காந்தி ஜெயந்தியை சிறப்பிக்கும் மாணவர்கள் காந்தி ஜெயந்தியை சிறப்பிக்கும் மாணவர்கள் 

இமயமாகும் இளமை : சமத்துவத்தை விரும்பிய காமராஜர்

“தமிழகத்தில் மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் காமராஜர் அவர்கள் ஆட்சியில் நடந்தது” - தந்தை பெரியார்

மேரி தெரேசா - வத்திக்கான்

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், "காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் துாணாக விளங்கிய கர்மவீரர்" என்று மாற்றுக் கட்சியினராலும் போற்றக்கூடிய வகையில் தன் அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்தை நேர்மையான முறையில் கையாண்டவர். தமிழக வரலாற்றில், இவர் தலைமையில் காங்கிரஸ் ஆண்ட பத்து ஆண்டுகள் ஒரு பொற்காலம் எனப் போற்றப்படுகின்றது. காமராஜர் அவர்கள், பயின்ற பள்ளியில் ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு பிரசாதம் வழங்கப்படும். பிரசாதம் விநியோகிக்கப்படும்போது மாணவர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்று, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் பிரசாதத்தைக் கைநிறையப் பெற்றுக்கொள்வார்கள். பிரசாதத்துக்காக அந்த மாதிரி முண்டியடித்துக்கொண்டு செல்வது காமராஜர் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, ஒரு மூலையில் ஒதுங்கி நின்றார். கடைசியாக மிச்சமிருந்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார். ‘‘எல்லாரும் நிறைய பிரசாதம் வாங்கிக்கொண்டு செல்லும்போது, நீ மட்டும் குறைவாக வாங்கிவந்தது ஏன்’’ என வீட்டில் உள்ளவர்கள் கேட்டனர். ‘‘மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சென்று பிரசாதம் வாங்க எனக்கு விருப்பமில்லை. பள்ளியில் எல்லா மாணவர்களிடமும் ஐந்து காசு வசூலித்தவர்கள், ஒரே மாதிரியாகப் பிரசாதம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு’’ என்றார் காமராஜர். (விகடன்).

காமராஜர் அவர்கள் இறைபதம் அடைந்த நினைவு நாள் அக்டோபர் 2, இச்செவ்வாய். இதே அக்டோபர் 2ம் தேதிதான், அகிம்சை வழியை உலகுக்கு உணர்த்திய மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த நாள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2018, 16:11