்திக்கான்

ஒரு நாள் அன்னபூரணி என்ற ஆசிரியர், தன் 12ம் வகுப்பு மாணவர்களைப் பார்த்து, ‘பொறாமை’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதப் பணித்தார். கலையரசன் என்ற மாணவன் இவ்வாறு கட்டுரை வரைந்தான். ‘பொறாமை’ என்னுடையது. ஏனெனில் அதை நானே ஏற்படுத்திக் கொண்டேன். நானே ஒருவனைப் பற்றிப் பொறாமைப்படுகிறேன். தொடர்ந்து அவனைப் பற்றியே பொறாமைப்படுகிறேன். சென்ற ஆண்டு அழகேசன் என்ற மாணவனைப் பார்த்து பொறாமைப்பட்டேன். அவன் கால்பந்தாட்டப் போட்டித் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவன் என் தோளைத் தொட்டாலே, என் பொறாமை ஒருபடி அதிகரிக்கும். அவன் வெற்றிபெற்ற போதெல்லாம், நான் அவனைத் தூற்றினேன். அவனைப் பார்த்தாலே ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. இறுதியாக அவனை வெறுத்தேன். ஆனால் அழகேசன் என்னைப் பார்த்துச் சிரிப்பான். இயல்பாகப் பேசுவான். உதவி செய்ய முன்வருவான். நான் தவறுசெய்து தலைமை ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டபோது, அவன்தான் என்னைக் காப்பாற்றினான். நான் பொறாமைப்படுவதே அழகேசனுக்குத் தெரியாது. ஒரு நாள் எனது மனம், ”என்ன முட்டாள்தனம் செய்கிறாய், நீ வெறுக்கிறாய், ஆனால் அவன் மகிழ்வாக இருக்கிறான். நீதான் பொறாமைப்பட்டுக் கொண்டிருக்கிறாய்” என்று சொன்னது. அதற்குப்பின் நான் படிப்படியாக மாறினேன். அழகேசனும், நானும் நல்ல நண்பர்களாகப் பழகினோம். ஆண்டு இறுதித் தேர்வில் நான் முதல் மதிப்பெண் பெற்றேன். அவன் எனக்கு மலர் கொடுத்து பாராட்டினான். நானும் அவனுக்கு இனிப்பு கொடுத்தேன். இவ்வாறு கட்டுரையை நிறைவு செய்திருந்தான், மாணவன் கலையரசன்.   

இல்லாமை, கல்லாமை, அறியாமை போன்ற துன்பம் தரும் ஆமைகளில், பெரும் தீங்கை தரும் ஆமை பொறாமையாகும்.

25 October 2018, 13:47