சோதனை பதிப்பு

Cerca

Vatican News
இயற்கை பாதுகாப்பில் இந்திய மாணவர்கள் இந்திய மாணவர்கள்  (AFP or licensors)

இமயமாகும் இளமை.......: பெண்கள் முன்னேற்றத்தில் சகோதரி நிவேதிதா

பாரதப் பெண்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டு செயல்பட்ட அயர்லாந்து பெண்மணியே, மகாகவி பாரதியின் குருவாகவும் திகழ்ந்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

1867ம் ஆண்டு, அக்டோபர் 28ம் தேதி, அயர்லாந்தில் பிறந்த மார்கரெட் எலிசபெத் நோபிள் (Margaret Elizabeth Noble) என்பவர், 1895ம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்து, அவருடைய கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு, 1898ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி, கல்கத்தா நகருக்கு வந்தார். 1898ம் ஆண்டு, மார்ச் 28ம் தேதி, பிரம்மச்சரிய தீட்சைக் கொடுக்கும்போது, விவேகானந்தர், தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு எனும் பொருள்படும் ‘நிவேதிதா’ (Nivedita) என்ற பெயரை அளித்தார். தம் இளம் வயதிலேயே, ஓர் ஆசிரியையாகப் பணியாற்றி இருந்தார், மார்கரெட். 1898, நவம்பர் 13ம் நாள், கல்கத்தாவின்  போஸ்பாரா தெருவில் அமைந்துள்ள வீட்டில் பெண்களுக்கென பள்ளியொன்று திறக்கப்பட்டது. காளி பூஜையன்று அன்னை சாரதா தேவி அவர்கள், இப்பள்ளியைத் திறந்து வைத்தார். கல்கத்தா மக்களைத் தாக்கிய ’பிளேக்’ எனும் கொள்ளை நோயின் நிவாரணப் பணி செய்ய அமைத்த குழுவிற்கு நிவேதிதாவை தலைவியாக்கினார், சுவாமி விவேகானந்தர். நோயாளிகளைப் பராமரிக்கவும், நகரைத் தூய்மைப் படுத்தவும், இளையோர் குழு ஒன்றை அமைத்து தொண்டாற்றினார், நிவேதிதா.

1902ம் ஆண்டு, டிசம்பர் 19ம் தேதி, சென்னைக்கு வந்த சகோதரி நிவேதிதா, இந்து இளைஞர் சங்கம் சார்பில் பச்சையப்பா அரங்கத்தில், டிசம்பர் 20ம் தேதி, ’இந்தியாவின் ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். சென்னையில் பல்வேறு உரையாடல், சொற்பொழிவுகள் மற்றும் பேட்டிகளிலும் கலந்து கொண்டார்.

மகாகவி பாரதியார், இவரை, தமது குருவாகக் குறிப்பிட்டுள்ளார். 1908ம் ஆண்டு பாரதியார் எழுதிய ’ஸ்வதேச கீதங்கள்’ முதல் பகுதியை, நிவேதிதாவுக்கு சமர்ப்பணம் செய்து எழுதியிருந்தார். 1909ம் ஆண்டு ’’ஸ்வதேச கீதங்கள்’ நூலின் இரண்டாம் பாகமான ’ஜன்ம பூமி’யையும் நிவேதிதாவுக்கு அவர் சமர்ப்பணம் செய்தார்.

சகோதரி நிவேதிதா, அக்டோபர் 7ம் நாள் எழுதிவைத்த உயிலில், தனது சொத்துக்களையும் நூல்களையும் இந்தியப் பெண்களுக்கு தேசியக் கல்வி வழங்க அளித்ததோடு, தன் சொத்துக்களுக்கு, பேலூர் மடத்தைச் சார்ந்த மூத்த துறவிகளை அறங்காவலர்களாகவும் ஆக்கினார். 1911ம் ஆண்டு, அக்டோபர் 13ம் தேதி, சகோதரி நிவேதிதா காலமானார்.

10 October 2018, 15:51