தேடுதல்

இந்தியாவின் நிலப்பரப்பில் உயரமான இடத்தில் தேசிய கொடி இந்தியாவின் நிலப்பரப்பில் உயரமான இடத்தில் தேசிய கொடி 

இமயமாகும் இளமை.........: பூ ஒன்று புயலாகியது!

மண்ணை மட்டுமல்ல, மண்ணின் மக்களையும் நேசித்து, சுதந்திர வேட்கையுடன், வீறு கொண்டு போராடிய இளம் அரசி.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மக்கள் விருப்பத்தின்படி ஜான்சியின் அரியணையை அலங்கரித்த இலட்சுமிபாய், தனது 11 மாத கால ஆட்சியில் - ஆம், வெறும் 11 மாத அரசாட்சியில், மக்களின் மனங்கவர்ந்த இராணியாகவே விளங்கினார். எல்லாத் துறைகளிலும் சிறந்த நிர்வாகிகளை நியமித்தார். கடுமையான சட்டங்கள் வழியாக, மக்களின் மனதில் அச்சத்தைப் போக்கினார். கோயில்களுக்கான மானியங்களை மீண்டும் வழங்கினார். மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களது குறைகளைப் போக்கினார். மிகப்பெரிய நூலகத்தை கட்டிய ஜான்சிராணி, பல மொழிகளிலுள்ள நூல்களை மொழிபெயர்க்க வழி செய்தார்.

1858, பிப்ரவரி 22ஆம் தேதி, ஆங்கிலேய ஜெனரல் ஷியூ ரோஸின் படைகள், ஜான்சி கோட்டையை முற்றுகையிட்டு, தாக்கின. வெறித்தாக்குதலுடன், ஜான்சி கோட்டையின் மதில்களைச் சிதைக்க முயன்றது, ஆங்கிலேயப் படை. உயர்ந்த மலைப்பாதைகளுக்கு மேல் கருங்கற்களால் கட்டப்பட்ட 10 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்ட ஜான்சி கோட்டையை இலட்சுமிபாய், மேலும் பலப்படுத்தி யுத்தத்திற்கான வசதிகளுடன் நிர்மாணித்திருந்தார். ஜான்சியின் படைபலம் குறைவு. எனினும் சுதந்திர வேட்கையுடன், வீறு கொண்டு ஆவேசத்துடன் ஜான்சி வீரர்கள் வெள்ளைச் சிப்பாய்களை எதிர்த்தனர்.

இருபதே வயதான இலட்சுமிபாய், ஆணுடை தரித்து, வளர்ப்பு மகன் தாமோதரனை முதுகில் வைத்து, கட்டிக்கொண்டு, குதிரையில் அமர்ந்தபடி, போர் புரிந்தார். ஆவேசத்துடனும், ஆத்திரத்துடனும் தன்னை நெருங்கிய படைத்தளபதி பௌகரை தனது வாளால் வீழ்த்தினார். மிரண்டு போய் நின்றனர், ஆங்கிலேயர்கள். அதே சமயம், இராணியின் முகத்தில் ஒரு குண்டு பாய்ந்தது. தம் இரு புறத்திலும் வந்து கொண்டிருந்த தோழிகளையும், ராமச்சந்திர ராவ், ரகுநாத சிங் முதலிய மெய்க் காவலர்களையும் நோக்கி, “போர்க்களத்தில் நான் வீழ்ந்தால், என் உடலை வெள்ளையர்கள் தீண்டாமல் பாதுகாக்க வேண்டியது உங்களுடைய கடமை. உங்களிடம் கடைசியாக, நான் எதிர்பார்க்கும் உதவியும் அதுதான்” என்றார். அப்போரில், அவர், தேசத்திற்காக உயிர் துறந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2018, 17:03