பூக்களுடன் முதியோர் பூக்களுடன் முதியோர் 

இமயமாகும் இளமை : அன்பு இருக்குமிடத்தில் அனைத்தும் இருக்கும்

அன்பு இருக்குமிடத்தில் செல்வமும் வெற்றியும் நிறைந்திருந்திருக்கும்

மேரி தெரேசா - வத்திக்கான்

அன்று, ஒரு பெண் தன் வீட்டிலிருந்து வெளியே வந்தார். வீட்டிற்கு வெளியே முற்றத்தில் மூன்று வயது முதிர்ந்தவர்கள் நீண்ட வெள்ளைத் தாடியுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாகத் தெரிந்தனர். எனவே அப்பெண் அவர்களிடம், உங்களை யார் என எனக்குத் தெரியாது. ஆனால், நீங்கள் பசியால் மிகவும் களைத்திருக்கிறீர்கள். ஆதலால் எங்கள் வீட்டுக்குள் வந்து முதலில் சாப்பிட்டு களைப்பைப் போக்குங்கள் என்றார். அதற்கு அந்த முதியவர்கள், இந்த வீட்டுத் தலைவர் உள்ளே இருக்கிறாரா எனக் கேட்டார்கள். இல்லை என அப்பெண் சொல்ல, அப்படியானால் நாங்கள் வீட்டுக்குள் வர இயலாது என்று அம்மூவரும் சொல்லிவிட்டனர். மாலையில் கணவர் வீடு திரும்பியதும் நடந்ததைச் சொன்னார் மனைவி. அவர்களை உள்ளே வரச்சொல் என கணவர் சொல்ல, அப்பெண்ணும் அம்மூவரையும் வீட்டிற்குள் அழைத்தார். அதற்கு  அவர்கள், நாங்கள் மூவரும் ஒன்றாகச் செல்வதில்லை என்றனர். அதற்குக் காரணம் என்னவெனக் கேட்டார் அப்பெண். அப்போது ஒரு முதியவர், தன்னை செல்வம் என்றும், அடுத்தவரைச் சுட்டிக்காட்டி இவர் வெற்றி என்றும், மூன்றாமவரைக் காட்டி இவர் அன்பு என்றும் அறிமுகப்படுத்தினார். அதைக் கேட்ட அப்பெண் மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் சென்று, தன் கணவரிடம் அம்மூவர் பற்றியும் சொன்னார். சரி அப்படியானால் செல்வத்தை வரவழைப்போம் என்றார் கணவர். இல்லை, வெற்றியை வரவழைப்போம் என்றார் மனைவி. இந்த உரையாடலை வீட்டின் ஒரு மூலையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அவர்களின் மகள் ஓடிவந்து, அன்பை அழைப்பது நல்லதல்லவா? அப்போது நம் வீடு முழுவதும் அன்பால் நிறைந்திருக்கும் என்றாள். இந்த ஆலோசனையை ஏற்ற கணவர், சரி போய் அன்பை நம் வீட்டு விருந்தாளியாக அழைத்து வா என்றார். அப்பெண்ணும் வெளியே சென்று, உங்களில் அன்பு யாரோ அவர் எம் வீட்டிற்கு விருந்தினராக வரலாம் என்றார். அன்பு முதலில் நடக்கத் தொடங்கியதும், மற்ற இருவரும் அவரைப் பின்தொடர்ந்தனர். அப்பெண் வியந்து அன்பைத்தானே நான் கூப்பிட்டேன் என்று கேட்க, நீ, செல்வத்தையோ வெற்றியையோ அழைத்திருந்தால் யாராவது ஒருவர்தான் வந்திருப்போம். ஆனால் அன்பை அழைத்ததால் நாங்கள் அவரைப் பின்தொடர்ந்தோம். அன்பு செல்லுமிடத்திற்கு நாங்கள் இருவருமே செல்வோம் என்றார்கள்.     

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2018, 12:53