தேடுதல்

அக்டோபர் 10, மனநலத்தின் உலக நாள் அக்டோபர் 10, மனநலத்தின் உலக நாள் 

அக்டோபர் 10, மனநலத்தின் உலக நாள்

உலகில், நான்கில் ஒருவர், ஏதாவது ஒரு மனநலக் குறையுடன் வாழ்கின்றனர். இவர்களில் 60 விழுக்காட்டினர் இந்தப் பிரச்சனைக்குத் தேவையான உதவிகளை நாடுவதில்லை - உலக நலவாழ்வு நிறுவனம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

WHO என்றழைக்கப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகில் வாழும் மனிதர்களில், நான்கில் ஒருவர், ஏதாவது ஒருவகையில் மனநலக் குறையுடன் வாழ்கின்றனர் என்றும், இவர்களில் 60 விழுக்காட்டினர் இந்தப் பிரச்சனைக்குத் தேவையான உதவிகளை நாடுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 10, இப்புதனன்று, மனநலத்தின் உலக நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் என்ற உலக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நலவாழ்வு நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

தென் சூடான் முதல், லெஸ்போஸ் தீவில் அமைந்துள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்கள் வரை, மனநலத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமியர், தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை, எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

சிரியா, ஈராக், உக்ரைன் போன்ற நாடுகளில், பல ஆண்டுகளாக நிலவிவரும் போர்ச்சூழலால், வயதில் முதிர்ந்தோர் பலர், தனிமையிலும், விரக்தியிலும் தங்கள் மனநலனை இழந்துள்ளனர் என்று, இவ்வமைப்பினரின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ரோஹிங்கியா இஸ்லாமியர் தங்கியிருக்கும் முகாம்கள், Nauru தீவில் விடுவிக்கப்பட்ட சிறார் படைவீரர், மெக்சிகோவில் காணாமற்போனோரின் குடும்பங்கள் ஆகியவை, எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் மேற்கொண்டுள்ள சில பணிகளால் பயன்பெற்று வருகின்றனர் என்று இவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2018, 16:56