தேடுதல்

ஆசியா பீபியின் கணவர் மற்றும் மகளுடன் திருத்தந்தை - 15/04/2015 ஆசியா பீபியின் கணவர் மற்றும் மகளுடன் திருத்தந்தை - 15/04/2015 

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பீபி விடுதலை

தேவ நிந்தனை என்ற குற்றத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பீபி அவர்களை, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், மரண தண்டனையிலிருந்து விடுதலை செய்து, தீர்ப்பு வழங்கியது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தேவ நிந்தனை என்ற குற்றத்தில், பாகிஸ்தானில், கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2010ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பீபி அவர்களை, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், மரண தண்டனையிலிருந்து விடுதலை செய்து, தீர்ப்பு வழங்கியது.

அக்டோபர் 8ம் தேதி முதல், உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கு விசாரணையின் இறுதியில், அக்டோபர் 31, இப்புதன் காலை, பாகிஸ்தானில் உள்ளூர் நேரம் 9.20 மணிக்கு, ஆசியா பீபி அவர்கள், தேவ நிந்தனை வழக்கில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு  வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, அடிப்படைவாதிகளின் போராட்டம் வெடிக்கும் என்று எதிர்பார்த்துள்ள பாகிஸ்தான் அரசு, கிறிஸ்தவ ஆலயங்கள், அவர்களின் குடியிருப்புகள் அனைத்தையும் சுற்றி பலத்த காவல் எழுப்பியுள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆசியா பீபி அவர்களின் கணவர், ஆஷிக் மாசி அவர்களும், அவரது மூத்த மகள் ஆயிஷாம் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வாண்டு பிப்ரவரி 24ம் தேதி, சந்தித்த வேளையில், திருத்தந்தை, அவர்களுக்கு, தன் செபங்களையும் ஆதரவையும் தெரிவித்தார்.

இந்த தீர்ப்பையடுத்து, ஆசியா பீபியின் கணவர், ஆஷிக் மாசி அவர்களும், அவரது மகள் ஆயிஷாம் அவர்களும் தங்கள் மகிழ்வை வெளியிட்டாலும், தங்கள் குடும்பம் தொடர்ந்து பாகிஸ்தானில் தங்க முடியுமா என்ற அச்சத்தையும் வெளியிட்டனர்.

கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீதியை நிலைநாட்ட தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளும், இன்னும் உலகெங்கிலும் ஆசியா பீபி அவர்களுக்காக எழுப்பப்பட்ட செபங்களும் பலன் தந்துள்ளன என்று, பல மனித உரிமை அமைப்புக்களும், கிறிஸ்தவ அமைப்புக்களும் கூறியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2018, 14:49