தேடுதல்

Vatican News
காந்தியும் சுதந்திரப் போராட்ட வீரர்களும் கலை வடிவில் காந்தியும் சுதந்திரப் போராட்ட வீரர்களும் கலை வடிவில்  (AFP or licensors)

இமயமாகும் இளமை : 18 வயதில் விடுதலை இயக்கம் துவக்கிய தமிழர்

தேசப்பற்றால், இளவயதிலேயே போராடத் துவங்கி, பல ஆண்டுகள் சிறைவாசத்திற்குப்பின், சந்நியாசம் பெற்று, ஆசிரமம் அமைத்துக்கொண்டு வாழ்ந்த தேசியவாதி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில், 20,000 போராளிகளை ஒன்று திரட்டி, புரட்சி இயக்கம் ஒன்றை தோற்றுவித்துப் போராடியவர். வாழ்வின் பெரும்பகுதியை இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் நாட்டுச் சிறைகளில் கழித்தவர். வாழ்வின் பிற்பகுதியில் விரக்தியுற்று சந்நியாசம் பெற்று மைசூர் அரசில் நந்தி மலையடிவாரத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு ஸ்ரீ ஓம்காரானந்த சுவாமி என்ற பெயரில் வாழ்ந்து, தனது 88வது வயதில் 1978ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி காலமானவர், நீலகண்ட பிரம்மச்சாரி.

சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் 1889ம் ஆண்டு, டிசம்பர் 4ம் தேதி பிறந்தார் நீலகண்டர். சீர்காழி இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தார். இரகசிய இயக்கமான 'அபினவ பாரத இயக்கம்' என்பதை, 1907ம் ஆண்டில் துவக்கி, இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிர பங்காற்றினார். "சூர்யோதயம்" எனும் பத்திரிகையைத் தொடங்கினார். காங்கிரஸ் கட்சியில் உள்ள தீவிர குணம் படைத்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, பிபின் சந்திரபால், பாரதியார், சிங்காரவேலர் போன்றவர்களுடன் நட்பு கொண்டவர் நீலகண்டர். ஆஷ் துரையைக் கொன்ற வாஞ்சிநானுக்கு துணை நின்றதாக, நீலகண்டரும் கைது செய்யப்பட்டார். அப்போது நீலகண்ட பிரம்மச்சாரியின் வயது 21. நீலகண்டருக்கு ஏழாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிங்காரவேலரின் தொடர்பால், "பொது உடமைக் கட்சியின் துண்டு பிரசுரங்கள் வெளியிட்ட குற்றத்திற்காக 1922ல் பத்து ஆண்டுகள் ரங்கூன் சிறையில் அடைக்கப்பட்டவர், தேசிய விடுதலைப் போராட்ட வீரர் நீலகண்ட பிரம்மசாரி.

05 October 2018, 14:59