மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும்  பள்ளி மாணவர்கள் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் பள்ளி மாணவர்கள் 

இமயமாகும் இளமை : முன்னாள் மாணவர்களின் நன்றிக் கடன்

அரசுப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்தில், இந்நாள் மாணவர்களுக்காக, கட்டணமில்லா வாகன வசதியை துவக்கி வைத்துள்ளனர், முன்னாள் மாணவர்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தாங்கள் பயின்ற பள்ளியை மறவாமல், தங்கள் ஊரின் வளர்ச்சிக்கு உதவிய, வெளிநாட்டில் வாழும் அத்திவெட்டி இளைஞர்களின் செயல், மற்றவர்களுக்கு உதாரணமாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர் அருகேயுள்ள அத்திவெட்டி கிராம மக்கள், இளைஞர்கள், மற்றும், அயல்நாட்டில் பணிபுரிவோர் இணைந்து “ஒற்றுமையே நம்முடைய வெற்றி” எனும், தன்னார்வ சேவை அமைப்பை துவங்கியுள்ளனர். இந்த அமைப்பின் வழியாக திரட்டிய நிதியில், பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கத்தில், ரூ.4.20 இலட்சம் மதிப்பீட்டில், மாணவர்களுக்காக, கட்டணமில்லா வாகன வசதியை துவக்கி வைத்துள்ளனர். மேலும், இவ்வாகனத்தின் நிர்வாகம், ஒட்டுநர் ஊதியம், மற்றும், பராமரிப்பு செலவுகளையும், இவ்வமைப்பே ஏற்று நடத்தவும் முன்வந்துள்ளனர். இவ்வாகனம் வாங்கப்பட்ட பின், இதுவரை 40 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் உள்ள அத்திவெட்டி, பிச்சினிக்காடு, மறவக்காடு, இளங்காடு, பழவேனிற்காடு பகுதி மாணவர்கள், பள்ளிக்கு சரியான நேரத்திற்கு செல்ல, வாகன வசதி இல்லாத நிலையில் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்த காரணத்தால், அரசு பள்ளிக்கு செல்வதை தவிர்த்தும், தனியார் பள்ளிகளை நாடியும் சென்ற மாணவர்களை, மீண்டும் அரசுப்பள்ளிகளுக்கே வரவழைக்கும் நோக்கத்தில் இளைஞர்கள் செயல்பட்டுள்ளனர் என்பது பாராட்டத்தக்கது. தமிழ்நாட்டிற்கே முன்னுதாரணமாக விளங்கும் இத்திட்டத்தை, பெற்றோர்களும் மாணவர்களும் வரவேற்றுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2018, 14:49