தேடுதல்

Vatican News
இந்திய பள்ளி மாணவர்கள் இந்திய பள்ளி மாணவர்கள்  (AFP or licensors)

இமயமாகும் இளமை.........: மண நாளன்று, பள்ளி வளர்ச்சிக்கு உதவி

திருமணம் முடிந்ததும், கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று, பள்ளி வளர்ச்சிக்கு தங்களால் முடிந்த நிதி உதவியை அளித்த இளம் தம்பதியர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நெல்லை மாவட்ட மானூர் அருகே இருக்கிறது, கருவநல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் நீண்ட பாரம்பரியம் கொண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பதைக் காட்டிலும், ஆங்கில வழிக் கல்வி நிலையங்களில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டும் போக்கு, குக்கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. அதனால், கருவநல்லூர் பள்ளியில், குழந்தைகளே இல்லாமல் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதைக் கண்ட கிராமத்து இளையோர் ஒன்றிணைந்து, பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரையிலும் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்க நடவடிக்கை எடுத்ததுடன், கிராமத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும், வெளியூர் பள்ளிகளுக்கு அனுப்பாமல், இதே பள்ளியில் சேர்க்க வேண்டும் என முடிவும் எடுத்தனர். அதற்கு ஏற்ற வகையில், பள்ளியில், கம்ப்யூட்டர் வசதி, ஸ்மார்ட் வகுப்பறை, தரமான இருக்கை வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளும், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் செய்து முடிக்கப்பட்டன. இளையோர், மற்றும், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினரின் முயற்சியால், அந்த தொடக்கப் பள்ளியில் தற்போது 60-க்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். கருவநல்லூர் கிராம மக்களின் சிந்தனையில், பள்ளியின் வளர்ச்சி நிறைந்துள்ளது. கருவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தையல் தொழிலாளியான வேல்குமாருக்கும், உஷாவுக்கும், பெரியோர் முன்னிலையில், தமிழ் முறைப்படி திருமணம் நடந்து முடிந்ததும், மணமக்கள் இருவரும், மணக்கோலத்திலேயே, நேராக கருவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குச் சென்று, பள்ளியின் வளர்ச்சிக்காக, 5001 ரூபாயை அன்பளிப்பாக அளித்தார்கள். திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி, ஊதாரித்தனமாக செலவு செய்பவர்களுக்கு மத்தியில், கிராமத்தில் உள்ள பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்கிற சிந்தனையை விதைத்துள்ள மணமக்களை, கிராமத்தினர் பாராட்டினர்.

17 October 2018, 16:18