அர்ஜென்டீனாவின் புவனஸ் அயிரஸ் நகரில் நடந்த இளையோர் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டீனாவின் புவனஸ் அயிரஸ் நகரில் நடந்த இளையோர் ஒலிம்பிக் போட்டி 

இமயமாகும் இளமை.... : விவசாய கூலி தொழிலாளியின் மகன் சாதனை

தமிழகத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளியின் மகன் பிரவீன் அவர்கள், இளையோர் ஒலிம்பிக் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்று, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அர்ஜென்டீனாவின் புவனஸ் அயிரஸ் நகரில், இளையோர் ஒலிம்பிக் தொடர் இம்மாதம் 6ம் தேதி முதல், 18ம் தேதி வரை இடம்பெற்றது. இதில், இரு நிலைகளாக நடத்தப்பட்ட ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ எனப்படும் மும்முறை தாண்டுதல் போட்டியில், இந்திய வீரர் பிரவீன் சித்ரவேல் அவர்கள், ஒட்டு மொத்தமாக 31.52 மீட்டர் தூரம் தாண்டி, வெண்கலப் பதக்கம் வென்றார். அனைத்துலக அளவில் பிரவீன் அவர்கள் வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.

17 வயதான பிரவீன் சித்ரவேல் அவர்கள், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியின் மகன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். பிரவீன் அவர்களின் தந்தைக்குக் கிடைக்கும் வருமானம், தடகள பயிற்சிக்கு போதுமானதாக இல்லாததால், ஒரு சிலரின் உதவியுடன் அவர் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

பள்ளிகளுக்கு இடையில், இவ்வாண்டு நடத்தப்பட்ட கேலோ (Khelo) இந்திய விளையாட்டில்,  பிரவீன் அவர்கள் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் கோவையில் நடைபெற்ற தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றியிருந்தார். கல்லூரி ஒன்றில் பி.ஏ. படித்து வரும் பிரவீன் அவர்கள், தற்போது இந்திய விளையாட்டு ஆணையத்தில் பணியாற்றி வரும் இந்திரா சுரேஷ் அவர்களிடம், நாகர்கோவிலில், பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2018, 16:15